Published:Updated:

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கின் போக்கும்... அரசியல் சலசலப்புகளும் - ஒரு பார்வை!

மாணவி தற்கொலை விவகாரம்

மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கிவருகிறது.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கின் போக்கும்... அரசியல் சலசலப்புகளும் - ஒரு பார்வை!

மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கிவருகிறது.

Published:Updated:
மாணவி தற்கொலை விவகாரம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி ப்ளஸ்டூ படித்துவந்த மாணவி, தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை, பா.ஜ.க தீவிரமாகக் கையிலெடுத்துவருகிறது.

அரியலூரைச் சேர்ந்த அந்த மாணவி பள்ளி விடுதியில் தங்கிப் படித்துவந்தார். அவர் ஜனவரி 9-ம் தேதி தொடர்ந்து வாந்தியெடுத்ததையடுத்து, மறுநாள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி பூச்சி மருந்தை உட்கொண்ட விஷயம் தெரியவந்ததால், உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஜனவரி 15-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த நிலையில், தன்னை மதம் மாறும்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு உடன்படாததால் தன்னை அதிகமாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் அந்த மாணவி சொல்வது போன்ற வீடியோ சமூக ஊடங்களில் பரவியது. ஜனவரி 16-ம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், விடுதியைச் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தியதாக விடுதி வார்டன் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். ஜனவரி 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, `கட்டாய மதமாற்ற முயற்சியால்தான் மாணவி உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்து, பள்ளிக்கூடத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் கோரின. அந்த நேரத்தில், மதம் மாறச் சொல்லி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால் விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றம்சாட்டி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்திருந்தார். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா விளக்கம் அளித்தார்.

பா.ஜ.க போராட்டம்
பா.ஜ.க போராட்டம்

காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, ``சிகிச்சையில் இருந்த மாணவியிடம் மருத்துவர்களின் அனுமதியுடன் மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலம் பெற்றார். அதில், மதமாற்றம் தொடர்பாக எந்தவிதத் தகவலையும் அந்த மாணவி தெரிவிக்கவில்லை. மேலும், மாணவியின் பெற்றோரும் மதமாற்றம் போன்ற தகவலைச் சொல்லவில்லை. மாஜிஸ்ட்ரேட் கொடுத்த தகவலிலும் அது போன்ற தகவல் இல்லை. எனவே, மதமாற்றம் குறித்து எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்படவில்லை” என்று கூறினார்.

மேலும், மருத்துவமனையில் இருந்தபடி மாணவி பேசுவது போன்ற வீடியோவைப் பரப்பியது, சிறார் சட்டப்படிக் குற்றம் என்பதால், அந்த வீடியோவை எடுத்து பரப்பியது யார் என்பது பற்றி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ பதிவில் இடம்பெற்றிருப்பது மாணவியின் உண்மையான குரலா, வீடியோ உண்மையானதா என்பதைத் தடயவியல் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தவேண்டியிருக்கிறது” என்றார். மேலும், தனது உத்தரவில் பல விவரங்களைக் கூறிய நீதிபதி, வழக்கு மீண்டும் ஜனவரி 28-ம் தேதி விசாரிக்கப்படும் என்றார்.

இந்தப் பிரச்னையையைத் தீவிரமாகக் கையிலெடுத்துள்ள பா.ஜ.க-வும், இந்துத்துவா அமைப்புகளும், கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுத்தியதால்தான் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. அந்தப் பள்ளி நிர்வாகிகளைக் கைதுசெய்ய வேண்டும், பள்ளிக்கூடத்தை மூட வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

சென்னையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜனவரி 25-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ஜ.க தலைவர்கள், மத மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தியதுதான் மாணவி தற்கொலைக்குக் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் பேசினர்.

அரியலூர் மாணவி தற்கொலையையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றன. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ``அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடித்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

மாணவி மரணத்துக்கு மதமாற்ற சாயம் பூசுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ``மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் தொடர்பான நிர்பந்தம்தான் காரணம் என்று போலியான ஒரு வீடியோவை பா.ஜ.க-வினர் தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில், மதத்தைவைத்து வெறுப்பு அரசியலை கிளப்ப முயல்பவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதமாற்றம் செய்யச் சொன்னதால், மாணவி தற்போது தற்கொலை செய்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது அரசியல் செய்வதற்கு பா.ஜ.க-வுக்கு எதுவுமே இல்லை. எனவே, மாணவியின் தற்கொலை விவகாரத்தை பா.ஜ.க கையிலெடுத்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இந்த விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள கருத்து மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

``மாணவி தற்கொலை தொடர்பாக தலைமைக் கல்வி அதிகாரி உடனடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடமிருந்து தகவல்களைப் பெற்றுள்ளோம். மாணவி மருத்துவமனையில் இருந்தபோது, அவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டார் என்று சொல்லப்படுவது தற்கொலைக்குக் காரணம் அல்ல என காவல்துறையினர் தெளிவுபடக் கூறியுள்ளனர். இந்தப் பிரச்னையை திசைதிருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மாணவிக்கு மனை உளைச்சலை ஏற்படுத்தி, தற்கொலை வரை தள்ளியதற்குக் காரணமாக இருந்ததால், விடுதி வார்டன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்ற விஷயங்கள் விசாரணையின்போது தெரியவரும்" என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.

இந்தப் பிரச்னையைத் தீவிரமாகக் கையிலெடுத்துள்ள பா.ஜ.க., மாணவி தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திவருகிறது.

இந்த வழக்கு ஜனவரி 28-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், மாணவி பேசியதாக புதிய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

வலதுசாரி அமைப்பினர் போராட்டம்
வலதுசாரி அமைப்பினர் போராட்டம்

இந்த விவகாரத்தில் முதலில் வீடியோ வெளியிட்ட நபரிடமிருந்து செல்போனை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர். அந்த நபர் நான்கு வீடியோக்களை எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில், மதமாற்றம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism