Published:Updated:

மதுரை: ஸ்மார்ட் சிட்டி கடைகள் ஏலத்தில் விதிகள் மீறப்படுகின்றனவா?

ஹெரிடேஜ் பஜார் கடைகள்
News
ஹெரிடேஜ் பஜார் கடைகள்

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வணிக வளாகக் கடைகளை, விதிகளை மீறி தி.மு.க புள்ளிகள் கைப்பற்றிக்கொள்ள முயல்வதாக பா.ஜ.க மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் வணிக வளாகக் கடைகளை ஏலம்விடுவதில் ஆளும் கட்சியினருக்குச் சாதகமாக மாநகராட்சி நிர்வாகம் நடந்துகொள்வதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஏலத்தில் மேல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலையம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலையம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்திருக்கும் முறைகேடு பற்றி விசாரிக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பும் பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் பேசினார்கள். சமீபத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய மழை வெள்ளத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள்தான் காரணம் என்றும் கூறினார்கள். ஆனால், இதுவரை எந்தவொரு ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டுக்கு எதிராகவும் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அந்தத் திட்டத்தை விரைவில் முடித்து, அதன் பலனைத் தாங்கள் அடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அந்த அடிப்படையில்தான், அரைகுறையாகக் கட்டப்பட்டிருக்கும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அவசரகதியில் முதலமைச்சர் திறந்துவைத்திருப்பதாகவும், இதனால் இந்தத் திட்டத்தில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அ.தி.மு.க புள்ளிகள், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவதாகவும் கூறப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வணிக வளாகக் கடைகளை, விதிகளை மீறி தி.மு.க புள்ளிகள் கைப்பற்றிக்கொள்ள முயல்வதாக பா.ஜ.க மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து டாக்டர் சரவணனிடம் பேசினோம். ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதை விசாரிக்கப்போவதாகவும் பேசிய தி.மு.க அரசு, இப்போது அந்தத் திட்டத்தின் பலனை அனுபவிக்கப் பார்க்கிறது. உதாரணத்துக்கு மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புராதன பெருமையைப் பாதுகாக்க 42 கோடி ரூபாய் மதிப்பில் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஜான்சிராணி பூங்காவில் ரூ.2.45 கோடியில் புராதன பஜார் அமைக்கப்பட்டு, 12 கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மதுரை நகரம், புராதன நகரம் என்பதால் வருகிற சுற்றுலாப்பயணிகள் புராதனப் பொருள்களை வாங்கும் வகையில் இந்தக் கடைகள் கட்ட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்தக் கடைகளை ஏலம்விடுவதற்கான மாநகராட்சியின் அறிவிப்பில், அதில் இரண்டு மட்டும் புராதனப் பொருள்கள் விற்கும் கடைகள் என்றும், மற்றவை பொதுவானவை என்றும், அதையும் தி.மு.க புள்ளிகள் ஏலத்தில் எடுத்து அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விடத் திட்டமிட்டிருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான், மதுரைக்குப் பெருமை சேர்க்கும் புராதன பொருள்களை விற்கக் கட்டப்பட்ட கடைகளை வேறு வணிக நோக்கத்துக்காக மாற்றக் கூடாது என்று வழக்கு தாக்கல் செய்தேன்.

என்னுடைய வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'மதுரை புராதன நகரம். ஜான்சி ராணி பூங்காவில் அமைக்கப்பட்ட ஹெரிடேஜ் பஜாரில் பாரம்பர்யப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை அமைக்க, பரிசீலனை செய்தால் என்ன?' என்று கேள்வி எழுப்பினர். ஏலம்விட்டாலும் அதன்மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் நிறுத்திவைக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கின்றனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது இதற்கு முடிவு தெரியும். கடைகள் ஏலத்தில் நடந்திருக்கும் முறைகேடுகள் களையப்படும் என்று நம்புகிறேன்.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

இதுமட்டுமல்ல, பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில் கட்டப்பட்டுவரும் பல்லடுக்கு வணிக வளாகத்திலிருக்கும் 400-க்கும் மேற்பட்ட கடைகள், குன்னத்தூர் சத்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் 190 கடைகளையும் தி.மு.க-வினர் கைப்பற்றிக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் உதவிவருகிறது. நியாயப்படி அங்கு ஏற்கெனவே கடைகள் வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், இதிலும் முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வருகிறது. ஊழல் பற்றித் தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இப்போது மௌனமாக இருக்கிறார்'' என்றார்.

மீனாட்சியம்மன் கோயிலருகே பல ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் கடைவைத்திருக்கும், மாநகராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்டவர்களுக்குப் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகில் சிறிய கடைகள் கட்டப்பட்டுவருகின்றன. இந்தக் கடைகளை ஏலத்தில் எடுக்க ஆரம்பத்தில் ஒரு லட்சம் டெபாசிட் என்று மாநகராட்சி அறிவித்த நிலையில், டெபாசிட் தொகையை ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். அதனால், தெருவோர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இவ்வளவு பெரிய தொகையை எப்படிச் செலுத்த முடியும் என்று அவர்கள் கலெக்டரிடமும், கமிஷனரிடமும் மனு அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் புகார்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-ஸிடம் கேட்டபோது, ``இதில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கட்டப்பட்டிருக்கும் வணிக வளாகங்கள், கடைகள் மூலம் கூடுதல் வருவாயை மாநகராட்சிக்குக் கொண்டுவருவதுதான் நோக்கம். அதேநேரத்தில்ம் அந்தப் பகுதியில் ஆரம்ப காலத்திலிருந்து வியாபாரம் செய்து வந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும். இதில் புதிதாக யாரும் நுழைய முடியாது. ஜான்சி ராணி பூங்காவில் கட்டப்பட்டிருக்கும் 12 கடைகள் அனைத்தும் புராதன பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் என்று திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், அந்தக் கடைகளில் புராதன பொருள்களும் விற்கலாம் அவ்வளவுதான். ஆனால், நாங்கள் அதில்இரண்டு கடைகளை புராதன பொருள்கள் மட்டும் விற்க வேண்டுமென்று ஒதுக்கியிருக்கிறோம். வருகின்ற வெளியூர் மக்கள் அங்கு வந்து புராதன பொருள்கள் வாங்க மாட்டார்கள். அதனால் அது போன்ற கடைகளை வைக்க வேறு இடத்தைத் தேர்வு செய்து கொடுங்கள் என்று வியாபாரிகள் கூறியிருப்பதையும் பரிசீலனை செய்துவருகிறோம். இதுதான் உண்மை.

மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்
மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்

அதேபோல, புது மண்டபத்தின் தொன்மையைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் அங்கு கடை வைத்திருந்தவர்களுக்காக குன்னத்தூர் சத்திரம் அருகில் கட்டப்பட்டிருக்கும் கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவிருக்கின்றன. ஏற்கெனவே, கடை வைத்திருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் ஒதுக்க முடியாது. இவர்கள்தான் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.

மற்றபடி இதில் அரசியல் அழுத்தம், சிபாரிசெல்லாம் இல்லை. ஒரு பொருளைக் குறைவான விலைக்குக் கொடுத்தால்தான் முறைகேடு என்று சொல்லலாம். முன்பைவிடக் கூடுதலாக வருவாய் கிடைக்கும் வகையில் ஏலத்தொகையை அதிகப்படுத்தியதை எப்படிச் சலுகை காட்டுவதாகச் சொல்ல முடியும்? இதனால் மாநகராட்சி நிர்வாகத்துக்கு லாபம்தானே... அது மட்டுமல்லாமல் இது அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிற டெண்டர். தகுதி உள்ள யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இதில் எந்தப் பாகுபாடும் கிடையாது. பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுவரும் பல்லடுக்கு வணிக வளாகத்தில் ஏற்கெனவே அங்கு கடை வைத்திருந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும், அதில் எந்த மாற்றமும் இல்லை. தெருவோர வியாபாரிகளின் கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டுவருகிறது. மொத்தத்தில் கடைகள் ஏலத்தில் சிலர் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். அது உண்மையில்லை'' என்றார்.