Published:Updated:

பண மதிப்பிழப்பு வழக்கின் தீர்ப்பு உணர்த்துவது என்ன... எழும் கேள்விகள் என்னென்ன?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை ( vikatan )

`மத்திய பா.ஜ.க அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை.

பண மதிப்பிழப்பு வழக்கின் தீர்ப்பு உணர்த்துவது என்ன... எழும் கேள்விகள் என்னென்ன?

`மத்திய பா.ஜ.க அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை.

Published:Updated:
பண மதிப்பிழப்பு நடவடிக்கை ( vikatan )

`நாட்டில் ரூ.500, ரூ.1,000 இனி செல்லாது’ என்று 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், இந்தியாவில் கள்ளப்பணமும், கறுப்புப்பணமும் ஒழியும், பயங்கரவாதிகளுக்கு நிதி வருவது நின்றுபோகும் என்றெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், மத்திய அரசின் அந்த நடவடிக்கை, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வங்கிகள், ஏ.டி.எம் வாசல்களில் லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். பல மணி நேரம் காத்துக்கிடந்த நேரத்தில், சிலர் உயிரிழந்த துயரமும் நிகழ்ந்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை
பண மதிப்பிழப்பு நடவடிக்கை
vikatan

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 58 ரிட் மனுக்கள், இடைக்கால மனுக்களை 2016-ம் ஆண்டு, நவம்பர் 15-ம் தேதி அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் விசாரித்தார். அவர், ‘பண மதிப்பிழப்புத் திட்டத்துக்கான அரசின் நோக்கம் பாராட்டும்விதமாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக இருக்கிறது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. இந்த அறிவிப்பின் முறைகள் குறித்து ஆராய்வதற்கு, வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுகிறோம்’ என்று 2016-ம் ஆண்டு, டிசம்பர் 16-ம் தேதி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அதையடுத்து, நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. மனுதாரர் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வாதாடினார். இந்த வழக்கில், ஜனவரி 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம் ஆகிய நான்கு நீதிபதிகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கினர். நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ட்விட்டர்

‘மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்’ என்று பண மதிப்பிழப்புக்கு ஆதரவான தீர்ப்பை நீதிபதி பி.ஆர்.கவாய் வாசித்தார். ‘மத்திய அரசுக்கு ஒரு முன்மொழிவு வந்தால், அதன்மீது முடிவெடுக்கும் செயல்முறையைத் தவறாகக் கருத முடியாது. இந்த நடவடிக்கைக்கான நோக்கமும், அதைக் கொண்டுவந்த வழிமுறைகளும் நியாயமாக இருந்ததைப் பார்க்கிறோம். ஆனாலும், இந்த விவகாரத்தில் இலக்கு எட்டப்பட்டதா, இல்லையா என்பதைப் பார்க்கவேண்டியது அவசியமில்லை’ என்றார் நீதிபதி பி.ஆர்.கவாய்.

இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாகரத்னா, ‘என் கண்ணோட்டத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை சட்ட விரோதமானது. 2016-ம் ஆண்டு இருந்த நிலையை இப்போது திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனாலும், அந்த நடவடிக்கை சட்டத்துக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம். அந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டவிதம் சட்டத்துக்கு எதிரானது. அந்த நடவடிக்கை நல்ல நோக்கத்துக்காகவே கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன் சிறந்த எண்ணம், நல்ல நோக்கம் இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் சட்டத்துக்கு எதிரான செயல்பாடுகளே இங்கு மதிப்பிடப்படுகின்றன’ என்றார்.

பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு

ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியிருப்பதை பா.ஜ.க வரவேற்றிருக்கிறது. இதை ஒரு வெற்றியாக பா.ஜ.க பார்க்கிறது. ஆனால், இந்தத் தீர்ப்பை முழுமையாக ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை அப்போதே எழுப்பின. அந்தக் கேள்விகளை இப்போதும் எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கின்றன. அதாவது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்துவிடுவோம் என்று ஆட்சியாளர்கள் கூறினர். வெளிநாட்டு வங்கிகளிலுள்ள கள்ளப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவந்துவிடுவோம் என்றும், கள்ள நோட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் என்றும் சொன்னார்கள்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு நிதி வருவதற்கு முடிவுகட்டுவோம் என்றதுடன், பொருளாதாரத்தில் பணப் புழக்கத்தைக் குறைத்துவிடுவோம் என்று கூறினார்கள். அவையெல்லாம் நிறைவேறினவா என்று எதிர்க் கட்சிகள் இப்போது கேள்வி எழுப்புகின்றன.

பண மதிப்பிழப்பு
பண மதிப்பிழப்பு

``கள்ள நோட்டு ஒழிந்துவிட்டதா... 2021-ம் ஆண்டில், 21 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அப்படியென்றால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் கள்ளப் பணம் ஒழியவில்லை. பயங்கரவாத நடவடிக்கைகள் ஒழிந்துவிட்டதானவா... 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு, புல்வாமா தாக்குதல் உட்பட எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏராளமாக நடந்திருக்கின்றனவே” என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்கள் இன்னும் மீட்சிபெறவில்லை என்கிறார்கள் சிறு, குறு தொழில்முனைவோர்கள்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் ஆளும் தரப்பிடமிருந்து, இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்கள் இல்லை!