Election bannerElection banner
Published:Updated:

`சம்ஸ்கிருதம் தேசிய மொழி’... அம்பேத்கர் அப்படிச் சொன்னாரா?

அம்பேத்கர்
அம்பேத்கர்

`சம்ஸ்கிருதத்தை தேசிய அலுவல் மொழியாகக் கொண்டுவர வேண்டும்’ என்று அம்பேத்கர் சொன்னதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நாக்பூரில் மராட்டிய தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் (எம்.என்.எல்.யூ.) கட்டட திறப்புவிழா, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்ததினமான ஏப்ரல் 14-ம் தேதி நடைபெற்றது. அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பங்கேற்றுப் பேசினார். அப்போது, ``இந்த விழாவில் எந்த மொழியில் பேச வேண்டும் என்பதை காலையில் உறுதி செய்திருந்தேன். இன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள். பேசும்போது பயன்படுத்த வேண்டிய மொழிக்கும், வேலையின்போது பயன்படுத்த வேண்டிய மொழிக்கும் இடையிலான சச்சரவை இன்றைய தினம் எனக்கு நினைவூட்டுகிறது.

அம்பேத்கர்
அம்பேத்கர்

`இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும்’ என்ற திட்டத்தை அம்பேத்கர் முன்வைத்தார். வட இந்தியர்கள் தமிழ் மொழியை ஏற்றுக்கொள்ள முடியாததால், அதை அவர்கள் எதிர்க்கக்கூடும். அதைப்போல, தென்னிந்தியாவில் இந்தி எதிர்க்கப்படும் என்பது அம்பேத்கரின் கருத்து. ஆனால், வட இந்தியாவிலோ தென்னிந்தியாவிலோ சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால், அவர் இந்தத் திட்டத்தை முன்வைத்தார். ஆனால், அந்தத் திட்டம் வெற்றிபெறவில்லை. இந்த நாட்டின் மக்கள் மற்றும் ஏழைகள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அம்பேத்கர் புரிந்துவைத்திருந்தார்” என்று எஸ்.ஏ.பாப்டே பேசினார். தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இந்த மாதம் 23-ம் தேதி பணி ஓய்வு பெறவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தேசிய அலுவல் மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை அம்பேத்கர் முன்வைத்தார் என்று ஒரு தரப்பினரும், அம்பேத்கர் அப்படியொரு திட்டத்தை முன்வைத்தார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று மற்றொரு தரப்பினரும் சொல்லிவரும் நிலையில், தலைமை நீதிபதி பாப்டேவின் கருத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஸ்ரீராம் சேஷாத்ரி
ஸ்ரீராம் சேஷாத்ரி

இது குறித்து அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரியிடம் பேசினோம். ``உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது உண்மையான கருத்துதான். தேசிய அலுவல் மொழியாக எது இருக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்தபோது, சம்ஸ்கிருதத்தை அம்பேத்கர் முன்வைத்தார். அந்த உண்மையைத்தான் தலைமை நீதிபதி சொல்லியிருக்கிறார். இதில் சர்ச்சைக்கு இடமே இல்லை. அரசியல் நிர்ணய சபையின் விவாதக் குறிப்புகளை எடுத்துப் பார்த்தாலே அது தெரிந்துவிடும். அம்பேத்கர் அந்தக் கருத்தைக் கூறியது பற்றி `நேஷனல் ஹெரால்டு’ நாளேட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. எனவே, தலைமை நீதிபதி பேசியிருப்பது உண்மையான தகவல்தான். அதை அரசியலாக்குவது தவறானது என்பது என் கருத்து” என்றார்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் தேசிய அலுவல் மொழி பற்றி லட்சுமிகாந்தா மைத்ரேயா என்பவர் பேசியபோது, இந்த நாட்டில் இந்தியை அலுவல் மொழியாகக் கொண்டுவரக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சம்ஸ்கிருதம்தான் தேசிய அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை ஆதரித்து அம்பேத்கர் பேசினார். இந்தி பேசுபவர்கள் வடமாநிலத்தில் மட்டும்தான் இருக்கிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்தி பேசுவதில்லை. ஆனால், சம்ஸ்கிருதம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்பட்டுவரும் ஒரு மொழி. எனவேதான், சம்ஸ்கிருதத்தை தேசிய அலுவல் மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

சம்ஸ்கிருதம் எல்லோருக்கும் புரிகிற மொழி. காரணம், சம்ஸ்கிருதம் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒரு மொழி. சமஸ் என்றால் பொதுவானது. கிருதம் என்றால் செதுக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது, பல மொழிகளிலிருந்து செதுக்கப்பட்ட மொழிதான் சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருதம் யாருக்கும் தாய் மொழி கிடையாது. இது தேவபாஷை என்று சொல்வதெல்லாம் தவறு. அனைத்து மொழிகளிலிருந்தும் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட ஒரு மொழி. ஆகவேதான், சம்ஸ்கிருதம் தேசிய அலுவல் மொழியாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற லட்சுமி காந்தா மைத்ரேயாவின் கருத்தை ஆதரித்து அம்பேத்கர் பேசியிருக்கிறார். அதற்கு ஆதாரம் இருக்கிறது. இது குறித்த செய்தி, 1949-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி ஆங்கில நாளேட்டில் வெளியாகியிருக்கிறது. எனவே, இதில் சர்ச்சைக்கு இடமே கிடையாது” என்றார் நாராயணன் திருப்பதி.

இந்த விவகாரம் குறித்து அம்பேத்கரிய ஆய்வாளரும், தலித் முரசு பத்திரிகையின் ஆசிரியருமான புனிதப்பாண்டியனிடம் பேசினோம். ``சம்ஸ்கிருதத்தை தேசிய அலுவல் மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லவே இல்லை. அப்படியொரு செய்தி வேண்டுமென்றே தவறாகப் பரப்பப்படுகிறது. அம்பேத்கர் அப்படிச் சொன்னார் என்பதற்கு எந்தவோர் ஆதாரமும் கிடையாது. அம்பேத்கர் எத்தனையோ பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கிறார். எத்தனையோ பிரச்னைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். அவை பற்றியெல்லாம் இவர்கள் பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

உதாரணமாக, பத்து லட்சம் மக்களைத் திரட்டி `நான் இந்துவாக சாக மாட்டேன்’ என்று அம்பேத்கர் சொன்னார். ஒட்டுமொத்த உலகமும் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியபோது, சைமன் கமிஷனை அம்பேத்கர் வரவேற்றார். காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்த மக்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று அவர் சொன்னார். இவையெல்லாம் எழுத்துபூர்வமாக உள்ளன. இவை பற்றியெல்லாம் இவர்கள் விவாதிக்கிறார்களா? ஆனால், இவர்களுக்குத் தேவையான ஒன்றை, அதுவும் எந்த ஆதாரமும் இல்லாமல், சம்ஸ்கிருதம் பற்றிய விவகாரத்தைப் பேசுகிறார்கள்

புனிதப்பாண்டியன்
புனிதப்பாண்டியன்

சம்ஸ்கிருதத்தை அம்பேத்கர் கற்றிருக்கிறார். வர்ணாசிரம தர்மங்கள் அதன் நேரடித் தன்மையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத்தான் படித்தார். இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து எவ்வளவு மோசமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காகவே சம்ஸ்கிருதத்தை அவர் படித்தார். அப்படியிருக்கும்போது, இரண்டு சதவிகிதம் பேர்கூடப் பேசாத ஒரு மொழியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று அவர் சொன்னார் என்று கூறுவது மிகப்பெரிய அபத்தம்.

அம்பேத்கரின் சிந்தனைகள் 17 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவைதான் ஆதாரபூர்வமானவை. அந்த 17 தொகுதிகளில் எங்குமே சம்ஸ்கிருதத்தை தேசிய அலுவல் மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னதாக சொல்லப்படவில்லை. அவர் ஒரு திட்டம் தயாரித்துவைத்திருந்தார் என்று சொல்கிறார்கள். அந்தத் திட்டம் எங்கே இருக்கிறது என்று அவர்கள் சொல்ல வேண்டும். அந்தத் திட்டத்தைக் பொதுவெளியில் காண்பிக்க வேண்டும். எந்தவித ஆதாரமும் இல்லாத ஒரு விஷயத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே பேசுகிறார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

