Published:Updated:

`மம்தாவுக்கு உதவ சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றாரா பி.கே?’ -72 மணிநேர சிசிடிவி காட்சிகள் ஆய்வு

பி.கே எனும் பிரசாந்த் கிஷோர்
News
பி.கே எனும் பிரசாந்த் கிஷோர்

மத்தியக் குழுவை சமாளிக்க மம்தா பானர்ஜி, பி.கே எனும் பிரசாந்த் கிஷோரை உடனடியாக கொல்கத்தா வர வேண்டும் என அழைத்ததாகவும், இதனால் டெல்லியிலிருந்து ஊரடங்கு உத்தரவுகளை மீறி, சரக்குகளை ஏற்றிச்செல்லும் கார்கோ விமானம் மூலம் அவர் கொல்கத்தா சென்றாதாகத் தகவல்கள் வெளியானது.

இந்தியாவில் நடக்கும் அரசியலை கவனித்துவரும் அனைவருக்கும் பி.கே எனும் பிரசாந்த் கிஷோரை தெரியாமல் இருக்காது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அங்கும் இங்குமாய் பேசப்பட்டு வந்தவர், 2019 -ம் ஆண்டு, ஆந்திராவில் ஜெகனின் வெற்றிக்குப் பின்னர் தென் இந்தியாவிலும் பிரபலம் ஆனார். 2019 -ம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தபோதும், பா.ஜ.க கடுமையான போட்டியை அளித்திருந்தது. அப்படியான தேர்தல் முடிவுகளை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் மம்தா, 2021 சட்டப்பேர்வை தேர்தலில் தனது கட்சியின் வெற்றியை உறுதிசெய்ய, தேர்தல் வித்தகரான பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம்செய்தார்.

ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்

தமிழகத்திலும் ம.நீ.ம, அ.தி.மு.க, தி.மு.க என ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பி.கே பேச்சுவார்த்தையில் இருந்தாலும் இறுதியில் தி.மு.க வுடன் ஒப்பந்தம் உறுதியானது. இப்படி இந்தியா முழுவதும் பி.கே மிகப் பிரபலம். பீகாரில், நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல், சமீபத்தில் பி.கே-வை தேசிய அளவில் பேச வைத்தது. இந்த நிலையில் அவர், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு உதவ, ஊரடங்கு உத்தரவை மீறி சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றதாகத் தகவல் வெளியானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில், மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவியதாகச் சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், ஊரடங்கை வெற்றிகரமாக நடத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்ததாகவும் மாநில பா.ஜ.க குற்றம் சாட்டியது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் உண்மையான களநிலவரத்தை அறிய, அமைச்சர்கள் அடங்கிய மத்தியக் குழுவை மேற்குவங்கத்தில் கொல்கத்தா, ஹவுரா, மெடினிப்பூர், பர்கனாஸ், டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வுசெய்ய அனுப்புவதாகத் தெரிவித்தது உள்துறை.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்த நிலையில்தான், மத்தியக் குழுவை சமாளிக்க மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோரை உடனடியாக கொல்கத்த வர வேண்டும் என அழைத்ததாகவும், இதனால் டெல்லியிலிருந்து ஊரடங்கு உத்தரவுகளை மீறி, சரக்குகளை ஏற்றிச் செல்லும் கார்கோ விமானம் மூலம் அவர் கொல்கத்தா சென்றாதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து விமான சேவைகளும் ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளன்றி சாலை மார்க்கமாகச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சரக்கு விமானம் மட்டுமே அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் சென்றுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால்தான், பிரசாந்த் கிஷோர் கார்கோ விமானத்தில் சென்றதாகத் தகவல் பரவியது. இந்த நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக ஆய்வுசெய்யச் சொல்லியுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக ஏ.என்.ஐ ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், மத்திய அரசின் உத்தரவின் பெயரில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூன்று விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். சுமார் 72 மணிநேர காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அவர் வான்வழியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை தெரிவித்தனர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இதுதொடர்பாக சில ஆங்கில ஊடகங்களுக்கு தொலைபேசி மூலம் பேசியுள்ள பிரசாந்த் கிஷோர், ஊரடங்கை மீறி கார்கோ விமானம் மூலம் தான் பயணம் செய்ததாக வெளியான அனைத்து தகவலையும் மறுத்தார். ``நான் எந்த விமானத்திலும் பயணம் செய்யவில்லை. கடைசியாக நான் விமான நிலையம் சென்றது மார்ச் மாதம் 19 -ம் தேதி அன்றுதான். தற்போது என்ன சொல்லப்படுகிறது என்பதைப் பார்ப்போம். மத்திய அரசு ஒரு அறிக்கை கேட்டிருக்கிறது. யாரிடமாவது ஆதாரம் இருந்தால் அவர்கள் வெளியே வந்து அதைத் தெரிவிக்க வேண்டும். அப்போது தானே நான் பதில் சொல்ல முடியும்...” என்றார்.

'கடந்த சில நாள்களில் சாலை மார்க்கமாக கொல்கத்தா சென்றீர்களா?' என `தி ப்ரின்ட்’ ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

ஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசிய பிரசாந்த் கிஷோர், ``என்மீது பழி சொல்பவர்கள் அதை உறுதிபடுத்த வேண்டும். நான் விமானத்தில் சென்றாதாகச் சொல்பவர்கள், குறைந்தபட்சம் விமான நம்பரையோ, விமான நிறுவனத்தின் பெயரையோ, தேதியையோ, நேரத்தையோ குறிப்பிட வேண்டாமா? பொதுவெளியில் இது போன்ற குற்றச்சாட்டை வைப்பவர்கள் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.