Published:Updated:

இந்து சமய அறநிலையத்துறை Vs தீட்சிதர்கள்... சர்ச்சையும் பின்னணியும்; அடுத்து என்ன?!

சேகர் பாபு

``சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என்பது குறிக்கோள் அல்ல” என்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

இந்து சமய அறநிலையத்துறை Vs தீட்சிதர்கள்... சர்ச்சையும் பின்னணியும்; அடுத்து என்ன?!

``சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என்பது குறிக்கோள் அல்ல” என்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

Published:Updated:
சேகர் பாபு

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்துவருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையால் உருவாக்கப்பட்ட அதிகாரிகள் குழு ஒன்று 7, 8-தேதிகளில் ஆய்வு செய்யவிருப்பதாகக் கடந்த மாதம் 26-ம் தேதி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு, 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டுவருவதாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்குழுவின் ஆய்வுக்கு ஆட்சேபம் தெரிவித்தும் தீட்சிதர்கள் சார்பில் அறநிலையத்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுவதால் இந்தக் கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீட்சிதர்கள்
தீட்சிதர்கள்

இதையடுத்து தீட்சிதர்களின் கடிதத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், ``பல்வேறு தீர்ப்புகளில் சிதம்பரம் நடராஜர் கோயில், பொதுக் கோயில் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்க, வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட கோயில் அலுவல் பணிகளை விசாரிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக அது தடைசெய்யப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தடை உட்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, நடராஜர் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏற விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.

நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில் அரசு எந்த வகையிலும் தலையிடுவதில்லை. அதேவேளையில் இந்தக் கோயில் பொதுக்கோயில் என்பதால் கோயிலின் வரவு, செலவு கணக்கு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரிக்கக் குழு அமைக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு. ஆகையால், வரும் 7, 8-ம் தேதிகளில் கோயிலுக்கு ஆய்வுக்குழுவை அனுப்புவதற்கான நடவடிக்கையைத் திரும்பப் பெறுவதற்கான வழி இல்லை. ஆய்வுப் பணிகளை முடிக்க அதிகாரிகள் குழுவுடன் தீட்சிதர்கள் இணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேகர்பாபு தீட்சிதர்கள்
சேகர்பாபு தீட்சிதர்கள்
Twitter

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிதம்பரம் கோயிலுக்கு 6-6-2022 அன்று சென்றார். குறிப்பாக, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, தங்கள் தரப்பு நிலைப்பாட்டை அமைச்சரிடம் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில், ``அவர்கள் நிலைப்பாட்டை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். காலம், நீதிமன்றம் அதற்கு உகந்த தீர்ப்பை விரைவில் வழங்கும். தீட்சிதர்களோடு கலந்து பேசியிருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறை ஏற்கெனவே 7, 8 ஆகிய தேதிகளில் ஆய்வுக்கு வருவதாகக் கொடுத்திருக்கும் கடிதத்துக்கு, 30-ம் தேதியன்று அன்று தீட்சிதர்கள் ‘இதற்கு வரக் கூடாது’ என்று பதில் அளித்திருக்கிறார்கள். அதற்கு ஒன்றாம் தேதியே மீண்டும் பதில் அனுப்பியிருக்கிறோம். மீண்டும் தீட்சித பெருமக்கள் மூன்றாம் தேதி அதற்கு பதில் கடிதமாக அனுப்பியிருக்கிறார்கள். துறையின் சார்பில் நான்காம் தேதி திரும்ப ஒரு பதிலை அனுப்பியிருக்கிறோம்.

இன்றைக்கு நம் தீட்சிதர்கள் அதற்கு பதில் அளிக்கிறார்களா என்று தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ந்து ஒரு சுமுகமான நல்ல நிலை ஏற்படும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சொன்னதுபோலவே ஆய்வுக்காக அதிகாரிகள் நேற்று (7-6-2022) சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது தீட்சிதர்கள் இணங்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சேகர் பாபு
சேகர் பாபு
Twitter

இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு , “பொதுப்படையாக இருக்கக்கூடிய கோயில்களில் புகார்கள் வரும்போது, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 23, 28-ன் படி அந்தத் திருக்கோயிலுக்குச் சென்று புகாரின் பேரில் ஆய்வு செய்து விசாரிக்கலாம் என்ற சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே வந்திருக்கிற புகார்களின் அடிப்படையில் விசாரிக்க வருவதற்காகக் கடிதங்கள் அனுப்பினோம். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து பதில் கடிதங்களும் தீட்சிதர்கள் தரப்பிலிருந்து அனுப்பினார்கள். சட்டத்தின் ஆட்சி என்பதால் சட்டதிட்டத்தின்படிதான் எழுந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வுக்குச் சென்றிருக்கிறார்கள். மடியிலே கனம் இல்லை என்றால் வழியிலே பயம் இல்லை என்பார்கள். பயம் இல்லை என்றால் ஆய்வு செய்ய வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதுதான் நீதி, மனுநீதி, மனுதர்மம். தீட்சிதர்களுக்கு வைக்கிற அன்பான கோரிக்கை வருகிற குழுவுக்கு, அவர்கள் கேட்கிற விளக்கங்களை அளிப்பதுதான் சட்டத்தின்படி உகந்ததாக இருக்கும்.

சிதம்பரம்
சிதம்பரம்

சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என்பது குறிக்கோள் அல்ல. எனவே, இதை தீட்சிதர்களுக்கு எதிரான செயல் என்று நினைக்கக் கூடாது. பக்தர்களிடமிருந்து வரும் புகார்களை விசாரிக்கும் குழுதான் இது. என்ன உண்மை இருக்கிறதோ நீங்கள் அவர்களிடம் தெரிவியுங்கள். நிச்சயம் சட்டத்தை மீறி நாங்கள் ஏதும் செய்ய மாட்டோம் என உறுதி அளித்த பிறகும் மறுக்கும்போது, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை விசாரணையை உறுதியாக மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறிய சில மணி நேரங்களில், “அறநிலையத்துறை கேள்விக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் தரப்படும்” என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், “தொடர்ந்து இந்துக் கோயில்களுக்கும், இந்துக்களுக்கும் விரோதமாகத்தான் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன” என்கிறார்.

காடேஸ்வரா சுப்பிரமணியம்
காடேஸ்வரா சுப்பிரமணியம்

மேலும் தொடர்ந்தவர், ``விசாரணை பண்ணக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், இது மிரட்டுவதுபோலவும், அச்சுறுத்துவதுவதுமாக இருக்கிறது. இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அப்படியும் விசாரணை என்றால் மடாதிபதிகள், ஜீயர்கள், ஆதீனங்கள் எல்லோரையும் வரச் சொல்லி இதுபோல் தவறு நடக்கிறது, நாங்கள் விசாரணை செய்கிறோம் என்றால் முறையான விசாரணையாக இருக்கும். அமைச்சர் திடீரென்று போய் அவர்களை மிரட்டுவதுபோல் நின்றால் எப்படி... தான்தோன்றித்தனமாக இருக்கிறது. தி.மு.க ஆதரவாளர்கள் யூடியூபில் நடராஜரைக் கேவலப்படுத்தியிருந்தார்கள். அவர்கள்மீது ஏன் நடவடிக்கை இல்லை... விசாரணை என்று உள்ளே போய் அச்சுறுத்தினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்கிற கேள்வியை முன்வைக்கிறார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“சிதம்பரம் கோயில் பொதுக் கோயில். அதில் எந்தவிதச் சந்தேகம் கிடையாது. நிர்வகிப்பது மட்டும் தீட்சிதர்கள்” என்கிறார் வழக்கறிஞரும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளருமான சி.ராஜு.

“கோயில் நிர்வாகம் செய்வது தீட்சிதர்களா... அரசா என்கிற பிரச்னை நூறு ஆண்டுகளுக்கு மேல் நடக்கிறது. 1888-ல் முத்துசாமி ஐயர், செப்பேர்டு என்கிற ஜட்ஜ், ‘கோயில் பொதுச் சொத்து. உங்கள் சொத்து என்று சொல்வதற்குச் சிறு துளி ஆதாரம் கிடையாது’ என்று தீர்மானம் போடுகிறார்கள். அதன் பிறகு 1936-ல் மாவட்ட நீதிமன்றத்தில் இதே பிரச்னை போகும்போது உண்டியல் வைக்க வேண்டும், அர்ச்சனை சீட்டுக் கொடுக்க வேண்டும் போன்று HRNC போர்டு எப்படிக் கோயிலை நிர்வகிக்க வேண்டும் என்கிற ஸ்கீம் கொடுக்கிறார்கள். அதன் பிறகு 1952, 2008, 2009, 2014 வழக்குகளிலும்கூட இன்று வரை ‘பொதுக் கோயில்’ என்றுதான் தீர்ப்பு உள்ளது. அதேபோல் தீட்சிதர்கள் எப்படி நிர்வாகம் பண்ண வேண்டும் என்பதைக் கண்காணிப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதும் அந்தத் தீர்ப்பில் இருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