மொழிவாரி மாநிலங்கள் குறித்த அம்பேத்கரின் சிந்தனை தெளிவாக இருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் தொடர்பான அவரது புத்தகத்தில் சம்ஸ்கிருதம் அலுவல் மொழி என்பது பற்றி எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அவர் சொல்லாத ஒரு கருத்தை, போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள். இந்தப் போக்கு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அம்பேத்கருக்கு சாவர்க்கருடன் தொடர்பு இருந்தது என்றும், இந்து மகா சபாவுடன் அம்பேத்கர் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும், அவர்களுடன் பேசித்தான் இந்து மதத்தின் ஒரு கிளையாக இருக்கக்கூடிய பௌத்தத்தைத் தழுவினார் என்றும் பல பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பௌத்தம் இந்து மதத்தின் ஒரு கிளை கிடையாது. அதை அம்பேத்கர் கடுமையாக மறுத்திருக்கிறார். பௌத்தத்தைத் தழுவியதற்கான காரணங்களை அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு அம்பேத்கர் சென்றார் என்பதுகூட பத்திரிகைகள் வாயிலாகத்தான் சொல்லப்பட்டுவருகிறது. அதற்கு வேறு எந்த ஆதாரமும் கிடையாது. அம்பேத்கரின் 17 தொகுதிகளில் அப்படி எந்தவொரு செய்தியும் கிடையாது.

பாப்டே
பாப்டே

அம்பேத்கர் எங்கெல்லாம் சென்றார், எந்தத் தேதியில் என்னென்ன செய்தார் என்பவை அனைத்தும் பதிவுகளாக இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் முகாமுக்குச் சென்றார் என்பதற்கு எந்தவொரு குறிப்பும் கிடையாது. மகாராஷ்டிரா அரசு அம்பேத்கர் தொடர்பான ஓர் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில், 1930-களில் அம்பேத்கர் முதல் வட்ட மேசை மாநாட்டுக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து அவர் இறக்கும்வரை அவர் என்னென்ன செய்தார் என்பது பற்றி உளவுத்துறை கண்டறிந்த குறிப்புகள் உள்ளன. அதுதான் ஆதாரம். அதில் இவர்கள் சொல்வதுபோல எதுவும் இல்லை. ஒரு ’பேப்பர் கட்டிங்’கை வைத்துக்கொண்டு இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளில் செய்தி பிரசுரமாவதில் பல கோளாறுகள் உள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

அம்பேத்கர் குறித்து ஆதாரமில்லாத, தவறான செய்திகள் சிலரால் தொடர்ந்து சொல்லப்பட்டுவருவதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., சம்ஸ்கிருதம், சாவர்க்கர், இந்து மதம் ஆகியவற்றை அம்பேத்கருடன் தொடர்புபடுத்தி ஒரு தரப்பினர் சொல்லிவரும் செய்திகள் ஆளும் வர்க்கத்தினருக்கும், ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஏற்புடையவையாக இருக்கின்றன. அம்பேத்கரை எதிர்க்க முடியாத சூழலில், அவரை தன்வயப்படுத்த முயல்கிறார்கள். அதற்காக, அவர் சொல்லாதவற்றையெல்லாம் சொன்னதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அரக்கோணம் இரட்டைப் படுகொலையும் காரசார அரசியல் மோதலும்..!

சிலர் தங்களுக்குச் சாதகமான கருத்துகளைத் தவறாக எடுத்துச் சொல்லி, தங்கள் ஆளாக அம்பேத்கரை மாற்ற முயல்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தன்னிகரற்ற தலைவராக, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக அம்பேத்கர் இருக்கிறார்.

‘நேஷனல் ஹெரால்டு’ செய்தி
‘நேஷனல் ஹெரால்டு’ செய்தி

எனவே, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்வதற்கு அடித்தட்டு மக்களின் வாக்குகள் தேவையாக இருக்கின்றன. எனவே, இவ்வளவு காலம் அம்பேத்கரை விமர்சித்துவந்தவர்கள், இப்போது அவரைத் தங்கள் ஆளாகக் காட்டுவதற்கு முயல்கிறார்கள். அதனால்தான், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த இல்லத்தை ரூ. 30 கோடிக்கு வாங்கி, அதை நினைவு இல்லமாக மாற்றியிருக்கிறார்கள். டெல்லியிலும் மும்பையிலும் அம்பேத்கருக்கு நினைவகங்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

அதேநேரத்தில், மானியங்களை நிறுத்தி அம்பேத்கர் புத்தகங்கள் அச்சிடுவதை நிறுத்திவிட்டார்கள். அம்பேத்கருக்கு கட்டடங்களைக் கட்டுகிறார்கள். ஆனால், அவரது எழுத்துகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது” என்றார் புனிதப்பாண்டியன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு