Published:Updated:

பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் செய்தது தவறா?! - விவாதப்பொருளான ஸ்டாலினின் உரை

ஸ்டாலின் - மோடி

```ஒன்றிய அரசு’ என்பது அரசியல் அமைப்புரீதியாக வழங்கப்படும் சொல். நாங்கள்தான் அரசியல் அமைப்புரீதியாகக் கையாள்கிறோம். இதை அவர்கள் அரசியலாகப் பார்க்கிறார்கள். இது அரசியல் இல்லை. அரசியல் சட்டம் கொடுத்திருக்கக்கூடிய உரிமை.” - இராஜீவ் காந்தி

பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் செய்தது தவறா?! - விவாதப்பொருளான ஸ்டாலினின் உரை

```ஒன்றிய அரசு’ என்பது அரசியல் அமைப்புரீதியாக வழங்கப்படும் சொல். நாங்கள்தான் அரசியல் அமைப்புரீதியாகக் கையாள்கிறோம். இதை அவர்கள் அரசியலாகப் பார்க்கிறார்கள். இது அரசியல் இல்லை. அரசியல் சட்டம் கொடுத்திருக்கக்கூடிய உரிமை.” - இராஜீவ் காந்தி

Published:Updated:
ஸ்டாலின் - மோடி

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நெடுஞ்சாலை, ரயில்வேதுறையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் (26-05-2022) நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்திலிருந்து மாலை 4:56 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் காரில் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை 5:45 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க ‘கோ பேக் மோடி’ என்ற வாசகத்தை ட்விட்டரில் சர்வதேச அளவில் டிரெண்ட் செய்திருந்ததோடு, கறுப்புக்கொடிகள் காட்டி, பலூன்களில் ‘கோ பேக் மோடி’ என்கிற வாசகத்தை எழுதிப் பறக்கவிட்டது. ஆனால், இந்த முறை எப்போதும்போல் அல்லாமல், மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும்விதமாக தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சாலை ஓரமாகத் திரண்டிருந்த மக்களை ரசித்த மோடி ஒரு கட்டத்தில், காரை நிறுத்தி மக்களின் வரவேற்பை ஏற்றார்.

எந்த ஓர் எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் மோடிக்கான வரவேற்பு, எப்போதும்போல் தி.மு.க-வின் ஐடி விங் நேரடியாக மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் களமிறங்காதது, தமிழ்நாடு தாண்டி வெளிமாநிலங்களில் உள்ள பா.ஜ.க தொண்டர்களும் ‘வணக்கம் மோடி’ என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தது... போன்ற காரணங்களால் உற்சாகமாக இருந்தனர் பா.ஜ.க-வினர். எனினும் "ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு மு.க.ஸ்டாலின் ஒரு சான்று. முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டுப் பேசிய பேச்சு ஓர் அரசியல் நாடகம்” என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்துக்குப் பிறகு இந்த நிகழ்வு விவாதமாக மாறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``என்னதான் திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் போன்ற விஷயங்கள் பேசினாலும் தமிழர்களை உணர்ச்சிபூர்வமான அடிமைகளாக மாற்றுவது திராவிட இயக்கத்தின் கைவந்த கலை. திராவிட இயக்கம் என்பதே உணர்ச்சிகளின் அரசியல்தான். அறிவுபூர்வமான அரசியலை எந்தக் காலத்திலும் அது செய்ததில்லை. தன்னெழுச்சியாக வந்த மொழிப் போராட்டத்தைக்கூட தங்களுக்கான அரசியல் அறுவடையாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர்” என்கிறார், பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன்.

“இப்படித்தான் உணர்ச்சிகளைத் தூண்டி ‘எடப்பாடி அரசை எடுபிடி அரசு’ என்றார்கள். ஆனால், அவர்கள் செய்த சாதனைகளை இவர்கள் ஏதும் செய்ய முடியவில்லையே! 7.5% உள் ஒதுக்கீடு மூலம் 405 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குப் போனது, 11 மருத்துவக் கல்லூரிகளை வாங்கியது, இனிமேலும் வாங்கப்போவது என அவர்களின் திட்டங்களெல்லாம் மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டதால்தான் தமிழ்நாட்டுக்கு நிறைய வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவர முடிந்தது. ஆனால், தி.மு.க மத்திய அரசோடு உடன்படவும் முடியாமல், முரண்படவும் முடியாமல் இரண்டும் கெட்ட நிலைமையில் இருக்கிறது” என்கிறவர், ``நீட் ரத்து யாருடைய கோரிக்கை... தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையா... எழுதுபவர்கள் முட்டாள்களா?” என்கிற கேள்வியை முன்வைக்கிறார்.

புரட்சி கவிதாசன்
புரட்சி கவிதாசன்

``ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கிறது. அரசுப் பள்ளி, கிராமப்புற மாணவர்களெல்லாம் பயனடைந்துவருகிறார்கள். தி.மு.க அரசின் கோரிக்கைகளைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளாக வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் அந்த மேடையில் முன்னிலைப்படுத்திய மூன்று விஷயங்கள் குறித்து ஏற்கெனவே டெல்லியில் பிரதமரைச் சந்தித்தபோது வலியுறுத்தியிருந்ததாகச் சொன்னார்கள். அதைத் தாண்டி வேறு முக்கிய விஷயங்கள் குறித்தோ அல்லது தமிழக மக்களின் முக்கியத் தேவைகள் குறித்தான கோரிக்கைகளையோ முன்வைத்திருக்கலாமல்லவா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஜி.எஸ்.டி பாக்கி என்கிறார் முதல்வர். ஆனால், ஜி.எஸ்.டி நிலுவை நான்காம் தேதியோடு முடிந்ததாக நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் சொல்கிறார். இதில் யார் சொல்வதை நம்புவது... கச்சத்தீவைக் கொடுத்தது நீங்கள். இப்போது மீட்கச் சொன்னால் எப்படி... நீட் விலக்குதான் கேட்கிறார்கள். அந்த விலக்கு ஒரு முறைக்கு இரு முறை கொடுத்திருக்கிறார்கள். நீட்டைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும். ஆனால், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று ஒரு வாரத்தில் அதை ரத்தாக்குவோம் என்று வெற்று அறிக்கை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாடு முதல்வர் மேடையில் அரசியல் நாகரிகம் கொஞ்சம்கூட இல்லாமல், திராவிட இயக்கத்துக்கு உரிய கலாசாரத்தின் மொத்த உருவமாக நடந்துகொண்டார். இது பா.ஜ.க-வுக்கான தோல்வி கிடையாது. எழுச்சிகரமான வரவேற்பு கொடுத்திருக்கிறோம். தமிழ்நாடு மாறிவருகிறது. திராவிட இயக்கங்கள் கையிலிருந்து தமிழகம் நழுவிக்கொண்டிருப்பதால் வரும் கதறல்தான் இது. 11 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது தமிழை வழக்காடு மொழியாகக் கேட்க முடியவில்லையா... அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லையா... இதனால்தான் எங்கள் தலைவர் அண்ணாமலை, ‘நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும். தி.மு.க அரசு செய்த குற்றங்களையெல்லாம் ஒப்புக்கொண்டால் அதை எதிர்காலத்திலாவது சரிசெய்வதற்கு டெல்லிக்கு அழைத்துப்போகிறோம்’ என்கிறார். இதைவிட திறந்த மனநிலையில் யார் இருக்க முடியும்” என்கிறார் புரட்சி கவிதாசன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிரதமரோடு எந்தப் பிரச்னையும் இல்லை” என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி.

``ஒன்றியத்தின் பிரதம அமைச்சர் என்கிற முறையில் அவரிடம் கேட்பதற்கு மாநில அரசுக்குப் பல கோரிக்கைகள் இருக்கின்றன. இந்தக் கோரிக்கைகள் ஒரு நாள் கோரிக்கைகள் அல்ல. அரை நூற்றாண்டுக் கோரிக்கை. கச்சத்தீவு மீட்பு என்பது அரசியல் சட்டத்திலேயே ஒன்றிய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் பெற முடியும் என்றிருக்கிறது. அதனால்தான் அந்தக் கோரிக்கை. கச்சத்தீவைக் கொடுத்தது நீங்கள்தான் என்கிறார்கள். முதல் ஒப்பந்தம் எமர்ஜன்சி நேரத்தில் போடப்பட்டது. அன்றைக்கு வாஜ்பாயும், தி.மு.க-வும் எதிர்த்தார்கள். இரண்டாவது ஒப்பந்தம் போடும்போதும் எதிர்த்து சண்டை போட்டது தி.மு.க-தான். இது வரைக்கும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை அ.தி.மு.க., தி.மு.க இரண்டும் சேர்த்துத்தான் போட்டிருக்கின்றன.

1972-லிருந்து கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களில் பா.ஜ.க-வின் தேசிய தீர்மானத்தில் இது குறித்துப் பேசவில்லையே... ஆட்சிக்கு வந்தும் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து ஒரு கடிதமாவது எழுதியுள்ளார்களா... இது ஒன்றிய அரசின் பட்டியலில் வரக்கூடியது. மாநிலக் கட்சியாக இருந்து கோரிக்கைதான் வைக்க முடியும். கடந்தகாலத்தில் பாதுகாப்புப் பிரச்னை என்று சொன்னீர்கள். இன்றைய சூழலில் ஒன்றிய அரசு அதிகப்படியான நிதி இலங்கைக்குக் கொடுத்திருக்கிறது. அப்படியிருக்கும்போது `நீங்களே கோரிப் பெறலாம்’ என்கிறோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது... இதைத்தானே கோரிக்கையாக வைத்திருக்கிறோம்.

ஸ்டாலின் மோடி
ஸ்டாலின் மோடி

அடுத்து, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் கையெழுத்து போடும்போது, `எங்களுக்கு இழப்பீடு வேண்டும்’ என்று சொன்னார். ஆனால், இதுவரை முழுமையான இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படவில்லை. வரி வாங்கும் எல்லா இடங்களையும் ஒன்றிய அரசு வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், மாநில அரசு வரி வருவாய் இல்லாத சிக்கலில், ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியை வைத்துத்தான் அரசு நடத்த முடியும். போதிய நிதி வரவில்லை என முதல்வர் டெல்லியில் நேரடியாகப் போய் கோரிக்கை வைத்தார். இது பல்வேறு முறை கடிதம் மூலமாகவும் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அதை முன்வைத்தோம். நிகழ்வு ஆரம்பிக்கும்போது `31,00 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிக்கு நன்றி’ என்று சொல்லித்தான் ஆரம்பித்தார். ஆனால், எங்கள் கோரிக்கைகளை வைக்காமல் இருக்க முடியாது. சமீபகாலமாக ஜி.எஸ்.டி நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றிய அரசு தலையீடு அதிகமாக இருக்கிறது. ஆனால், எந்தத் திட்டத்தையும் தொடர்ச்சியாகச் செய்து முடிக்கவில்லை.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

`ஒன்றிய அரசு’ என்பது அரசியல் அமைப்புரீதியாக வழங்கப்படுகிற சொல். நாங்கள்தான் அதை அரசியல் அமைப்புரீதியாகக் கையாள்கிறோம். இதை அவர்கள் அரசியலாகப் பார்க்கிறார்கள். இது அரசியல் இல்லை. அரசியல் சட்டம் கொடுத்திருக்கக்கூடிய உரிமை. எனவே, மேடையில் பிரதமரை எந்த அவமரியாதையும்படுத்தவில்லை. அவமரியாதை என்று சொல்வதே தவறு. ஏனென்றால் அரசு சார்பிலும், பா.ஜ.க சார்பிலும் முழுக்க முழுக்க எல்லா வரவேற்பும் பிரதமருக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு கோரிக்கைவைப்பதை அவமரியாதையாகப் பார்த்தால் எப்படி... சமூகநீதி, பெண் உரிமை, மாநில உரிமை போன்ற விஷயங்களைப் பிரதமர் பேச வேண்டும், எழுத வேண்டும், எங்களுக்காக வாதாட வேண்டும் என்று இந்த மாநில மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அப்படித்தான் இந்த மேடைப் பேச்சைப் பார்க்க முடியும்” என்கிறார் இராஜீவ் காந்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism