Published:Updated:

கஜாவிலிருந்து பாடம் கற்றதா தமிழக அரசு?

கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்கள்
கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்கள்

நவம்பர் 15ம் தேதி மாலை வரை மக்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. வானம் சற்று கம்மியிருக்கிறது. கடல் லேசாக சீற்றமாக இருந்தது. மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்றார்கள் அங்கிருந்த நண்பர்கள். ஆனால், அடுத்து...

2018... இன்றைய நாளிலிருந்து பத்து நாள்களுக்கு முன்புதான்... நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவுதான் கஜா புயல் காவிரிப்படுகையைச் சூறையாடியது. அந்த நள்ளிரவை இப்போது நினைத்தாலும் பதறித்தான் போவார்கள் காவிரிப்படுகை மக்கள். இன்றளவும் முறிந்து விழுந்த வாழ்வாதாரத்தை மீட்கமுடியவில்லை.

புயலை கதைகளிலும், செய்திகளிலும் மட்டுமே அறிந்திருந்த அந்த மக்கள், அதன் கோரதாண்டவத்தைக் கண்டு நிலைகுலைந்து போனார்கள். நவம்பர் 10-ம் தேதி, அந்தமான் கடற்பரப்பில் ஓர் காற்றழுத்த தாழ்வு தோன்றியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 11-ம் தேதி, அது புயலாக வலுவடைந்துவிட்டதாகவும், ஸ்ரீஹரிகோட்டா, கடலூர் இடையே கரையைக் கடக்குமென்றும் அறிவிப்பு வெளியானது. அது இலங்கையின் முறை... 'கஜா' என்று அந்நாடு புயலுக்குப் பெயர் சூட்டியது. நவம்பர் 15 காலை, 'இன்று நள்ளிரவு கடலூர்-பாம்பனுக்கு இடையில் புயல் கரையைக் கடக்குமென்றும் அறிவிப்பு வெளியானது. அந்த நிமிடம் வரை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மக்களுக்குப் புயலின் தீவிரவோ, வீரியமோ புரியவில்லை.

மறக்க முடியாத கஜா புயல்!
மறக்க முடியாத கஜா புயல்!

பொதுவாக, வங்கக்கடலில் தோன்றும் புயல்கள், கடலூர், விசாகப்பட்டினம், ஓடிஷா கரைப்பகுதிகளிலேயே அதிக பாதிப்பை விளைவிக்கும். கடந்த 25 ஆண்டுகளில் காவிரிப்படுகை எந்தப் புயலையும் சந்தித்தில்லை. அதனால், அவர்கள் புயலை எதிர்பார்க்கவில்லை. மேலும் 15ம் தேதி மதியம் வரை புயலுக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதனால் மக்கள் இயல்பாகவே இருந்தார்கள்.

தஞ்சை: கஜா புயல் நினைவு...  நிவர் புயலை அச்சத்துடன் எதிர்கொள்ளும் டெல்டா மக்கள்!

புயல் தீவிரமடைந்துவரும் நிலையில் பாதிப்பின் தன்மையை அரசும் சரிவரக் கணிக்கவில்லை. வழக்கமாக புயல் நேரத்தில் நடக்கும் அடிப்படைப் பணிகள் நடக்கத்தான் செய்தன. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால், புயலுக்குப் பிறகு மக்களுக்குத் தேவைப்படும் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கவில்லை. நிலையை முழுமையாக அவதானித்து போதிய அளவுக்கு மீட்புக்குழுக்கள், நிவாரணக் குழுக்கள் அனுப்பப்படவில்லை.

கஜா சுவடுகள்
கஜா சுவடுகள்
படங்கள்: ம.அரவிந்த்

நவம்பர் 15-ம் தேதி மாலை வரை மக்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. வானம் சற்று கம்மியிருக்கிறது. கடல் லேசாக சீற்றமாக இருந்தது. மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்றார்கள் அங்கிருந்த நண்பர்கள்.

நள்ளிரவு 10 மணிக்கு மேல் படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்தது. 16-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புயலின் கண்பகுதி கரைகடந்தது. 7 மணிக்கெல்லாம் மொத்தத்தையும் முடித்துவிட்டு கரைந்துபோனது புயல்.

நாகப்பட்டினம் தொடங்கி, திருவாவூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை வரை மொத்தமாகக் குலைந்து விட்டது.

காவிரிப் பிரச்னை, உற்பத்திக்கு போதிய விலை கிடைக்காதது என பல காரணங்களால் நெல் சாகுபடியிலிருந்து படிப்படியாக விலகி, தென்னை சாகுபடிக்கு பெரும்பாலான காவிரிப்படுகை விவசாயிகள் மாறியிருந்தார்கள். மூன்று மாதத்திற்கு ஒரு வெட்டு விழும்... ஓலை முதல், தேங்காயை உரித்த மட்டை வரை எல்லாம் காசு... தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் மிகவும் வளமான வாழ்க்கையை எட்டிப் பிடித்திருந்தார்கள். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதை வைத்து பல கனவுகளை கணக்குகளை போட்டிருப்பார்கள். ஒட்டுமொத்தமாக அவர்களின் வாழ்க்கையை அழித்து விட்டது கஜா புயல்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மூதாட்டி
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மூதாட்டி
ம.அரவிந்த்
எல்லா ஊர்களிலும் ஓலங்கள்... கதறல்கள்... பட்டுக்கோட்டை அருகே, பாட்டியைப் பாதுகாக்கச் சென்ற இரண்டு சகோதரர்கள் உள்பட நான்குபேர் வீடிடிந்து இறந்தார்கள். பூப்பெய்திய ஒரு சிறுமி மரம் விழுந்து இறந்தார். ஒரு பக்கம் மரணங்கள்... இன்னொரு பக்கம் மொத்த வாழ்க்கையையும் இழந்து நின்றோரின் கதறல்...

அரசு தரப்பிலிருந்து போதிய அறிவிப்புகள் இல்லாததால், மக்கள் புயலின் தாக்கம் புரியாமல் கால்நடைகளை வீட்டுக்கு அருகில் உள்ள மரங்களில் கட்டிவைத்திருந்தார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன. 63 மனிதர்களின் உயிர்கள் பறிபோயின.

புயல் குறித்து முன்கூட்டியே கணித்து, குடிநீர், உணவு உள்பட அடிப்படைத் தேவைகளையும் மீட்புக்குழுக்களையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கத் தவறியது அரசு. குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. பலர் வீடிழந்து தெருவுக்கு வந்தார்கள். அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. குழந்தைகளுக்குப் பால் கிடைக்கவில்லை. அடுத்த வேளைக்கு உடுத்த ஆடைகள் இல்லை. மெழுகுவர்த்திகள்கூட கிடைக்காமல் மக்கள் தவித்தார்கள். ஊர்கள் துண்டிக்கப்பட்டன. டவர்கள் விழுந்ததால் முற்றிலும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டதால் மின்சாரம் இல்லை. சென்னைக்கு வெகு தொலைவில் நிகழ்ந்ததால் ஊடகங்களின் பார்வைகூட பாதிக்கப்பட்ட பகுதிகள்மீது படவில்லை. அரசும் மொத்தமாக கைவிட்டது. கடைநிலை அதிகாரிகள்கூட எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் மக்களே களமிறங்கினார்கள். படிப்படியாக செய்திகள் பரவ, உறவுகளைக் கைதூக்கிவிட தமிழகம் எங்கும் இருந்து தன்னார்வலர்கள் நிவாரணப் பொருள்களோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்தார்கள்.

கஜா சுவடுகள்
கஜா சுவடுகள்

இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் பாதிப்பின் வலியிலிருந்து காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. பல குடும்பங்களை மீளாத்துயரில் தள்ளிவிட்டது கஜா. ஆனால், மக்கள் இன்னொரு புயலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.

உயர்ந்த மரங்களில் கிளைகளை கவாத்து செய்து தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். கால்நடைகளைப் பொதுப்பட்டியில் அடைக்கிறார்கள். வீடுகளில் வேய்ந்திருந்த தகரங்களை அப்புறப்படுத்தி ஒதுக்கி வைக்கிறார்கள். போதிய உணவை வாங்கி இருப்பில் வைக்கிறார்கள்.

நிவர் புயல் - சென்னை
நிவர் புயல் - சென்னை

அரசும் கஜா புயலில் பாடம் படித்திருக்கும். புயலுக்கு பின் மக்களை கைவிடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்க வாய்ப்புள்ள எல்லாப் பகுதிகளுக்கும் நிறைவாக உணவு, பால், தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். மக்கள் அடங்கிய நிவாரணக் குழுக்களை, மீட்புக்குழுக்களை அமைத்து செயலில் இறங்க வேண்டும். குறிப்பாக, அதிகாரிகள் மக்களோடு நிற்க வேண்டும். நகரங்கள் மட்டுமல்ல... கிராமங்களையும் உள்ளடக்கியதுதான் தமிழகம். அங்கிருப்பவர்களும் மனிதர்கள்தான். கிராமங்களை இலக்கு வைத்து நிவாரணப் பணிகளை செய்ய வேண்டும். புயலுக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட வேண்டும். மக்களுக்கு பாரபட்சமில்லாமல் நிவாரணப் பொருள்களையும் இழப்பீடுகளையும் வழங்க வேண்டும்.

புயல் வரும்... அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். மக்கள் தயாராகிவிட்டார்கள். அரசும் தயாராக வேண்டும்!
அடுத்த கட்டுரைக்கு