சேலம், எடப்பாடி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்குச் சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அதை அகற்றி தன்னுடைய இடத்தை மீட்டுக் கொடுக்குமாறும் அண்மையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது மனு கொடுத்திருக்கிறார். அந்த மனு, சம்பந்தப்பட்ட எடப்பாடி தாசில்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக தாசில்தார் முறையாக நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக, தவறான தகவலை தனக்கு பதிலாக அளித்ததாக செல்வராஜ் குற்றம்சாட்டுகிறார். செல்வராஜ் இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ-விடம் மனு அளித்திருக்கிறார்.

அந்தச் சமயம் சம்பந்தப்பட்ட எடப்பாடி தாசில்தார் லெனின் அங்கு வரவே, `இவர்தான் தவறான தகவலை வழங்கியிருக்கிறார்' என்று அதிகாரியிடம் செல்வராஜ் கூறியிருக்கிறார். அதோடு சம்பந்தப்பட்ட தாசில்தாரையும், மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வருமாறு கூறியிருக்கிறார்.
அதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றவே, தாசில்தார் லெனின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வைத்து சம்பந்தப்பட்ட செல்வராஜை `ஒழுங்காப் பேசு... இல்லைன்னா முகத்தைப் பேத்துடுவேன்' என மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. தாசில்தார் மிரட்டுவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
இது குறித்து தாசில்தார் லெனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட நபர், நான் சரியாக பதில் வழங்கவில்லை என்றால், எனக்கு மேலே இருக்கும் அதிகாரிகளிடம் என்னைப் பற்றிப் புகார் தெரிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அதிகாரிகள் மத்தியில் என்னுடைய கையைப் பிடித்து, `வா கலெக்டர்கிட்ட போகலாம்' என இழுக்கிறார்.

ஓர் அதிகாரி என்றுகூடத் பாக்காமல் என்னைத் தகாத வார்த்தையில் பேசினார். அதனால் நானும் கோபத்தில் ஒருசில வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்” என்றார்.