Published:Updated:

`சி.வி.சண்முகம்தான் காரணம், நான் இல்லை!' - தேனி சட்டக்கல்லூரி திறப்பு விழாவில் ஓ.பி.எஸ் ஓப்பன் டாக்

எம்.கணேஷ்

எம்.பி ரவீந்திரநாத்குமார், "தேனியில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சட்டக்கல்லூரி, பல சட்ட வல்லுநர்களை உருவாக்கும்" என்றார்.

Deputy CM Panneer selvam
Deputy CM Panneer selvam

தேனி மாவட்டத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி என இருந்தும் சட்டக் கல்லூரி இல்லாதது பெரும் குறையாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று தேனியில் சட்டக் கல்லூரி திறக்கப்பட்டது.

Law college inauguration
Law college inauguration

தேனி வீரபாண்டி அருகே புதிதாகச் சட்டக்கல்லூரி கட்டடம் கட்டப்பட இருக்கிறது. இதற்குச் சில மாதங்கள் ஆகலாம். அதனால், தேனி வீரபாண்டி - உப்பார்பட்டி விலக்கு அருகே உள்ள சந்திரகுப்த வித்யாலயா பள்ளியில் தற்காலிக வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 மாணவர்களும் மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 மாணவர்களும் என மொத்தம் 160 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தக் கல்வியாண்டின் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வில் தேனி சட்டக் கல்லூரிக்காக இதுவரை 38 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 14 மாணவிகள் உள்ளனர். மேலும், அடுத்தடுத்த கலந்தாய்வில் தேனி சட்டக் கல்லூரிக்கான 160 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாகத் தொடங்கப்பட்டுள்ள வகுப்பறைகளைத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சட்டத்துறை அரசுச் செயலர், தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேனியில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதால் தேனி மாணவர்கள் மதுரை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. இந்நிகழ்வு தேனி மாவட்ட மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், சட்டப் படிப்பு மீதான ஆர்வமும் அதிகரிக்கும்.

Ravindranath kumar - CV shanmukam - Panneer selvam
Ravindranath kumar - CV shanmukam - Panneer selvam

நிகழ்ச்சியில் பேசிய எம்.பி ரவீந்திரநாத்குமார், "தேனியில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சட்டக்கல்லூரி, பல சட்ட வல்லுநர்களை உருவாக்கும்" என்றார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ``எதிர்க்கட்சியின் ஆட்சியில் சட்டக்கல்லூரி ஆரம்பிப்பார்கள், அதை அப்படியே விட்டுவிடுவார்கள். பின்னர், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் கல்லூரிக்கான கட்டடம் கட்டிக் கொடுப்பார். இப்போது தற்காலிகமாகப் பள்ளியில் வகுப்பறை உள்ளதே எனக் கவலைப்படத் தேவையில்லை. அடுத்த ஆண்டு, மற்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு கல்லூரிக் கட்டடம் அமையும்" என்றார்.

`முதல் தங்கப்பதக்கம்!'- உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ``தேனியில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் எனச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்ட, இரண்டு நாள்களில் தேனியில் சட்டக்கல்லூரியில் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தேனியில் சட்டக் கல்லூரி அமைக்க காரணகர்த்தாவாக இருந்தவர் சி.வி.சண்முகம்தான், நான் இல்லை. மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் எட்டுச் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளன. தேனியில் தொடங்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரி தமிழகத்தின் 14-வது சட்டக் கல்லூரி. சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை சட்டக்கல்லூரில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் போன்று, தேவையில்லாத விஷயங்களில் மாணவர்கள் கவனத்தை சிதறவிடக் கூடாது" என்றார்.