Published:Updated:

தனியார் சோலார் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டினரா திமுக எம்.எல்.ஏ? - வைரலான வீடியோவால் பரபரப்பு

மார்கண்டேயன்
News
மார்கண்டேயன்

தூத்துக்குடியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், சோலார் பேனல் அமைத்து வரும் தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டி ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புங்கவர்நத்தம், ஆத்திக்கிணறு முள்ளுப்பட்டி, சோழபுரம், ஈராச்சி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் ஜி.ஆர்.டி எனும் தனியார் நிறுவனம் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அந்நிறுவனம் 400 ஏக்கர் நிலங்களை போலி பட்டா மூலமாக கையகப்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சோலார் பேனல் அமைக்கப்பட்டு வருவதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், நீர்வரத்து கால்வாய்கள் தடைபடுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்திருக்கிறார்கள்.

சோலார் பேனல் அமைப்பட்டு வரும் இடத்தில் மார்கண்டேயன்
சோலார் பேனல் அமைப்பட்டு வரும் இடத்தில் மார்கண்டேயன்

இதனையடுத்து விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன் தலைமையில் விவசாயிகளும் பொம்மையாபுரம் – போடிபட்டி இடையில் நடந்து வந்த சோலார் பேனல் அமைக்கப்பட்டு வரும் இடத்தில் முற்றுகைப் போரட்டம் நடத்தினர். இதனையடுத்து சோலார் பேனல் அமைப்பட்டு வரும் இடத்திற்கு தன் ஆதரவாளர்களுடன் சென்ற மார்கண்டேயன், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பொறியாளர் உள்ளிட்ட பணியாளர்களை ஒருமையிலும், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளாலும் கடுமையாக வசைபாடி மிரட்டியுள்ளார். அவர் வசைபாடி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ-வே தனியார் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தினரை மிரட்டியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாஜியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் மார்கண்டேயனிடம் விசாரணை நடத்திய பிறகு அமைதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மார்கண்டேயனை தொடர்பு கொண்டோம். ``அண்ணன் ஒரு மீட்டிங்ல இருக்காங்க. பிறகு பேசுவார்” எனச் சொன்னார் அவரது உதவியாளர்.

மார்கண்டேயன்
மார்கண்டேயன்

இந்த விவகாரம் குறித்து அவரின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம், ``சோலார் பேனல்கள் அமைப்பதற்காக அந்த நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. சோலார் பேனல் அமைக்கும் பணிகளை சரியாகச் செய்யவில்லை. அதே நேரத்தில் இதனால் வரத்துக்கால்வாய்கள் பல இடங்களில் தடைபடுவதாகவும் சொன்னார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களின் பிரச்னையை சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிகளிடம் எம்.எல்.ஏ நேரடியாகவே சொன்னார். விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்திய பிறகும் அந்த நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் பேசியும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் எந்த பதிலையும் சொல்லவில்லை. இதனால் அண்ணன் கொஞ்சம் டென்ஷன்ல பேசிட்டார். அவர், நிறுவனத்திடம் பணம் எதுவும் கேட்டு மிரட்டவில்லை. அண்ணனுக்கு பிடிக்காதவங்க எதை எதையோ கிளப்பி விடுறாங்க. இது சம்மந்தமா கட்சித் தலைமையிடம் விளக்கமும் சொல்லிட்டார்” என்றனர்.

மார்கண்டேயன்
மார்கண்டேயன்

இது தொடர்பாக ஜி.ஆர்.டி நிறுனத்தின் பொறியாளர்கள் தரப்பில் பேசினோம், ``அது முடிஞ்சு போன பிரச்னை. எம்.எல்.ஏ ஏன் கோவப்பட்டுப் பேசினார்னு எங்களுக்குத் தெரியலை. அவர் கோவமாப் பேசினதும் நாங்க உடனே வேலையை நிறுத்திட்டோம். இப்போ பழையபடி வேலை நடந்துட்டு இருக்கு. இப்போ எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.

கட்சியினர் வட்டாரத்தில் பேசினோம், ``அந்த நிறுவனம் மூணு வருசமா சோலார் பேனல் வேலையை செஞ்சுட்டு வருது. அனுமதி வாங்காமலா மூணு வருசம் வேலை நடக்குது. விவசாயம் பாதிப்பு ஒரு காரணத்தை அவர் சொல்றாரு. இத்தனை நாளா எந்தப் பிரச்னையும் இல்லாமத்தானே இருந்துச்சு. சம்மந்தப்பட்ட கம்பெனியிடம் மார்கண்டேயன் குறிப்பிட்ட தொகையை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது, அதற்கு, கம்பெனி நிர்வாகம் படியாததுனால இவரே போராட்டமும் நடத்தினார். அதை கம்பெனி நிர்வாகம் கண்டுக்காததுனால அவரே நேரடியா வேலை நடக்குற இடத்துக்குப் போயி சகட்டுமேனிக்குத் திட்டியிருக்கார். அந்த வீடியோ இப்போ வைரலானதுனால என்ன செய்யுறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கார்.

மார்கண்டேயன்
மார்கண்டேயன்

ஆளும்கட்சி எம்.எல்.ஏவா இருந்துட்டு இப்படி அடாவடியா நடக்கலாமா? இதுக்கு முன்னால அ.தி.மு.க எம்.எல்.ஏவா இருந்தப்போ வைப்பாறு மணல் கொள்ளையில சம்மந்தப்பட்டு பிரச்னையா வெடிச்சுது. அதனாலதான் ஜெயலலிதா அடுத்தமுறை சீட்டே கொடுக்கல. திரும்ப சுயேச்சையா நின்னு தோத்துப் போனார். இப்போ தி.மு.கவுல சேர்ந்து திரும்பவும் எம்.எல்.ஏவா ஆயிட்டார். மார்கண்டேயனுக்கு தொகுயில நல்ல பேரு இருக்குங்கிறது உண்மைதான். அந்த நல்ல பேரை வச்சும், கட்சியை வச்சும் இப்படி அடாவடி செய்யக்கூடாது” என்றனர்.

இதுகுறித்து பின்னர் நம்மிடம் பேசிய மார்கண்டேயன், ``அந்த நிறுவனம் சோலார் பேனல் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் ஆவணங்களில் முறைகேடுகள் உள்ளன. மாவட்டத்திலேயே விளாத்திகுளம் பின்தங்கிய தொகுதி. மழையை நம்பித்தான் விவசாயம் செய்கிறார்கள். மழைநீர் வரத்துக் கால்வாய்களை துண்டித்து சோலார் பேனல்களை அமைக்கிறார்கள். இதை விவசாயிகள் என்னிடம் சொன்னார்கள. 40,000 வாக்குகள் வித்யாசத்தில் என்னை ஜெயிக்க வைத்த மக்களின் குறையை நிவர்த்தி செய்வதுதானே என் கடமை. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் விவசாயிகளின் புகாரை எடுத்துச் சொன்னேன். எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளுடன் முற்றுகைப் போராட்டம் நடத்தியும் அந்நிறுவனம் செவி சாய்க்காததால் வேலை நடந்த இடத்துக்கு நேரில் போனேன். அங்குள்ள பொறியாளர்களிடம் பேசியும் சரியான பதில் இல்லை. அதனால் கொஞ்சம் டென்ஷன்ல அவங்களை சத்தம் போட்டேன். மற்றபடி பணம் கேட்டு மிரட்டியதாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. என்னைப் பிடிக்காதவர்கள் கிளப்பிவிடுகிறார்கள். கட்சித் தலைமையிடம் இதைபற்றி விளக்கிவிட்டேன்" என்றார்.