Published:Updated:

`எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் சிஏஏ திரும்பப் பெறப்படாது!' - அமித் ஷா திட்டவட்டம்

அமித் ஷா
அமித் ஷா ( Twitter )

எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலோடு சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாகக் கடந்த 10-ம் தேதி அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது.

ஷஹீன் பாக் போராட்டம்
ஷஹீன் பாக் போராட்டம்
Twitter

இதை எதிர்த்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கேரள அரசு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்தநிலையில், சட்டம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் தேசிய அளவில் பல்வேறு ஆதரவுப் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் பா.ஜ.க நடத்தி வருகிறது.

பெண்கள் போராட்டம்!

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. லக்னோவின் கிளாக் டவர் பகுதியில் பெண்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற போராட்டம் 5வது நாளை எட்டியிருக்கிறது. போராட்டம் தொடர்பாக 16 பெண்கள், நூறுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாதவர்கள், கவிஞர் முனாவர் ரானாவின் இரண்டு மகள்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண்கள் போராட்டம்
பெண்கள் போராட்டம்
Twitter

இந்தநிலையில், லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க லக்னோவில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியை நடத்தியது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். இந்தப் பேரணிக்கு முன்பாக போலீஸார் பெண்கள் போராட்டம் நடத்திய பகுதிவரை கொடி அணிவகுப்பை மேற்கொண்டனர். மேலும், போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி அவர்களிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தை பலன் கொடுக்கவில்லை. அதேபோல், லக்னோவின் கோமதி நகர் பகுதியில் உள்ள உஜாரியானில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் சிஏஏ-வுக்கு எதிரான பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிஏஏ திரும்பப் பெறப்படாது!

லக்னோ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் பொய்யான தகவல்கள் மக்களிடையே பரப்பப்படுகின்றன. அதனால்தான் சட்டத்தின் கூறுகளை விளக்கி ஆதரவு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். நாட்டைத் துண்டாட நினைப்பவர்களுக்கு எதிராக நாங்கள் இதை நடத்துகிறோம்.

அமித் ஷா
அமித் ஷா
ANI

எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது. இந்தச் சட்டம் குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கவே; மாறாக இந்தச் சட்டத்தின்மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்களவையில் அறிமுகப்படுத்தியது நான்தான். சட்டம் தொடர்பாக பொதுவெளியில் நீங்கள் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு சொல்லிக்கொள்கிறேன். இதன்மூலம் ஒருவரின் குடியுரிமையைப் பறிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டுங்கள். பார்க்கலாம்'' என்றார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சமாஜ்வாதிக் கட்சியின் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பின் செல்ல