Published:Updated:

`மூத்த நிர்வாகியை மிரட்டினாரா அமைச்சர் காந்தி மகன்?!’ - ராணிப்பேட்டை திமுக-வில் என்ன நடக்கிறது?

`ராணிப்பேட்டை மாவட்டத்தில், தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரை ஓரங்கட்டும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார் அமைச்சர் காந்தியின் மகன் வினோத்’ என்ற குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள் மூத்த நிர்வாகிகள்.

கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் மகன் வினோத்துக்கு சமீபத்தில்தான் தி.மு.க-வில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் கட்சி, ஆட்சி இரண்டிலும் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திலிருக்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு இதுவரை கட்சிப் பொறுப்பு வழங்கப்படாதது, அவர்கள் இருவரையும் வருத்தமடையச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பதவி கிடைத்த குஷியில், காந்தியின் மகன் வினோத், நவம்பர் 7-ம் தேதி, ராணிப்பேட்டையைத் தாண்டி ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என ஒரு மினி சுற்றுப்பயணமே மேற்கொண்டிருக்கிறார். வினோத்துக்கு அங்கிருக்கும் தி.மு.க நிர்வாகிகள் சிலர் உற்சாக வரவேற்பு கொடுக்க... ஏற்கெனவே எதிரும் புதிருமாக இருக்கும் கதிர் ஆனந்த் தரப்பினர் பயங்கர அப்செட்டாம். சீனியர்கள் இடையே நிலவும் பனிப்போர், இப்போது வாரிசுகளிடமும் பற்றிக்கொண்டிருக்கிறது.

ஸ்டாலினுடன் காந்தி மற்றும் அவரின் மகன் வினோத்
ஸ்டாலினுடன் காந்தி மற்றும் அவரின் மகன் வினோத்

இது போதாதென்று, ராணிப்பேட்டை மாவட்டத்திலிருக்கும் தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரை ஓரங்கட்டும் வேலைகளிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறாராம் காந்தியின் மகன் வினோத். மாவட்டச் செயலாளராகவும் காந்தி இருப்பதால், அவரின் குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சிக்குள் அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். காந்தி மகனால் முதலில் பாதிக்கப்பட்டிருப்பவர் வாலாஜாபேட்டை நகரச் செயலாளரான புகழேந்தி எனக் கூறப்படுகிறது.

நம்மிடம் பேசிய உள்விவரம் அறிந்த ராணிப்பேட்டை தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘‘அமைச்சர் காந்தி குடும்பத்தினர் சமூகரீதியாகச் செயல்படுகிறார்கள். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், காந்தியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகமாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர், வாலாஜாபேட்டை ஒன்றியக்குழுத் தலைவர், திமிரி ஒன்றியக்குழுத் தலைவர், ஆற்காடு ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பதவிகளில் அமரவைக்கப்பட்டிருப்பவர்கள் காந்தியின் ஆசிப்பெற்ற அவரின் சமூகத்தினர்தான். மாற்றுச் சமூக நிர்வாகிகளிடம் ஒருவித வெறுப்புணர்வையும் காட்டுகிறார்கள்.

நகரச் செயலாளர் புகழேந்தி
நகரச் செயலாளர் புகழேந்தி

வாலாஜாபேட்டை நகரச் செயலாளர் புகழேந்தியை அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்க மிரட்டிவருகிறார் காந்தியின் மகன் வினோத். புகழேந்தியின் தந்தை த.க.பாலசுந்தரம் தி.மு.க தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கழகப் பணியாற்றியவர். 38 ஆண்டுகள் நகரச் செயலாளராகவும் பாலசுந்தரம் கட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறார். 1962-ல் நடைபெற்ற விலைவாசிப் போராட்டத்தில் பங்கேற்ற பேரறிஞர் அண்ணா 70 நாள்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அண்ணாவுடன் இருந்தவர்களில் பாலசுந்தரமும் ஒருவர். அதை நினைவுகூரும்விதமாக, ஆண்டுதோறும் திராவிட இயக்க தீரர்கள் நினைவுநாளில், ‘முரசொலி’யில் த.க.பாலசுந்தரத்தின் படத்தை தி.மு.க தலைமையே வெளியிட்டு மரியாதை செலுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1974-ம் ஆண்டு, நவம்பர் 24-ம் தேதி வேலூர் அண்ணா கலையரங்கத்தில் தி.மு.க சார்பில் நடைபெற்ற மாநில சுயாட்சிப் பயிற்சி பாசறையில் புகழேந்தி கலந்துகொண்டார். அப்போது, அவருக்கு வயது 13. இப்போது வயது 60. தொடர்ந்து, இயக்கத்துக்காகவே ஓடிக்கொண்டிருக்கும் புகழேந்தி போன்ற முன்னோடிகளைக் கட்டம்கட்டுவது தவறான நடைமுறை. வாலாஜாபேட்டை நகரச் செயலாளர் பொறுப்பை புகழேந்தியிடமிருந்து பறித்துவிட்டு, தனக்கு வேண்டப்பட்ட நபரை அதில் அமரவைக்க திட்டமிட்டிருக்கிறாராம் காந்தியின் மகன் வினோத்.

காந்தியின் மகன் வினோத்
காந்தியின் மகன் வினோத்

இதற்காக, வாலாஜாபேட்டை நகரப் பொறுப்பிலிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளைத் தனது அலுவலகத்துக்கே வரவழைத்து, மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறாராம். நகரச் செயலாளர் புகழேந்தியையும் அழைத்துப் பேசிய வினோத், ‘நாங்கள் பொறுப்பிலிருந்து எடுத்தால் உங்களுக்குத்தான் அசிங்கம். அதனால், நீங்களே கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போங்கள். வேண்டுமெனில், ஏதேனும் அணிகளில் பொறுப்பு வாங்கித் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

‘நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள். நானே பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகிறேன்...’ என்று புகழேந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘காரணம் சொல்ல முடியாது. என்னுடைய முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும்’ என்று காந்தியின் மகன் வினோத் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நகரச் செயலாளர் புகழேந்தி போன்ற மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டும் அமைச்சர் மகனின் செயலை தலைமையே தடுக்க வேண்டும். இன்று புகழேந்தி, நாளை இன்னொரு மூத்த நிர்வாகி என்று ஒவ்வொருவரையாக மிரட்டி ராஜினாமா செய்யச் சொல்வார்கள். இந்த விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட வேண்டும்’’ என்றனர்.

மூத்த நிர்வாகிகளின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் காந்தியின் மகன் வினோத்தை போனில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். நம்மிடம் அவர், ‘``உட்கட்சி விவகாரத்தை வெளியில் சொல்ல முடியாது. சமூகரீதியாகவும் நாங்கள் செயல்படவில்லை. நான் எந்தப் பஞ்சாயத்தையும் செய்யவில்லை’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு