Election bannerElection banner
Published:Updated:

#TNelections2021 நாற்காலி யாருக்கு...?! முதல்வர் வேட்பாளர்களும் தமிழக தேர்தல் ஓர் அறிமுகமும்!

தமிழக தேர்தல் ஓர் அறிமுகம்!
தமிழக தேர்தல் ஓர் அறிமுகம்!

இரட்டை இலை மலருமா? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா? இல்லை உதயசூரியன் உதித்து முதன்முறையாக ஸ்டாலின் முதல்வர் ஆவாரா? 5 முனை போட்டியால் மாற்றம் நிகழுமா? மே-2ம் தேதி வெளியாகும் வாக்கு எண்ணிக்கையின் முடிவு இவை அனைத்துக்கும் பதிலாக அமையும்!

தமிழக தேர்தல் ஓர் அறிமுகம்:

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகம் இதுவரைக்கும்  16 சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் தொடங்கி அதன்பின்  நடந்த 1957 மற்றும் 1962 வரையிலான முதல் மூன்று சட்டமன்றத் தேர்தல்களோடு, தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி அரசியல் களத்தில் தனது தனிபலத்தை இழந்தது. 1967-ம் ஆண்டு தேர்தலிலிருந்து கடந்த 2016-ம்ஆண்டு தேர்தல் வரையிலான 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் மாநிலக்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிசெய்து வருகின்றன. 

ஜெயலலிதா - கருணாநிதி
ஜெயலலிதா - கருணாநிதி

மு.கருணாநிதி 5 முறையும், ஜெ.ஜெயலலிதா 5 முறையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக அதிகமுறை பதவி வகித்துள்ளனர். திமுக மற்றும் அதிமுக வின் இந்த இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால்  அரசியல் களத்தில் 2021 சட்ட மன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கட்சிகளின் கூட்டணியும், முதல்வர் வேட்பாளர்களும்:

5 முனை போட்டியாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், அதிமுக சார்பில் எடப்பாடி கே பழனிசாமி, திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தனர். டி.டி.வி தினகரன், (அமமுக) சீமான், ( நாம் தமிழர் கட்சி) கமல்ஹாசன் ( மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர். அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமாக உட்பட மொத்தம் 10 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்திருக்கின்றன. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக,கம்யூனிஸ்ட் என மொத்தமாக 9 கட்சிகள் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளன. இரண்டு பிரதான கட்சிகள் தவிர, டிடிவி தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில், சமக, ஐஜேகே என சில பல கட்சிகள்/ அமைப்புகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருக்கின்றன.

நாற்காலி யாருக்கு? ஹாசிப்கான் கார்டூன்
நாற்காலி யாருக்கு? ஹாசிப்கான் கார்டூன்

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலைப் போன்றே இந்த முறையும் சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்தே தேர்தலை சந்தித்தனர். மேலும், இந்த 5 முனைப் போட்டிகளையும் தாண்டி, குறிப்பிட்ட சில கட்சிகளும் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளன. முக்கியமாக, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான சகாயம் அரசியல் பேரவையும், அதனுடன் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் வளமான தமிழகம் முதலிய மூன்று கட்சிகள் இணைந்து 36 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. மேலும், டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி 160 இடங்களிலும், ஆம்ஸ்ட்ராங்கின் பகுஜன் சமாஜ் கட்சி 60 இடங்களிலும், செ.கு.தமிழரசனின் இந்தியக் குடியரசுக் கட்சி 16 தொகுதிகளிலும் தன்னிச்சையாக களம் கண்டுள்ளன. இது தவிர, பல சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என 2021தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தேர்தல் முடிவுக்காக காத்துக்கொண்டுவருகின்றன.

தொகுதிகள், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரம்:

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 44 தனித்தொகுதிகளும், 2 பட்டியல் பழங்குடியினருக்கான தொகுதிகளும் அடங்கும். தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களின்எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74  ஆயிரத்து 446 பேர். அதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர். பெண் வாக்காளர்கள் முறையே 3  கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727  பேர். இதில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. குறிப்பாக, 18-19 வயதுள்ள இளம்வாக்காளர்கள் 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேராக உள்ளனர். மேலும், மூன்றாம் பாலினத்தவர்களில் 7,246 பேர் வாக்காளர்களாக உள்ளனர். தமிழகத்தில் மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது.

Election 2021
Election 2021

இங்கு, 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் மிகக் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதி உள்ளது. இங்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.மொத்தமுள்ள 234 தொகுதிகளில், போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் எண்ணிக்கை 3,998. இதில் 3,585 பேர் ஆண்களும், 411 பேர் பெண்களும் மற்றுமுள்ள 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் ஆவார்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பவானிசாகர், வால்பாறையில் தலா 6 வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மற்றும்  கருத்துக்கணிப்பு:

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 72.78% சதவீதவாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதில், மாவட்ட வாரியாக, அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92% சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியாக கணக்கிடும்போது, அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% சதவீதமும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% சதவீதமும் வாக்குகள்பதிவாகியுள்ளன.

கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஜூனியர் விகடன் மெகா சர்வே முடிவுகள் இதோ! TNElections 2021

தேர்தலுக்கு முன்பாக பல்வேறு தனியார் ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதாகவே கருத்துக்கணிப்பு முடிவுகள் இருந்தன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளைத் தகர்த்து இரட்டை இலை மலருமா? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா? இல்லை உதயசூரியன் உதித்து முதன்முறையாக ஸ்டாலின் முதல்வர் ஆவாரா? 5 முனை போட்டியால் மாற்றம் நிகழுமா? மே-2ம் தேதி வெளியாகும் வாக்கு எண்ணிக்கையின் முடிவு இவை அனைத்துக்கும் பதிலாக அமையும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு