Published:Updated:

கிரிப்டோகரன்சி வர்த்தகம்: `சாமானிய மக்கள் புரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?!'

கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சி பற்றிய பேச்சுகளும், விவாதங்களும், சர்ச்சைகளும் அதிகரித்திருக்கின்றன. கிரிப்டோகரன்சியை சாமானிய மக்கள் எப்படிப் புரிந்துகொள்வது?

கிரிப்டோகரன்சி மீதான ஆர்வம் அதிகரித்துவரும் வேளையில், கிரிப்டோகரன்சி பற்றி மாறுபட்ட கருத்துகளும் நிறைய வருகின்றன. கிரிப்டோகரன்சி பற்றிப் பலருக்கும் தெரிந்திருந்தாலும், அது பற்றித் தெரியாதவர்களும் உண்டு. ரூபாய், டாலர், யூரோ போன்ற கரன்சிகள் அந்தந்த நாட்டின் அரசுகளால் வழங்கப்படுகிற, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகிற பணம். இது நோட்டாகவோ, நாணயமாகவோ இருக்கிறது. ஆனால், கிரிப்டோகரன்சியை கண்களால் காண முடியாது. டிஜிட்டலில் மட்டுமே அது இருக்கும்.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

ரூபாய் போன்ற அந்தந்த நாட்டின் பணம் என்பது, அந்த நாட்டுக்குள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், கிரிப்டோகரன்சி என்பது நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் செல்லுபடியாகும். `பிட்காயின்’ என்றால் எல்லோர் மத்தியிலும் பிரபலம். கிரிப்டோகரன்சிகளில் ஒன்றுதான் பிட்காயின். பிட்காயினைப்போல எதரியம், கார்டோனோ, சொலனா என ஏராளமான கிரிப்டோகரன்சிகள் புழக்கத்தில் இருக்கின்றன.

ரிசர்வ் வங்கி, செபி போன்ற அமைப்புகள் ரூபாயைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், அரசால் ஒழுங்குபடுத்தப்படாத, ரிசர்வ் வங்கி போன்ற எந்த அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இல்லாத டிஜிட்டல் பணமாக கிரிப்டோகரன்சிகள் இருக்கின்றன. காசோலை, வரைவோலை எடுப்பதற்கு நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக பணத்தை வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றுவதற்கு, எனப் பணப் பரிமாற்றம் அனைத்துக்கும் கமிஷனாக ஒரு தொகை செலுத்தப்பட வேண்டும். ஆனால், கிரிப்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கு எந்த கமிஷனும் இல்லை.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் குறுகியகாலத்தில் பல மடங்கு பணம் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக இருப்பதால், பலருக்கும் இதன்மீது ஆர்வம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் பல கோடிப் பேர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், கர்நாடகா மாநிலத்தில் 'பிட்காயின் ஊழல்' என்ற மிகப்பெரிய பிரச்னை வெடித்திருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்ற 25 வயது இளைஞர், போதைப்பொருள் வழக்கில் பெங்களூரு போலீஸாரால் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, உலக அளவில் கணினிகளை ‘ஹேக்கிங்’ செய்து பிட்காயின்களைத் திருடியிருப்பது தெரியவந்தது.

பிக்பாஸாக மாறும் ‘பிட்காயின்!’
மாயவலையா... மாபெரும் லாபமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹேக்கிங் மூலமாக பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களைத் திருடி, ஆடம்பர வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். நட்சத்திர விடுதிகளில் தங்கி உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார். அவருடைய ஒரு நாள் செலவு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை என்கிற அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை இருந்திருக்கிறது. ஹேக்கிங் மூலம் ஸ்ரீகிருஷ்ணா திருடிய பிட்காயின்களால் அரசியல்வாதிகளும் காவல்துறை உயரதிகாரிகளும் பலனடைந்திருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருகின்றன. இந்த விவகாரத்தால் கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றமே வரப்போகிறது என்ற அளவுக்குப் பரபரப்பு போய்க்கொண்டிருக்கிறது.

மோடி
மோடி

இப்படியான நிலையில்தான், கிரிப்டோகரன்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று பிரதமர் மோடி தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. பொதுமக்களின் பணத்தை சூறையாடுவதற்கோ, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கோ கிரிப்டோகரன்சிகள் பயன்பட்டுவிட அனுமதித்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் அந்தக் கூட்டம் நடைபெற்றது. கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்கிறரீதியில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படுவது குறித்தும், கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்தும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

`முதல்வரின் முகவரி' : எப்படி செயல்படப் போகிறது ஸ்டாலின் அரசு உருவாக்கிய புதிய துறை?

ஏற்கெனவே, 2018-ம் ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்குத் தடைவிதித்து இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டது. கிரிப்டோகரன்சிகள் பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டாம் என்று வங்கிகளும், மற்ற நிதி நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டன. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மோசடிகள் செய்வதற்கு கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும், நிதி நடைமுறையை கிரிப்டோகரன்சி பாதிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கருதியதே அந்தத் தடைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

ஆனால், ரிசர்வ் வங்கியின் அந்த முடிவுக்கு எதிராக இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம் நீதிமன்றம் சென்றன. மேலும், பல்வேறு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மையங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. கிரிப்டோகரன்சி அரசால் தடை செய்யப்படாததால், அதில் முதலீடு செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யும்போது உணர்ச்சிவயப்படாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்கிறார்கள் நிபுணர்கள். கிரிப்டோகரன்சி எப்படிச் செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள முதலில் பத்து ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்து, அதன் மூலம் அனுபவம் பெற வேண்டும். அதன் அடிப்படையில், எச்சரிக்கையுடன் அடுத்துச் செயல்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக கிரிப்டோகரன்சி ஆலோசகர் அர்ஜுன் விஜய்யிடம் பேசினோம். ``பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கத்தைவிட, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் அதிகம். அதாவது, ரிஸ்க் மிக மிக அதிகம். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய விரும்புவோர் இந்தச் சிக்கல்களைப் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு செயலியை (App) உருவாக்குவது எவ்வளவு எளிதானதோ, அந்த அளவுக்கு எளிதானது ஒரு காயினை உருவாக்குவது. எனவே, 1,000-க்கும் மேற்பட்ட காயின்கள் இருக்கின்றன. இவற்றில் பிரதானமானவை பிட்காயின், எதெரியம் ஆகிய இரண்டும்தான். கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு வர விரும்புவோர் பிட்காயின், எதெரியம் ஆகியவற்றில் ஆரம்பிக்கலாம்.

பங்குச்சந்தையில் ப்ளூசிவ், இன்ஃபோசிஸ் மாதிரி பெரிய நிறுவனங்களின் பங்குகள் மிகக் குறைந்த விலையில் இருப்பதுபோல, சிறு சிறு காயின்கள் நிறைய இருக்கின்றன. அதாவது, ஒரு ரூபாய்க்கு ஆயிரம் காயின்கள் கிடைக்கும். அதில் பலர் முதலீடு செய்கிறார்கள். தங்கம் ஒரு கிராம் ரூ.4,000-ஆக இருக்கிறது. அதனால் தகரத்தை 100 கிலோ வாங்கிவைத்துக்கொள்வது கிடையாது. அது மாதிரிதான் பெரும்பாலானோரின் முதலீடு பிட்காயின், எதெரியத்தில்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மற்ற காயின்களிலும் முதலீடு செய்யலாம். ஆனால், ரிஸ்க் அதிகமாகவே இருக்கும்.

அர்ஜுன் விஜய்
அர்ஜுன் விஜய்

உள்ளே வர ஆரம்பித்த பிறகு, கிரிப்டோகரன்சி பற்றிய நுணுக்கங்களையும், சிறப்பு அம்சங்களையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ‘நாங்கள்தான் அடுத்த பிட்காயின்...’, ‘இந்தியாவின் பிட்காயின்...’, ‘தமிழ்நாட்டின் பிட்காயின்...’ என்று பலரும் காயின்களைக் கொண்டுவருகிறார்கள். அது ஒரு மோசடி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிட்காயின் பற்றிய புரிதல் வேண்டும். வெறும் முதலீடு மட்டும் செய்துவிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்தால் கஷ்டம்” என்றார் அர்ஜுன் விஜய்.

``கிரிப்டோகரன்சி, எந்த அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அரசின் அனுமதியும் அதற்கு இல்லையே..?"

``முதலில் ஒரு டெக்னாலஜி வரும். பிறகுதான் அதற்கான ஒழுங்குமுறை, அரசின் அனுமதி எல்லாம் வரும். இணையதளத்துக்கு இன்னும்கூட முழுமையான அனுமதி இல்லை. மின்னணு வர்த்தகத்துக்கு இப்போதுதான் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டுவருகிறார்கள். அதுபோல கிரிப்டோகரன்சிக்கும் எதிர்காலத்தில் வரும். தற்போதைய நிலையில் கிரிப்டோகரன்சியில் அதிகபட்ச ரிஸ்க் இருக்கும். நிறைய காயின்கள் பூஜ்ஜியம் அளவுக்குப் போவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் செய்யும் முதலீடு பத்து மடங்காக அதிகரிக்கவும் செய்யும். அதேநேரத்தில், ஜீரோ அளவுக்கும் அது இறங்கும். அந்த அளவுக்கு ஏற்ற இறக்கம் மோசமாக இருக்கும். இதைப் புரிந்துகொண்டுதான் உள்ளே வர வேண்டும்."

‘பிட்காயின்’ முதலீடு... நீங்க என்ன நினைக்கிறீங்க?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு