Published:Updated:

அதிர்ச்சி தந்த என்.சி.பி; அமைதியாகக் காய் நகர்த்திய பா.ஜ.க!- மகாராஷ்டிரா முதல்வரானார் பட்னாவிஸ்

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக பாஜக தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர்.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக நீடித்துவந்த பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் ஏற்பட்ட பதவி மோதல் கூட்டணி முறிவு வரை சென்றுவிட்டது. மகாராஷ்டிராவில் எப்படியேனும் ஆட்சியமைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சிவசேனா கட்சி கடந்த ஒரு வாரமாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

சிவசேனா
சிவசேனா

நேற்று வரை சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. சிவசேனா இந்துத்துவா சித்தாந்தம் கொண்ட கட்சி. ஆனால் தேசியவாத காங்கிரஸும் காங்கிரஸும் மதச் சார்பற்ற கட்சிகள், இதன் காரணமாக சிவசேனாவுடன் இணைய காங்கிரஸ் மிகவும் தயக்கம் காட்டி வந்ததாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த மூன்று கட்சிக்குள் நடந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை இறுதி வடிவம் பெற்றது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார், ``விரைவில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சியமையும், அடுத்த முதல்வராக உத்தவ் தாக்கரே இருப்பார்” என அறிவித்தார்.

சரத் பவார்
சரத் பவார்

இவரைத் தொடர்ந்து தன் மகனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, ``அனைத்து விவாதங்களும் நேர்மறையாக முடிந்துள்ளன. எங்களுக்குத் திருப்திகரமாக உள்ளது” எனக் கூறியிருந்தார். இதற்கிடையில் இன்று மூன்று நாள் பயணமாக டெல்லி செல்ல இருந்த மகாராஷ்டிரா ஆளுநர் தன் பயணத்தை திடீரென ரத்து செய்தார்.

இன்று (சனிக்கிழமை) மூன்று கட்சித் தலைவர்களும் இணைந்து ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. இன்றுடன் மகாராஷ்டிரா அரசியலில் நடந்து வந்த குழப்பம் தீரும் அன அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக, ஒரே இரவில் தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து, தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக என்.சி.பியின் அஜித் பவார் பதவியேற்றுள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

இன்று காலை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் இவர்களின் பதவியேற்பு மிகவும் எளிமையாக மும்பையில் நடந்துள்ளது. நேற்று மாலை வரை மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும் என அனைவரும் கூறிவந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது தேசிய அளவில் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.