Published:Updated:

`கனிமொழி டெல்லியிலேயே இருக்கட்டும்!' - வேலூர் பிரசாரத்தில் புறக்கணிக்கப்பட்ட பின்னணி

என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக தி.மு.க வாக்களித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. `அதைப் போன்றதொரு நிகழ்வு இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின்.

கனிமொழி
கனிமொழி

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் தி.மு.க இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். ``இரண்டு நாள்கள் கனிமொழி பிரசாரம் செய்வார் என முரசொலி நாளேட்டில் தகவல் வெளியாகியிருந்தது. `டெல்லியிலேயே கனிமொழி இருக்கட்டும்' எனக் கூறிவிட்டார் ஸ்டாலின். இதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன" என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

ஸ்டாலின், கனிமொழி
ஸ்டாலின், கனிமொழி

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடக்கவிருப்பதால் தமிழக அரசியல் தலைவர்கள் பிரசாரத்துக்காக முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் தேர்தல் பணிகளுக்காக 209 பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `வேலூர் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும்' என்பதில் அ.தி.மு.க முனைப்புடன் இருக்கிறது.

பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமியும், `ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. தி.மு.க-வின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத தி.மு.க இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை' என விமர்சித்தார். இதற்குப் பதிலடி கொடுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலினும், `மத்தியில் உள்ள ஆட்சியும் மாநிலத்தில் உள்ள ஆட்சியும் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பா.ஜ.க-வைத் தமிழகம் புறக்கணிப்பதால் தமிழ்மொழியை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை' எனச் சாடினார்.

ஊழியர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம்!- 'கஃபே காஃபி டே' உரிமையாளர் மாயமான பின்னணி

அதேநேரம், `37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றதோடு மட்டுமல்லாமல் 38-வதாக வேலூர் தொகுதியைக் கைப்பற்றியாக வேண்டும்' என உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். `என் மகனாகப் பார்க்காமல் தி.மு.க தொண்டனாகப் பாருங்கள்' எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலேயே கலங்கினார் துரைமுருகன். தேர்தல் பிரசாரத்திலும் சென்டிமென்டாகப் பேசி மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். இந்நிலையில், நேற்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாள்கள் பிரசாரப் பணியில் களமிறங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். நேற்று தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடையாஞ்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து சங்கராபுரம் பகுதியிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்
பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்

``பிரசாரக் களத்தில் கனிமொழியைக் காண முடியவில்லை. இத்தனைக்கும் சிறுபான்மையினர் ஆதரவு என்ற புள்ளியில் கனிமொழி உறுதியாக இருப்பவர். இஸ்லாமிய மக்கள் நிறைந்திருக்கக்கூடிய பகுதியில் அவருடைய பிரசாரம் சற்று எடுபடும் எனக் கட்சிக்காரர்கள் கருதுகின்றனர். அவரைத் தவிர்த்ததற்கான காரணம் தெரியவில்லை" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``ஜூலை 30 மற்றும் 31 ஆகிய இரண்டு தேதிகளில் கனிமொழி பிரசாரம் செய்ய வருவார் என முரசொலி நாளேட்டில் செய்தி வெளியாகியிருந்தது. தற்போது, `பிரசாரக் களத்துக்குக் கனிமொழி வர மாட்டார்' என வாய்மொழியாகக் கூறிவிட்டனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7 வரையில் நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் காரணத்தைக் கூறினாலும், நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்தை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார். வேலூர் தொகுதி தேர்தல் வெற்றிக்கும் உதயநிதியைக் காரணகர்த்தா ஆக்குவதற்கு அறிவாலயம் முயல்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது" என்று ஆதங்கப்பட்டவர்,

``கருணாநிதி இருந்த காலத்தில் சங்கரன்கோவில் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் கனிமொழி பிரசாரம் செய்ய வரவில்லை. `அவர் வர வேண்டாம்' என ஸ்டாலின் தரப்பில் கூறிவிட்டனர். அந்தத் தேர்தலில் 500 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருந்தால் தி.மு.க டெபாசிட் இழந்திருக்காது. இதனால் கோபப்பட்ட கருணாநிதி, `கனிமொழி சென்றிருந்தால் 1,000 ஓட்டுகளாவது கூடுதலாகக் கிடைத்திருக்கும். டெபாசிட் இழக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்' என்றார். அதேபோல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் கனிமொழி களமிறக்கப்படவில்லை. இதனால் தொகுதி முழுக்க இருக்கும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளும் தி.மு.க-வுக்குக் கிடைக்கவில்லை. அங்கும் டெபாசிட்டைப் பறிகொடுத்தது தி.மு.க. தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் என்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார் ஆ.ராசா. ஆனால், மசோதாவுக்கு ஆதரவாக தி.மு.க உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பின்போது சபையில் கனிமொழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வின் இந்த முடிவால் சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி நீடித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் வேலூர் பிரசாரத்துக்குக் கனிமொழி வருவதால் கழகத்துக்குத்தான் கூடுதல் நன்மை கிடைக்கும்" என்றார் உறுதியாக.

கனிமொழி
கனிமொழி

அதேநேரம், இந்தத் தகவலை மறுத்துப் பேசும் அறிவாலய நிர்வாகிகள் சிலர், ``தேர்தல் பிரசாரத்தில் கனிமொழியைப் புறக்கணிக்க வேண்டும் என்பது தலைமையின் நோக்கம் அல்ல. அவருக்கு டெல்லியில் ஏராளமான பணிகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் அலுவல் நீட்டிக்கப்பட்ட நாள்களில் முக்கியமான மசோதாக்களைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கட்சியில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் வேலூரில் முகாமிட்டிருப்பதால் டெல்லியில் கனிமொழியின் இருப்பு அவசியமானதாக இருக்கிறது.

மசோதாக்கள் தொடர்பாக மற்ற கட்சித் தலைவர்களிடம் கலந்து பேசவும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு தலைவர் டெல்லியில் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார் ஸ்டாலின். அதன் காரணமாகவே கனிமொழியை டெல்லியிலேயே இருக்குமாறு கூறிவிட்டார். என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக தி.மு.க வாக்களித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. `அதைப் போன்றதொரு நிகழ்வு இனியும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். இதன் தொடர்ச்சியாக கனிமொழி உட்பட அனைத்து எம்.பி-க்களையும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். எனவேதான், வேலூர் தேர்தல் பிரசாரத்துக்குக் கனிமொழி செல்லவில்லை" என்றார் இயல்பாக.