Election bannerElection banner
Published:Updated:

குஷ்பு: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி...என்னதான் ஆச்சு?

குஷ்பு - பா.ஜ.க
குஷ்பு - பா.ஜ.க

பா.ஜ.க தரப்பில் இருந்தும் நடிகை குஷ்பு தரப்பில் இருந்தும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்துவந்த நிலையில் அந்தத் தொகுதியை பா.ம.க-வுக்கு ஒதுக்கியதன் பின்னணி என்ன?

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. பெரும்பாலும் பா.ஜ.க எதிர்பார்த்த அல்லது கேட்ட தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன என்றாலும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி இல்லாமல் அந்தப் பட்டியல் முழுமையானதாகத் தெரியவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் என்ற பேச்சு தொடங்கிய நாள் முதல் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளாரக நியமித்து பா.ஜ.க வேலைகளைத் தொடங்கிவிட்டது.

நடிகை குஷ்புவும் திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் மினி பா.ஜ.க அலுவலகம் ஒன்றைத் திறந்து மிகத் தீவிரமாக பா.ஜ.க-வுக்கு வாக்கு சேகரிக்கத் தொடங்கினார். ஒருபடி மேலே சொன்று தேர்தல் பொறுப்பாளராக மட்டுமல்லாமல் அந்தத் தொகுதியின் வேட்பாளராகவே தன்னை நினைத்துக்கொண்டு கடந்த மூன்று மாதமாக தேர்தல் பணிகளைச் செய்துவந்தார். அப்படி நினைக்க இன்னொரு காரணமும் உண்டு. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, ``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். நீங்கள் அனைவரும் சகோதரி குஷ்புவுக்கு வாக்களிக்க தயாரா?” என்று குஷ்பு தான் வேட்பாளர் என்று அறிவித்ததைப் போல பேசினார். இதுவும் குஷ்பு நம்பிக்கையோடு இருந்ததற்கு ஒரு காரணம்.

குஷ்பு - சி.டி.ரவி
குஷ்பு - சி.டி.ரவி

சி.டி.ரவியின் பேச்சால் உற்சாகமான நடிகை குஷ்பு தனக்கு ‘சீட்' கொடுத்துவிட்டதாகவே நினைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மிகவும் கவனம் செலுத்தினார். மேலும், தொகுதியில் தினந்தோறும் வீடு வீடாக சென்று பா.ஜ.க -வுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியில் நடிகை குஷ்பு நின்றால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என்று ஆரூடமும் சொல்லப்பட்டது.

#BREAKING பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் பட்டியல் வெளியானது!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பணிகளை செய்துவந்த நிலையில் அந்தத் தொகுதியை அ.தி.மு.க தலைமை, பா.ம.க-வுக்கு ஒதுக்கியதன் பின்னணி என்ன என்ற விவரங்களை அறிந்துகொள்ள பா.ஜ.க நிர்வாகிகளிடமும் பேசினோம். ``சென்னையில் ஆயிரம் விளக்கு, துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளுடன் சேர்ந்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் தொகுதியையும் எங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தோம். சென்னையில் அ.தி.மு.க தரப்பில் இருந்து எங்களுக்கு தருவதாக ஒப்புக்கொண்டவை இரண்டு தொகுதிகள் மட்டும்தான். அமித் ஷாவின் ஆதரவுடன் வினோத் செல்வம் துறைமுகம் தொகுதியைக் கேட்டு வாங்கிவிட்டார். தி.மு.க-வில் இருந்து பிரிந்து பா.ஜ.க-வில் இணைந்த போதே ஆயிரம் விளக்கு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் சேர்ந்தார் கு.க.செல்வம். அதனால் அவருக்கு அந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இவ்விரு தொகுதிகள் போக மூன்றாவதாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை எங்களுக்குத் தரமுடியாது என திட்டவட்டமாக அ.தி.மு.க மறுத்துவிட்டது.

