Published:Updated:

அதிமுக ஆட்சியில் குறைத்துக் காட்டப்பட்டதா சாலை விபத்து உயிரிழப்புகள்?

சாலை விபத்து

திருத்தியமைக்கப்பட்ட தரவுகள்படி, ஒட்டுமொத்தமாக சாலை விபத்துகள் மட்டும் 2017-2020 வரையிலான 4 ஆண்டுகளில் 12 சதவிகிதத்திலிருந்து 83 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் குறைத்துக் காட்டப்பட்டதா சாலை விபத்து உயிரிழப்புகள்?

திருத்தியமைக்கப்பட்ட தரவுகள்படி, ஒட்டுமொத்தமாக சாலை விபத்துகள் மட்டும் 2017-2020 வரையிலான 4 ஆண்டுகளில் 12 சதவிகிதத்திலிருந்து 83 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சாலை விபத்து

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், இந்தியாவிலேயே சாலை விபத்துகள் குறைந்து காணப்படும் முதல் மாநிலம் என்ற சிறப்பு விருதை, மத்திய அரசிடமிருந்து இரண்டுமுறை தொடர்ந்து பெற்றிருந்தது தமிழ்நாடு அரசு. ஆனால், இது தவறான மிகக்குறைவான எண்ணிக்கை என்றும், 2017- 2020 காலகட்டத்தில் சாலை விபத்துகள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்ட தரவுகளின்படி, நான்கு ஆண்டுகளில் 22,018 கூடுதல் இறப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விருது வழங்கும் விழாவில் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
விருது வழங்கும் விழாவில் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில், தேசிய அளவில் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்த சிறந்த மாநிலத்துக்கான விருதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு பெற்றது. டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை, அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார். விருது வழங்கிப் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ``சாலை விதிகள் பற்றியும் விபத்துகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமான இருக்கிறது" புகழ்ந்துரைத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து, 31-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவின்போது அறிக்கை வெளியிட்ட அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களைத் தயாரித்து திரையரங்குகளில் திரையிடுதல், ஈர்ப்பு இசை விளம்பரங்கள் தயாரித்து அகில இந்திய வானொலி மூலமாக பண்பலை சேனல்களில் ஒலிபரப்புதல், அவசர விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சாலை பாதுகாப்புப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல்துறை ஆணையரகத்துக்கும், முதல்வர் விருது வழங்குதல் போன்ற பல்வேறு சாலைப் பாதுகாப்பு திட்டங்களை, தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தியிருக்கிறது.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 25.60 சதவிகிதமும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 43.10 சதவிகிதமும் குறைந்திருக்கின்றன. மேலும், ஒவ்வொரு பத்தாயிரம் வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2019-ம் ஆண்டில் 3 நபர்களாகக் குறைந்திருக்கிறது. அத்துடன், தமிழ்நாடு அரசின் `108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாகச் சென்று சேவை புரிவதால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கின்றன" என விரிவான விளக்கமளித்திருந்தார்.

சாலை விபத்துகள்
சாலை விபத்துகள்
#VikatanInfographics

இந்த நிலையில், 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துகள் குறித்த தரவுகளை மீண்டும் ஆய்வுசெய்தபோது, இடைப்பட்ட அந்த நான்கு ஆண்டுகளில் 22,018 பேர் கூடுதலாக மரணம் அடைந்திருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது மறுஆய்வு செய்யப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட தரவுகள்படி, ஒட்டுமொத்தமாக சாலை விபத்துகள் மட்டும் 2017-2020 வரையிலான 4 ஆண்டுகளில் 12 சதவிகிதத்திலிருந்து 83 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது சரிசெய்யப்பட்ட தரவுகளின்படி, முந்தைய எண்ணிக்கையிலிருந்து புதிய எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, 2017-ல் 16,157-ஆக இருந்த சாலை விபத்து இறப்பு எண்ணிக்கை 17,926-ஆக அதிகரித்திருக்கிறது. 2018-ல் 12,216-ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்து 18,394-ஆக உயர்ந்திருக்கிறது. 2019-ம் ஆண்டைப் பொறுத்தவரையில் 10,525-ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை 72 சதவிகிதம் அதிகரித்து 18,129-ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், ஊரடங்கு நடைமுறையிலிருந்த 2020-ம் ஆண்டில் 8,060-ஆக இருந்த சாலை விபத்து இறப்பு எண்ணிக்கை 80 சதவிகிதம் அதிகரித்து 14,527-ஆக உயர்ந்திருக்கிறது. மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, திருத்தப்பட்ட தற்போதைய தரவுகளின்படி, 2017, 2018, 2019, 2020 ஆகிய நான்கு ஆண்டுகளில் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 12 சதவிகிதம் முதல் 83 சதவிகிதம்வரை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

சாலை விபத்து
சாலை விபத்து

இது சம்பந்தமாகப் பேசிய காவல்துறை தரப்பினர், ``2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் சாலை விபத்துகள், அதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை தொடர்பாக பதிவுசெய்யப்பட்டிருந்த தரவுகளில் பிழைகள் காணப்பட்டன. அந்த தவற்றை சரிசெய்து பார்த்தபோது, விபத்துகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கண்டறிந்து சரிசெய்திருக்கிறோம். இது நாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ஆய்வுதான் என்றாலும், தரவுகளில் அதிகப்படியான வேறுபாடுகள் காணப்பட்டிருப்பதால், சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மரணம் தொடர்பான புதிய தரவுகளை மாநில அரசுக்கும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துக்கும் தெரிவித்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் குறைத்துக் காட்டப்பட்டதா சாலை விபத்து உயிரிழப்புகள்?

புதிய ஆய்வின் தரவுகள்படி, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையை குறைத்து காண்பித்ததற்காக, கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட விருதுகளை, மத்திய அரசு திரும்ப பெறக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.