Published:Updated:

` ஸ்டாலின் தவறவிட்ட வாய்ப்பு இது!' - சிலைத் திறப்பு விழாவில் புறக்கணிக்கப்படும் காங்கிரஸ்?

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தேர்தலுக்கு முந்தைய மதிப்பீடுகள், இப்போது இல்லை என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நூற்றுக்கணக்கான கூட்டங்களில், ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் எனக் குறிப்பிட்டார் ஸ்டாலின். தேர்தல் முடிவில் அவர் நினைத்தது நடக்கவில்லை.

கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்வுக்குத் தமிழக காங்கிரஸ் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. `நாடாளுமன்றத் தேர்தலின்போது நூற்றுக்கணக்கான மேடைகளில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசினார் ஸ்டாலின். தேர்தலுக்குப் பிறகு மதிப்பீடுகள் மாறிவிட்டன' என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தில்.

ஸ்டாலின், ராகுல்
ஸ்டாலின், ராகுல்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறவிருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மம்தா, கருணாநிதியின் முழு உருவச் சிலையைத் திறந்து வைக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது அறிவாலயம். அதேநேரம், ` அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கோ தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கோ நிகழ்ச்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை' என்ற குரலும் எழுந்துள்ளது.

`` அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் சோனியா காந்தி. இந்தமுறை மம்தா பானர்ஜி பங்கேற்க இருக்கிறார். கடந்தமுறை காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டதால், இந்தமுறை வெகு சிலருக்கே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள், மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் அவர்களை அழைப்பது சரியாக இருக்காது எனத் தலைமை நினைக்கிறது. தவிர, நாடாளுமன்றத்தில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு தி.மு.க ஆதரவு அளித்ததும் புயலைக் கிளப்பியுள்ளது. `சிறுபான்மை ஆதரவு குறித்து வெளியே ஒரு பேச்சு, உள்ளே ஒரு பேச்சா... பா.ஜ.க-வுக்கு ஆதரவாக முகத்தைக் காட்டுவது என முடிவெடுத்துவிட்டார்களா... வழக்கம்போல அணி மாறத் தயாராகிவிட்டார்களா' என்ற விவாதமும் கிளம்பியுள்ளது" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர்,

ஜவாஹிருல்லா, ஸ்டாலின்
ஜவாஹிருல்லா, ஸ்டாலின்

`` என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சுப்பராயனும் சி.பி.எம் எம்.பி நடராஜனும் வாக்களித்துள்ளனர். அவையில் மசோதாவைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார் தி.மு.க நாடாளுமன்றக் கொறடா ஆ.ராசா. ஆனால், மசோதாவை ஆதரித்து வாக்களித்ததை உடன்பிறப்புகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த 25-ம் தேதி இதுதொடர்பாகப் பேசுவதற்காக ஸ்டாலினை சந்திக்க வந்திருந்தார்கள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹாஜாகனியும்.

அப்போது, ` என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்தை தி.மு.க ஆதரித்துள்ளது. இந்தச் சட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானதாக இருக்கிறது. மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பதாகவும் இருக்கிறது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, நீதிமன்றங்களைக் கொண்டு வருவோம், நீதிபதிகளை நியமிப்போம் என்றெல்லாம் மத்திய அரசு கூறிவருகிறது. இதனால் தமிழகக் காவல்துறை என்ற ஒன்றே பொருளற்றதாக மாறிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. யுஏபிஏ (UAPA) சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவை பொய்யானவை. முந்தைய காலங்களில் தடா மற்றும் பொடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவில் எவருக்கும் தண்டனையே வழங்காததையும் பார்க்க முடிகிறது.

Vikatan

யுஏபிஏ சட்டத்தின்படி வழக்கைப் பதிவு செய்தாலே ஆறு மாதங்களுக்கு ஜாமீன் பெற முடியாது. மிகவும் கொடுமையான சட்டம் இது. சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பல நேரங்களில் கொண்டு வரப்பட்ட கறுப்புச் சட்டங்களால் பிற மாநிலங்களில் பாதிப்பு ஏற்படும்போதுகூட தமிழகத்தில் அரணாக இருந்து பாதுகாத்தார் கருணாநிதி. தற்போது நாகை மாவட்டத்தில் பிரச்னை வந்தபோதுகூட தி.மு.க-வினர் பாதுகாப்புக்காக வந்தனர்' என விரிவாக எடுத்துரைத்தார் ஜவாஹிருல்லா. இதற்குப் பதில் கொடுத்த ஸ்டாலின், ` நாங்கள் எப்போதும் சிறுபான்மை சமூகத்துக்கு அரணாக இருப்போம். என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்தைப் பரூக் அப்துல்லா கூட ஆதரித்தார். நீங்கள் குறிப்பிடும் இந்தப் பிரச்னையை இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வோம்' என உறுதியளித்தார்.

ஹாஜாகனி, ஸ்டாலின்
ஹாஜாகனி, ஸ்டாலின்

சிறுபான்மையினரைப் பாதிக்கிறதா என்பதையும் தாண்டி தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள், தேச நலனுக்கு விரோதமாகப் பேசுகின்றவர்கள் மீது இந்தச் சட்டம் பாயும் என்கிறார்கள். ` இந்தச் சட்டத்தின் மூலம் நமக்கும் சேர்த்தே பாதிப்பு வரும்' எனக் கழகத்துக்குள்ளேயே பேச்சு வலம் வருகிறது. `மசோதாவுக்கு ஆதரவாக தி.மு.க செயல்பட வேண்டும்' என்பதை வலியுறுத்திய பா.ஜ.க-வினரும், `இஸ்லாமிய நாடுகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு சில இயக்கங்கள் செயல்படுகின்றன.

தேசிய அளவில் பெரும் சக்தியாக இவர்கள் உருவெடுத்திருப்பதால் இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டியதாக இருக்கிறது. இதை ஆதரிக்க வேண்டும்' எனக் கூறியதை தி.மு.க தரப்பில் ஏற்றுக்கொண்டனர். சொல்லப் போனால், ` இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறது தி.மு.க' என்ற பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்துவிட்டார்கள். இந்த நேரத்தில் கருணாநிதி போல கடுமையாக எதிர்த்திருந்தால், நாளை ஒருவேளை பாதிப்பு வந்தால்கூட, எதிர்த்து வாக்களித்ததால் எங்களைப் பழிவாங்குகிறார்கள் என அரசியல் செய்திருக்கலாம். அதற்கான வாய்ப்பையும் தி.மு.க தவறவிட்டுவிட்டது" என்றார் ஆதங்கத்துடன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசினோம். `` கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் காங்கிரஸ் சார்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்கிறார். அவரைத் தவிர்த்துத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் யார் பெயரும் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அகில இந்திய நிர்வாகிகளின் பெயரும் இல்லை. மம்தா பானர்ஜி உட்பட மாநில முதல்வர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலைத் திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி வந்திருந்தார். இப்போது மாநில முதல்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் பார்க்கவில்லை.

அதேநேரம், தேர்தலுக்கு முந்தைய மதிப்பீடுகள், இப்போது இல்லை என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நூற்றுக்கணக்கான கூட்டங்களில், ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் எனக் குறிப்பிட்டார் ஸ்டாலின். தேர்தல் முடிவில் அவர் நினைத்தது நடக்கவில்லை. தமிழகத்தைப் போல வடமாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறாததில் தி.மு.க-வுக்கு வருத்தம். அதேநேரம், பா.ஜ.க எதிர்ப்பு என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. காங்கிரஸுடன் நல்ல உறவில் இருக்கிறார்கள். சிலைத் திறப்பு விழா தொடர்பாக, கே.எஸ்.அழகிரிக்கு அழைப்பிதழ் வந்திருக்கிறது. இந்த விவகாரத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்கின்றனர் இயல்பாக.

அடுத்த கட்டுரைக்கு