கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பிரச்னைகள் வெடித்தன. மூத்த தலைவர்கள் உயர்த்திய போர்க்கொடியால் தொண்டர்கள் அதிர்ச்சியைச் சந்தித்தனர். இதையடுத்து, கட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக, "ஒருவர் ஒரு பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது. ஒருவருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2-வது நபர் போட்டியிட குறைந்தது ஐந்து ஆண்டு கட்சிப் பணியாற்றியிருக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மறுபுறம் 'ஒருவருக்கு ஒரு பதவி என்ற உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டும்" என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கவும் மறுத்துவிட்டார். இதையடுத்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடவிருப்பதாகத் தகவல் வெளியானது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றால், ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சிக் கொள்கை அடிப்படையில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்போது புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க கட்சித் தலைமை முடிவுசெய்தது. இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 82 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். இது சோனியா, ராகுல் காந்தியை அதிர்ச்சியடையச் செய்தது. பின்னர் அசோக் கெலாட் போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்கினார். தற்போதுவரை அசோக் கெலாட் - சச்சின் பைலட்டுக்கிடையே மோதல் நீடித்துவருகிறது.
இதற்கிடையில்தான் கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், பா.ஜ.க., ஜே.டி.எஸ்-ஸுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் காங்கிரஸ் 135 இடங்களையும், பா.ஜ.க 66 இடங்களையும், ஜே.டி.எஸ் 19 இடங்களையும் கைப்பற்றியது. இவ்வாறு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் முதல்வர் பதவியில் யாரை நியமிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் சோனியா காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் நியமனம் செய்யப்படுகிறார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி கர்நாடக மக்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது.
நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர், காந்தி குடும்பத்தினரின் முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கிறது. அதனால் நான் இந்த ஃபார்முலாவுக்கு ஒப்புக்கொண்டேன்.

சித்தராமையா முதல்வராக இருந்தால்தான் என்ன தவறு... அதனால் இந்த ஃபார்முலாவை ஏற்றுக்கொண்டேன். கட்சியின் உச்ச இலக்கு மக்களின் நலன். கர்நாடக மக்களின் நலனுக்கு நான் எனக்குக் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டேன்" என்றார்.
டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ், "நான் இவ்விவகாரத்தில் முழுமையாக மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆனால், கடமையைத் தட்டிக் கழிக்க முடியாது. அதனால் சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். காலம் பதில் சொல்லும். டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என நினைத்தேன் ஆனால், கிடைக்கவில்லை.

அதில் எனக்கு வருத்தமே" என்றார். மறுபுறம் எற்கெனவே கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் இருக்கும் நிலையில் தற்போது துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டிக்கிறது. இதன் மூலம் 'காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவிதான்' என்ற தனது முடிவை ராகுல் காந்தி மாற்றிக்கொண்டாரா... என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் ப்ரியன், "கடந்த ஆண்டு நடத்த காங்கிரஸ் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஒருவருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்குதான் பதவி, ஐந்து ஆண்டுகள் கட்சியில் பணியாற்றியிருந்தால் இரண்டாவது நபருக்கு பதவி வழங்கப்படும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் பதவியில் இருக்கக் கூடாது, 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 50% பேர் கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, மைனாரிட்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 50% கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை முக்கியத் தீர்மானங்களாகும். ஆனால், 50 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் 50% அளவுக்கு இருக்கிறார்களா... என்று தெரியாது... எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி., மைனாரிட்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 50% கட்சிப் பதவிகளில் இருக்கிறார்களா என்பதற்கும் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி என்பதும் கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்கு சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். மேலும், கார்கேவின் மகனே எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இதற்காகத்தான் ஐந்து ஆண்டுகள் கட்சியில் வேலைசெய்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அப்போதுதான் பிரியங்கா காந்தி போன்றவர்கள் உள்ளே வர முடியும்.

ஒருவருக்கு ஒரு பதவி என்பது டி.கே.சிவக்குமார் விஷயத்தில் செயல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வரும் காலத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அவருக்கு சிறப்புச் சலுகை வழங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அவர் முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். ஒருவேளை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அவரை எடுத்தால் சரியாக இருக்காது" என்றார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணாவிடம் விளக்கம் கேட்டோம். "சில நேரங்களில் சில விதிகளில் விலக்கு வழங்கிதான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் டி.கே.சிவக்குமார் இரண்டு பதவிகளில் இருந்தால்தான் சரியாக இருக்கும். ஒருவருக்கு ஒரு பதவி, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் பதவியில் இருக்கக் கூடாது, 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 50% பேர் கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, மைனாரிட்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 50% கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்படும் பொழுது கடைப்பிடிக்கப்படும்" என்றார்.