இந்தக் கோயிலில் உள்ள சில தீட்சிதர்கள் லட்சாதிபதிகளாகவும், சிலர் வறுமையில் வாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனெனில், ஒருவரிடம் ஆயிரமும், இன்னொருவரிடம் நூறும், சிலரிடம் லட்சத்திலும் பணம் வாங்குகிறார்கள். இந்தப் புகார்கள், முரண்கள் பற்றி யார் கேள்வி எழுப்புவது... தீர்ப்பது... கனகசபை மீது ஏறி வழிப்படுவதை தீட்சிதர்கள் தடுக்கிறார்கள். இதனால் பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் பிரச்னைகள் வருகின்றன. அந்த நேரத்தில் அரசாங்கம் கனகசபை மீது ஏறி வழிபடுவதைத் தடுக்கக் கூடாது என அரசாணை போடுகிறார்கள். மக்களின் புகார்கள், எங்களைப் போன்ற அமைப்பினரின் தொடர் புகார்களுக்கு அடுத்து கோயில் நகைகள், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் பரிசோதிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒன்பது பேர்கொண்ட உயரதிகாரிகள் குழு அமைக்கிறது. அதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறார்கள்.

சிதம்பரம் கோயிலை அவர்கள் இஷ்டப்படி நிர்வகிக்க முடியாது. ஆனால் நிர்வகிக்கிறார்கள். சிவகாசி பட்டாசுத் தொழில் அதிபர், சென்னை தொழில் அதிபர் குடும்பங்களின் திருமண வரவேற்பை ஆயிரம் கால் மண்டபத்தில் ஐந்து நட்சத்திர விடுதிபோல் ஜொலிக்கவைத்து நடத்துகிறார்கள். இதற்குப் பெரிய தொகை வாடகைக்கு வாங்குகிறார்கள். இது குறித்து மக்களிடம் எதிர்ப்பு வரும்போது, காரணமான தீட்சிதருக்கு ரூ.1,000 அபராதம் போட்டு நீக்கிவிட்டோம் என்கிறார்கள். ஒரு பெரிய பொதுக் கோயிலை வாடகைக்குவிடுவதும், அதற்குப் பல லட்சம் வாடகை வசூலிப்பதும் ஒரு தீட்சிதர் சம்பந்தப்பட்டதா... செயற்குழு என்று ஒன்றிருக்கிறது. அதன் சட்டதிட்டங்கள் என்னென்ன?” என்கிற கேள்வியை முன்வைப்பவர், “மேற்கு கோபுர வாயிலில் ஏதோ புதையல் இருக்கிறது என்று சொல்லி இரவோடு இரவாகத் தோண்டி எடுத்திருக்கிறார்கள்” என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.

வழக்கறிஞர் சி.ராஜு
வழக்கறிஞர் சி.ராஜு

தொடர்ந்து, ``தொன்மையான தொல்பொருள் உள்ள விஷயங்களை நிர்வாகிக்கும்போது அதன் ஸ்ட்ரக்சரை மாற்றக் கூடாது. ஆனால், கோயிலினுள் பில்லர் போட்டு பில்டிங் கட்டுகிறார்கள். இதற்கு துறை சார்ந்து எந்த அனுமதியும் வாங்கவில்லை. தனியாரிடம் பல லட்சம் ரூபாய் நன்கொடை வாங்கி உள்ளுக்குள் பெரிய பூங்கா அமைத்துள்ளனர். உண்டியல் வைக்க வேண்டும் என்பது சட்டம். இன்றைக்கு வரைக்கும் உண்டியல் வைக்கவில்லை. 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை அரசாங்கக் கட்டுப்பாட்டில் உண்டியல் இருந்தபோது கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் வசூல் ஆனது. உண்டியல், அர்ச்சனைச் சீட்டு வைத்து முறையாக கலெக்‌ஷன் செய்தால் ஒரு கோடி , இரண்டு கோடி ரூபாய் என வசூல் வரும். அந்தத் தொகையைவைத்து கோயிலைப் பராமரிப்பதோடு, தீட்சிதர்களுக்குச் சமமான ஊதியம் வழங்கலாம். இதையெல்லாம்தான் அரசு இப்போது கேள்வி கேட்கிறது.

கோயில் எப்படி நிர்வாகம் செய்யப்படுகிறது என்கிற சட்டதிட்டங்களை வெளிப்படையாக மக்கள் மத்தியில் வைக்க வேண்டும். அதில் பக்தர்களுக்கு என்ன உரிமை, தீட்சிதர்களுக்கு என்ன உரிமை என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். அதில் முரண்பாடு வரும்போது அரசு அதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசின் வரம்புக்கு உட்பட்டே நடக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்குமான நிரந்தரத் தீர்வு, தனிச் சட்டம் இயற்றி, அரசின் முழுப் பொறுப்புக்குக் கொண்டுவந்தால்தான் கோயில் பெருமையைப் பாதுகாக்க முடியும்” என்கிறார் வழக்கறிஞர் சி.ராஜு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism