Published:Updated:

வாத்தியக் கருவிகளை எட்டி உதைத்த போலீஸ் எஸ்.ஐ! - சர்ச்சையைக் கிளப்பிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

எம்.வடிவேல்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், வாத்தியக் கருவிகளை காலால் எட்டி உதைத்த போலீஸ் எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் புகார் அளித்துள்ளன.

ஊர்வலத்தில் எஸ்.ஐ
ஊர்வலத்தில் எஸ்.ஐ

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் மதரீதியான பிரச்னைகளும் எழுவதால், ஒவ்வோர் ஆண்டும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது காவல்துறையின் வழக்கம். ஆனால், இந்தமுறை கெலமங்கலம் நகரப் பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளரின் செயலால் கொதிப்பில் ஆழ்ந்துள்ளனர் பா.ஜ.க பிரமுகர்கள்.

எஸ்.ஐ செல்வராகவன்
எஸ்.ஐ செல்வராகவன்

தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள கெலமங்கலம் நகரப் பகுதியில், கடந்த 7-ம் தேதி நடைபெற்ற விநாயகர் ஊர்வலமானது, ஜிபி தெருவில் தொடங்கி சின்னட்டி குளம் வரை நடைபெற்று வந்தது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் செல்வராகவன், மேளதாளத்துடன் ஊர்வலம் நடத்தி வந்த இளைஞர்களையும் அவர்கள் இசைக்கப் பயன்படுத்திய வாத்தியங்களையும் காலால் எட்டி உதைத்து, ஊர்வலத்தை விரைந்து முடிக்கும்படி கூறியிருக்கிறார். இதனால் இந்து அமைப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.

Vikatan

இதுதொடர்பாக, கெலமங்கலம் பா.ஜ.க நகரச் செயலாளர் பாலகிருஷ்ணன், தேன்கனிக்கோட்டை உதவி ஆய்வாளர் சங்கீதாவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், `உதவி ஆய்வாளர் செல்வராகவன், கெலமங்கலம் விநாயகர் ஊர்வலத்தின்போது, வாத்தியங்களை இசைத்துக்கொண்டு வந்த இளைஞர்களையும் வாத்தியங்களையும் காலால் எட்டி உதைத்து, தகாத வார்தைகளால் பேசி இழிவுபடுத்தியுள்ளார். உதவி ஆய்வாளரின் இந்தச் செயல் அவமதிக்கும்விதமாக உள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டு வீடியோ ஆதாரத்தையும் இணைத்திருக்கிறார்.

இதுகுறித்து எஸ்.ஐ செல்வராகவனிடம் விளக்கம் கேட்டோம். ``நீங்கள் குறிப்பிடும் தேதியில் அப்படியொரு சம்பவம் நடந்ததாக நினைவில் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.