Published:Updated:

குஜராத்தை கைவிட்டுவிட்டாரா ராகுல் காந்தி... காங்கிரஸ் தோல்விக்கு யார் காரணம்?!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி பெரிய அளவில் குஜராத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததே வாக்குவங்கி சரிவுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

Published:Updated:

குஜராத்தை கைவிட்டுவிட்டாரா ராகுல் காந்தி... காங்கிரஸ் தோல்விக்கு யார் காரணம்?!

ராகுல் காந்தி பெரிய அளவில் குஜராத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததே வாக்குவங்கி சரிவுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

ராகுல் காந்தி

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இதையடுத்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் கடந்த 1, 5-ம்  தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. குஜராத்தைப் பொறுத்தவரைக் கடந்த 2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த முறை 66.31 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தது. குஜராத்தில் பா.ஜ.க தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டது. குஜராத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி சொந்த மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோரும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். 

மோடி
மோடி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி 2024-ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமது வாக்கு வங்கி சதவிகிதத்தை தேசிய அளவில் அதிகரிக்க உத்திகளை வகுத்து வருகிறது. அந்தவகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரின் ஆம் ஆத்மி கட்சியினர் தங்கள் தடத்தை குஜராத்தில் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் தேர்தல் களம் கண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ``அடுத்த 5 ஆண்டுகளை எங்களுக்கு கொடுங்கள். நாங்கள் எங்களை நிரூபிக்காவிட்டால் எங்களை  புறக்கணியுங்கள்” என்று வீதிகள் தோறும் பரப்புரை மேற்கொண்டது.   

இதேபோல், பாரத் ஜோடா யாத்திரை ஒருபுறம் இருந்தாலும் பிரதமருக்கு இணையாக ராகுலும், குஜராத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜ்காட் மற்றும் மகுவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மட்டுமே பங்கேற்று பிரசாரம் செய்தார். குஜராத்தில் 8 முக்கிய வாக்குறுதிகளை மையப்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், கேஸ் சிலின்டர் ரூ.500, 300 யூனிட் இலவச மின்சாரம், 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, வேலையில்லாதோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, விவசாயிகளுக்கு மின் கட்டண தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சிகர வாக்குறுதிகளை வாரி வழங்கியது. 

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் இம்முறை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு எழுந்தது.  கடந்த 2017-ல் குஜராத் பொதுத்தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் 77 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க-வுக்கு சவால் விட்டிருந்தது. ஆனால், இம்முறை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே 40-க்கும் குறைவான இடங்களிலேயே முன்னனியில் இருந்தது. இதுபடிப்படியாக  சரிந்து 20க்கும் கீழ் குறைந்துள்ளது. மதியம் 2.30 மணி நிலவரப்படி குஜராத்தில் ஆளும் பா.ஜ.க 29 இடங்களில் வெற்றி பெற்று, 127 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தம் 156 இடங்களில் பா.ஜ.க வெற்றி முகம் காண்பித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 15 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தில் 92 இடங்கள் வெற்றி பெற்றிருந்தாலே ஆட்சி அமைக்க முடியும். பா.ஜ.கவோ 150க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. 

யாத்திரையில் ராகுல் காந்தி
யாத்திரையில் ராகுல் காந்தி

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது குஜராத்தில் காங்கிரஸுக்கு இந்த அளவிற்கு பின்னடைவு ஏற்பட்டதில்லை. சரியான திட்டமிடல் இல்லாதது, தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட போட்டி உள்ளிட்டவைகள் காங்கிரஸ் சரிவுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், மறுபுறம் ராகுல் காந்தி பெரிய அளவில் குஜராத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததே வாக்குவங்கி சரிவுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். குறிப்பாக, ஜோடோ யாத்திரை திட்டமிடும்போதே குஜராத் அதில் தவிர்க்கப்பட்டது, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. காரணம், கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்ற கட்சி, அதிகம் உழைத்திருந்தால், கடும் சவால் அளித்திருக்கலாம். இதனால் குஜராத்தை ராகுல் கைவிட்டுவிட்டார் என்றே தொண்டர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.