புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக தெரிவித்த போக்குவரத்துத்துறை ஆணையர் சிவக்குமார், ``ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் ரூ.1,000 அபராதத்துடன், மூன்று மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்” என்று கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். அதையடுத்து, ”புதுச்சேரி மாநிலம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அதை மீறி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார் கிழக்கு – வடக்கு போக்குவரத்து எஸ்.பி மாறன்.

அதன் தொடர்ச்சியாக நவம்பர் 1-ம் தேதி முதல் அரசு ஊழியர்களும் போலீஸாரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார் காவல்துறை டி.ஜி.பி மனோஜ்குமார் லால். இந்த அறிவிப்புகளைப் பொருட்படுத்தாத இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர், வழக்கம்போல ஹெல்மெட் அணியாமல் சென்றனர். ஆனால் நவம்பர் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களை மடக்கிப்பிடித்து ரூ.1,000/- அபராதம் வசூலித்துவருகின்றனர் போக்குவரத்து போலீஸார். அதேசமயம் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸாரிடமும், அரசு ஊழியர்களிடமும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்காதது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அது குறித்து போக்குவரத்து போலீஸாரிடம் தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்துவந்தனர். அதன் தொடர்ச்சியாகப் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை அழைத்த டி.ஜி.பி மனோஜ்குமார் லால், “சட்டம் என்பது அனைவருக்கும்தான். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் போலீஸாக இருந்தாலும் அபராதம் விதியுங்கள். போலீஸார் ஹெல்மெட் அணிவதைக் கண்காணியுங்கள். பணிக்கு வரும் போலீஸாரும், பணி முடிந்து செல்லும் போலீஸாரும் ஹெல்மெட் அணிய வேண்டும்” என்று உத்தரவிட்டார். டி.ஜி.பி-யின் அந்த உத்தரவு அனைத்து போலீஸாருக்கும் வாக்கி டாக்கி மூலம் உடனே தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் ஒருசிலரைத் தவிர பெரும்பாலான போலீஸார் அந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. அதனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மீண்டும் வலியுறுத்தினார் டி.ஜி.பி. அதனடிப்படையில் இன்று காவல்துறை தலைமையகத்துக்கு ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த, பணி முடிந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் தலா ரூ.1,000/- அபராதம் வசூலித்து அதிரடிகாட்டியிருக்கிறது புதுச்சேரி போக்குவரத்து போலீஸ். டி.ஜி.பி மற்றும் போக்குவரத்துத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.