Published:Updated:

6 முறை எம்.எல்.ஏ; வீட்டு வசதித்துறை அமைச்சர் - துணை சபாநாயகராகும் கு.பிச்சாண்டியின் அரசியல் பயணம்

கு.பிச்சாண்டி
கு.பிச்சாண்டி

6-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகியிருக்கும் கு.பிச்சாண்டி, 16-வது சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகப் பதவியேற்கிறார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றது தி.மு.க கூட்டணி. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த 7-ம் தேதி நடைபெற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து 11-ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களும், 12-ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வும் நடைபெறவிருக்கின்றன. அதன்படி, இன்று (11.05.2021) 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் முதல் நபராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ-க்கள் தொடர்ச்சியாக உறுதிமொழிகளைப் படித்து பதவி ஏற்றுக்கொண்டனர்.

தமிழக தலைமைச் செயலகம்
தமிழக தலைமைச் செயலகம்

கடந்த 8-ம் தேதி அன்று தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி, இன்று எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதே சமயத்தில் தி.மு.க சார்பில், சபாநாயகர் பொறுப்புக்கு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவுவும் மற்றும் துணை சபாநாயகர் பொறுப்புக்கு கு.பிச்சாண்டியும், சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசனிடம் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

யார் இந்த கு.பிச்சாண்டி?!

திருவண்ணாமலையைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் பிச்சாண்டி. டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்திவந்த தன் தந்தையின் வழியில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

படிப்படியாக அரசியலில் பயணிக்கத் தொடங்கி, 1989-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியால் நேரடியாக அடையாளம் காட்டப்பட்டு திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். அந்தத் தேர்தலில் சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில், எதிர்த்து போட்டியிட்ட சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவீந்திரனைத் தோற்கடித்தார். அதைத் தொடர்ந்து 1996, 2001, 2006-ம் ஆண்டுகளிலும் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தவர் கு.பிச்சாண்டி. இதனால் தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமானார். திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

ஸ்டாலினுடன் எ.வ.வேலு
ஸ்டாலினுடன் எ.வ.வேலு

தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த எ.வ.வேலு, தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பவர். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எ.வ.வேலு பெற்றுவிட, அதுநாள் வரை திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் நான்கு முறை வெற்றிபெற்று உலாவந்த கு.பிச்சாண்டி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பொறுப்பும் எ.வ.வேலுவிடம் கொடுக்கப்பட்டது. அறிமுகமில்லாத தொகுதியில் சந்தித்த முதல் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதே கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

திருவண்ணாமலை: எதிர்த்து நின்ற வேட்பாளர்களைப் பதம் பார்த்த எ.வ.வேலு! #TNelections2021

இதுவரை ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றிருக்கும் கு.பிச்சாண்டி, 1996 முதல் 2001 வரை வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த நபராகவே இருந்தாலும், அவர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு அழைத்தால் சகஜமாகவே கலந்துகொள்வாராம். நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றிபெற்றிருக்கும் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைமையிடமிருந்து தங்களுக்குச் சாதகமான அறிவிப்பு வருமா விழிவைத்துக் காத்திருந்தது கு.பிச்சாண்டி தரப்பு.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்தநிலையில் கடந்த 8-ம் தேதி கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று துணை சபாநாயகர் பதவிக்கும் விண்ணப்பித்திருக்கிறார். 12 மணியோடு மனுத்தாக்கல் செய்யும் காலம் முடிவுற்றது. யாரும் எதிர்த்து போட்டியிடாததால் அப்பாவு சபாநாயகராகவும், கு.பிச்சாண்டி துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு