Published:Updated:

`அ.தி.மு.க-வும் என்னுடையது; இரட்டை இலையும் என்னுடையது!' - கே.சி.பழனிசாமி கைது பின்னணி

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

``ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது இவர் மட்டுமே. அதனால்தான், இந்த நேரத்தில் அவரை கைது செய்திருக்கிறார்கள்” என்கின்றனர் கே.சி.பழனிசாமி ஆதரவாளர்கள்.

`நான் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி. எங்கே... இப்போது ஆட்சியில் இருப்பவர்களை, எம்.ஜி.ஆருடன் எடுத்த புகைப்படத்தைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று சவால்விட்டவர் அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

கே.சி.பழனிசாமி எம்.ஜி.ஆர்
கே.சி.பழனிசாமி எம்.ஜி.ஆர்

பின்னர், ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்த பிறகு, கே.சி.பழனிசாமிக்குச் செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் பேசியதற்காக அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார் கே.சி.பி.

ஆனால், `அ.தி.மு.க விதிகள்படி பொதுச்செயலாளருக்குத்தான் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் இருக்கிறது. எனவே, என்னை நீக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கோ, இணை ஒருங்கிணைப்பாளருக்கோ இல்லை’ என்று மறுத்து வந்தார் கே.சி.பழனிசாமி.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

மேலும், `அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர் பதவி எல்லாம் செல்லாது.. பொதுச் செயலாளரை தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் படி ஏறினார்.

ஏமாற்றுதல், போலி ஆவணம், ஆள் மாறாட்டம்.. 11 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமி!

இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தலைமைச் செயலகத்தில் வைத்து, ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்ஸைச் சந்தித்தார் கே.சி.பழனிசாமி. இதனால், கே.சி.பழனிசாமி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக தி.மு.க புகார் எழுப்பவே, `கே.சி.பழனிசாமியைக் கட்சியில் இணைக்கவில்லை’ என்று மறுத்தார் ஈ.பி.எஸ்.

கே.சி.பழனிசாமி ஜெயலலிதா
கே.சி.பழனிசாமி ஜெயலலிதா

இதையடுத்து, ‘வழக்கை வாபஸ் வாங்கச் சொல்வதற்காகத்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்படி வாபஸ் வாங்கினால், என்னைக் கட்சியில் இணைத்துவிடுகிறேன் என்றனர். ஆனால், நான் வழக்கை வாபஸ் வாங்க முடியாது எனக் கூறிவிட்டேன்’ என்றார் கே.சி.பழனிசாமி.

இந்நிலையில், கோவை தடாகம் சாலையில் உள்ள தனது வீட்டில் வைத்து கே.சி.பழனிசாமியைச் சூலூர் போலீஸார் நேற்று கைது செய்தனர். அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பிறகும், கட்சியைத் தவறாகப் பயன்படுத்துகிறார், போலி இணையதளம் நடத்துகிறார் என்று சூலூர், முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தவேல் புகார் அளித்தார்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

அந்தப் புகாரின் அடிப்படையில் ஏமாற்றுதல், போலி ஆவணம், ஆள் மாறாட்டம் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் கே.சி.பழனிசாமி.

இதுகுறித்து கந்தவேல் தரப்பில் கேட்டபோது, ``அ.தி.மு.க பெயரில் போலி இணையதளம் தொடங்கி, அதில் ஆள்களை சேர்த்து வந்தார். தொடர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டு வந்ததால், நமது கட்சியில் இருந்தவர்தானே என்று அடிப்படையில் அவருக்கு அழைத்துப் பேசினோம். ஆனால், ‘அவர் என்னைப் பற்றி உனக்கு தெரியாது.

கே.சி.பழனிசாமி நடத்தி வந்த இணையதளம்
கே.சி.பழனிசாமி நடத்தி வந்த இணையதளம்

நான் கல்லூரி காலத்திலிருந்தே ரவுடி. உன்னைத் தொலைத்துவிடுவேன்’ என்று தகாத வார்த்தைகளைச் சொல்லி மிரட்டினார். அதனால்தான், போலீஸில் புகார் கொடுத்தோம்” என்றனர்.

``ஜெயலலிதா இருந்தபோதே, இவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகப் புகார் சொல்கின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தில் சசிகலா, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த பிரமான பத்திரங்களில், `கே.சி.பழனிசாமி 40 ஆண்டுகளாக அ.தி.மு.க-வில் இருக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. கே.சி.பழனிசாமியைப் பொறுத்தவரை ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், வேலுமணி, தங்கமணி ஆகியோரை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது இவர் மட்டுமே. அதனால்தான், இந்த நேரத்தில் அவரை கைது செய்திருக்கிறார்கள்” என்கின்றனர் கே.சி.பழனிசாமி ஆதரவாளர்கள்.

ஏமாற்றுதல், போலி ஆவணம், ஆள் மாறாட்டம்.. 11 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமி!

அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றும்போது, போலீஸாருக்கும், அவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சூலூர் காவல்நிலையத்துக்குள், அவரது வழக்கறிஞரை மட்டுமே அனுமதித்தனர். நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்காக, சூலூர் காவல்நிலையத்திலிருந்து வெளியில் வந்தபோது, ‘அ.தி.மு.க-வும் என்னுடையதுதான்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

இரட்டை இலையும் என்னுடையதுதான்’ என்று இரண்டு விரல்களில் கையசைத்தபடியே (அ.தி.மு.க சின்னம்) வந்தார் கே.சி.பி காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய பிறகு, கொலை மிரட்டல் உட்பட மேலும் 4 பிரிவுகள் (மொத்தம் 17 பிரிவுகள்) வழக்கில் இணைக்கப்பட்டன. இதையடுத்து, சூலூர் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கே.சி.பழனிசாமிக்கு, பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு