Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் எடப்பாடியும் - ஓர் அலசல்

எடப்பாடி பழனிசாமி

``இதை அரசியலாக மாற்றுவதைவிட குற்றவியல் வழக்காக மாற்றுவதுதான் சரியாக இருக்கும்.” - வழக்கறிஞர் பாலமுருகன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் எடப்பாடியும் - ஓர் அலசல்

``இதை அரசியலாக மாற்றுவதைவிட குற்றவியல் வழக்காக மாற்றுவதுதான் சரியாக இருக்கும்.” - வழக்கறிஞர் பாலமுருகன்

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தச் சம்பவத்தில் ஸ்னோலின் என்ற மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் 23.05.2018-ல் ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினி உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் குழு, 3,000 பக்கங்கள்கொண்ட தனது அறிக்கையை 2022-ம் ஆண்டு, மே 18-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அப்போது அதில் சொல்லப்பட்ட பல்வேறு தகவல்கள் கசிந்த நிலையில், நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில் அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகளைத் திரும்பப்பெறவும், போராட்டத்தின்போது காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகளில் சில ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குளறுபடிகள் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் வெளிப்பட்டிருக்கின்றன. பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறியிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டிருக்கிறது உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு `துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி-யில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அப்போதைய உளவுத்துறை தலைவர் (ஐஜி) கே.என்.சத்யமூர்த்தி இபிஎஸ்-ஸை நேரில் சந்தித்து மீன்பிடி தடைக்காலம் இருப்பதால், மீனவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுக்கும் பொருட்டு ஒரு பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதன் அவசியத்தையும் கூறியிருக்கிறார். போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைத் திட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கைத் தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில உளவுத்துறை அனுப்பியிருக்கிறது. இது திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) கபில்குமார் சராட்கர், காவல்துறை தென் மண்டலத் தலைவர் (ஐஜி) சைலேஷ்குமார் யாதவ் ஆகியோரின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது.

 ஸ்டாலின், நீதிபதி அருணா ஜெகதீசன்
ஸ்டாலின், நீதிபதி அருணா ஜெகதீசன்

நிலைமை இவ்வாறு இருக்க சம்பவம் நடந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கைக்குப் பிறகு நடவடிக்கை இருக்குமா என்கிற கேள்வியோடு, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் ச.பாலமுருகனிடம் பேசினோம்.

``இவை எல்லாமே கூட்டுச் சதிதான். அப்போதைய முதலமைச்சருக்குத் தெரிந்ததோ, தெரியவில்லையோ அது வேறு விஷயம். எடப்பாடியை இதில் கொண்டு வரலாமா, வேண்டாமா என்பதைவிட அந்த அதிகாரிகளுக்கு யார் உத்தரவு கொடுத்தது, சுட்டது என்று ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கொலை செய்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. எனவே, இந்தக் கூட்டுச்சதியில் ஈடுபட்டவர்கள்மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும். இதற்கு முன்பு இதுபோல் நடந்த சம்பவங்களில் பல கமிஷன் அறிக்கைகள் கொலைக் குற்றங்களாகச் சாட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக சீக்கியர்கள் படுகொலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அமைத்த ஒரு கமிஷன் அறிக்கையில், நேரடியாக எந்தெந்த அதிகாரிகள் ஸ்பாட்டில் நின்று உத்தரவு போட்டார்களோ அவர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அருணா ஜெகதீசன் அறிக்கையில், ‘குற்றத்துக்கு சதி செய்வது, அதிலேயே திட்டமிட்டு படுகொலை செய்வதற்கான வியூகம் வகுத்தது எல்லாம் ஒரு நாளில் நடக்கவில்லை. எல்லாமே திட்டமிடப்பட்ட கொலை’ என்பத்தைத்தான் சொல்கிறது. அதில் முதல்வராக இருந்தவரும் பங்கெடுத்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இதை அரசியலாக மாற்றுவதைவிட குற்றவியல் வழக்காக மாற்றுவதுதான் சரியாக இருக்கும். ஒரு முதல்வரே ‘சுடு...’ என்று சொன்னாலும் ஒரு அதிகாரி, சட்டவிரோதமான உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது” என்கிறவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக விசாரித்துவரும் சி.பி.ஐ-மீது சில விமர்சனங்களை முன்வைக்கிறார்.

ச.பாலமுருகன்
ச.பாலமுருகன்

“இந்த வழக்கில் கையில் அடிபட்டவர்கள், காலில் அடிபட்டவர்கள், குண்டு பாய்ந்தவர்கள் என பாதிக்கப்பட்ட எல்லோரையும் குற்றவாளியாக சி.பி.ஐ போட்டிருக்கிறார்கள். யாரெல்லாம் சுட்டார்களோ, சதி செய்தார்களோ அவர்களெல்லாம் சாட்சிகளாகப் போடப்பட்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே இந்த வழக்கில் ஒன்றிய அரசின் ஒரு பிடி இருக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு, இது சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதில் சி.பி.ஐ ஒன்றும் பண்ணப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம். எந்த ஆட்சி வந்தாலும் காவலர்கள் தவறு செய்தால் விட்டுவிடலாம் என்கிற மென்மைப் போக்கைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களில் அரசியல் கட்சி, ஆட்சியாளர்களின் பொறுப்பு என்ன இருக்கிறது என்கிற கேள்வியைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கமிஷன் அறிக்கை வெளியே வந்ததற்கு, பத்திரிகையாளர் இளங்கோ ராஜகோபாலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் வெளியிடாமல் இருந்தால் இது வராமல்கூட போயிருக்க வாய்ப்பிருக்கிறது. ஜல்லிக்கட்டு ஆணையம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இன்று வரை அந்த அறிக்கை மேசைக்கு வரவில்லை” என்கிறார்.