குஷ்புவின் பரப்புரை
குஷ்புவின் பரப்புரை

பா.ஜ.க மேலிடத்திலும் பேசி அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுக்க முயன்றோம். ஆனால், தொகுதி எண்ணிக்கையில் மட்டும்தான் எங்களால் தலையிட முடியும். தமிழகத்தில் பா.ஜ.க-வின் பலம் என்ன, எங்கு போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்பது அங்கிருப்பவர்களுக்குத்தான் தெரியும். அதை வைத்துக்கொண்டு தொகுதிகளை நீங்கள்தான் முடிவெடுத்து கேட்டுப்பெற வேண்டும் என்று கடுகடுத்துவிட்டனர் ” என்கின்றனர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஒதுக்கப்பட்டதன் பின்னணி குறித்து பா.ம.க நிர்வாகிகளிடம் பேசினோம். “சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எங்கள் லிஸ்டிலேயே இல்லை. அது பா.ஜ.க தொகுதிதான். அதை ஏன் எங்களுக்கு ஒதுக்கினார்கள் என்றே தெரியவில்லை. எங்களுக்குத் தெரிந்தவகையில் அ.தி.மு.க-வுக்கே சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட ஆட்கள் இல்லை. அங்கே போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அதை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றுதான் இருந்தார்கள். ஆயிரம் விளக்கு, துறைமுகம் தொகுதிகள்தான் பா.ஜ.க-வின் முதல் சாய்ஸ். எனவே அவர்களுக்கும் இது தேவையாக இல்லை. எனவே எங்களிடம் தள்ளிவிட்டார்கள்.

அ.தி.மு.க., பா.ம.க ஒப்பந்தம்
அ.தி.மு.க., பா.ம.க ஒப்பந்தம்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குப் பதிலாக வட மாவட்டங்களில் கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கியிருந்தால் கூட எங்களுக்கு சந்தோசமாக இருந்திருக்கும். நாங்களும் உற்சாகமாக வேலைகளைத் தொடங்கியிருப்போம். இந்தத் தொகுதியில் யாரை போட்டியிட வைப்பது என்ற குழப்பத்தில்தான் மருத்துவரும், அன்புமணியும் இருக்கிறார்கள்” என்று குமுறுகிறார்கள்.

“ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ‘இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா... எந்தத் தொகுதி?’ என்ற கேள்வியை எதிர்கொண்டு வருகின்றேன். இப்போதும் அதே கேள்வியைக் கேட்கிறீர்கள். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். நான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா இல்லையா என்பதை மட்டுமல்ல எங்கு போட்டியிட வேண்டும் என்பதையும் கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்பதுதான் தேர்தல் போட்டி குறித்த கேள்விக்கு குஷ்புவின் பதிலாக இருக்கிறது.

மேலும், “உண்மையான போர் வீரனிடம் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. நானும் ஓர் உண்மையான வீரனைப் போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இறங்கி வேலைபார்த்தேன். இந்தத் தொகுதி மக்கள் எனக்கு அளித்த அன்பும் வரவேற்பும் உண்மையானது, தூய்மையானது. எந்த ஒரு கட்சியும் அடிமட்டத்தில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை எனக்குக் கொடுத்ததில்லை. கட்சிக்காக நான் மேலும் உழைக்கக் காத்திருக்கிறேன். அது கட்சிக்கும் நன்றாகத் தெரியும்” என ட்வீட் செய்திருக்கிறார். ‘சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எனக்குக் கிடைக்கும்னுதானே நீங்களும் நெனச்சீங்க... அப்போ நானும் அப்படி நெனச்சதில் தப்பில்லையே’ என்று குஷ்புவின் மனசாட்சி கேட்பதாக இருக்கின்றன இந்த ட்வீட்டுகள்.

கௌதமி
கௌதமி

இவர் தவிர பா.ஜ.க-வில் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் நடிகைகள் காயத்ரி ரகுராம் மற்றும் கௌதமி. காயத்ரி ரகுராம் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பப்பட்டதாக தெரிகிறது. அதே போல கௌதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பி அங்கே தேர்தல் வேலைகளையும் தொடங்கிவிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கௌதமி-க்கு ஒருவேளை விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. காயத்ரி ரகுராம் மற்றும் குஷ்பு-க்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு