Election bannerElection banner
Published:Updated:

கட்சியைக் கலைக்கும் முடிவை எடுத்தாரா தினகரன்? அ.ம.மு.க-வின் எதிர்காலம் இனி என்னவாகும்?

தினகரன்
தினகரன்

தினகரன் கட்சியைக் கலைக்கப்போவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக வெளியான தகவல்கள் உண்மையா... வரும் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடுகிறதா?

`அ.தி.மு.க கூட்டணிக்குள் அ.ம.மு.க-வும் வரப்போகிறது, பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அ.ம.மு.க-வுக்குப் பிரித்துக் கொடுக்கப்படப்போகிறது' என்றெல்லாம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வந்து சென்ற பிறகு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ``நான் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்'' என திடீரென அறிவித்தார் சசிகலா. இந்தநிலையில், தினகரன் அ.ம.மு.க-வைக் கலைக்கப்போவதாக கடந்த இரண்டு நாள்களாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுச் சிறை வாசத்துக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. தமிழக எல்லையான ஓசூரிலிருந்து சென்னை வரை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அவரின் ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்டது. சசிகலாவின் வருகைக்குப் பிறகு, தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழும் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால், அ.தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் யாரும் சசிகலாவைச் சென்று சந்திக்கவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்குப் பிறகு சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்களால் சொல்லப்பட்டு வந்த நிலையில், ``நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்'' என அறிக்கைவிட்டுவிட்டு அமைதியாகிவிட்டார்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

இந்தநிலையில், சசிகலாவை நம்பியிருந்த தினகரன் இனி என்ன முடிவெடுப்பார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஆனால், மார்ச் 3-ம் தேதி முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அ.ம.மு.க கட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்துவருகின்றனர். அவர்களுக்கான நேர்காணல், 8, 9-ம் தேதிகளில், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கும்; 10-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், தினகரன் கட்சியைக் கலைக்கப்போவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக வெளியான தகவல்கள் உண்மையா... வரும் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடுகிறதா? அ.ம.மு.க வட்டாரத்தில் பேசினோம்,

``சசிகலா அம்மையாருக்காகத்தான் தினகரன் அ.ம.மு.க என்கிற கட்சியையே உருவாக்கினார். அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல், 22 தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் நாங்கள் பெற்றோம். எங்களின் முக்கியத்துவத்தை அ.தி.மு.க-வுக்கு உணர்த்தினோம். அதுமட்டுமல்ல, சின்னம்மா விடுதலையான பிறகு பிரமாண்ட வரவேற்புடன் தமிழகத்துக்கு அழைத்து வந்தோம். தொடர்ந்து, சின்னம்மாவின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என முடிவு செய்திருந்தார் தினகரன்.

சசிகலா
சசிகலா

ஆனால், திடீரென சின்னம்மா இப்படியோர் அறிவிப்பைச் செய்ததும், தினகரன் அதிர்ச்சியடைந்துவிட்டார். பொருளாதாரரீதியாகவும் சின்னம்மாவிடமிருந்து உதவிகள் கிடைக்காமல் போனதால்தான், கட்சியைக் கலைத்துவிடலாமா என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார். ஆனால், மூத்த நிர்வாகிகள் சிலர் நேரில் சென்று சமரசம் பேசிய பிறகு அமைதியாகியிருக்கிறார். ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில், அ.ம.மு.க நிச்சயமாகப் போட்டியிடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த எஸ்.டி.பி.ஐ போன்ற சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்'' என்றவர்களிடம்,

'கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் அ.ம.மு.க-வால் வெல்ல முடியுமா?' எனக் கேட்க,

அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு சீட்...  தினகரன் எதிர்ப்பைச்  சரிக்கட்ட முதல்வரின் புதிய அஸ்திரம்?

``எங்களைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களில் அ.தி.மு.க ஜெயிக்கக் கூடாது என்பது மட்டுமே எங்களின் விருப்பம். எங்கள் வேட்பாளர் நிச்சயமாக கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள். துரோகம் செய்தால் அதற்கான பலனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அ.தி.மு.க-வை மீட்டெடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் நாங்கள் எப்போதும் பின்வாங்க மாட்டோம். எங்கள் கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதுதான்'' என அடித்துக் கூறுகின்றனர்.

அ.ம.மு.க
அ.ம.மு.க

அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு இல்லாமல் போகவே தற்போது, குறிப்பிட்ட நாற்பது தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனத்துடன் அ.ம.மு.க களம் காணவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ``ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து, பணியைத் தீவிரப்படுத்துங்கள்'' என தினகரன் அட்வைஸ் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

கட்சியைக் கலைக்கும் முடிவை எடுத்தாரா தினகரன்?  அ.ம.மு.க-வின் எதிர்காலம் இனி என்னவாகும்?

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு