Published:Updated:

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாரா உத்தவ் தாக்கரே? - புகாரும் விசாரணையும்!

தாக்கரே குடும்பம்

உத்தவ் தாக்கரேயும், அவரின் குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தனரா என்பது குறித்து விசாரித்துவருவதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாரா உத்தவ் தாக்கரே? - புகாரும் விசாரணையும்!

உத்தவ் தாக்கரேயும், அவரின் குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தனரா என்பது குறித்து விசாரித்துவருவதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
தாக்கரே குடும்பம்

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேயும், அவரின் குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகவும், அது குறித்து மத்திய விசாரணை ஏஜென்சி விசாரிக்க வேண்டும் என்றும் கோரி பொதுநலன் வழக்கு ஒன்றை கெளரி பிடே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கெளரி பிடே தாக்கல் செய்திருக்கும் மனுவில், ``உத்தவ் தாக்கரே குடும்பத்துக்கு அதிகாரபூர்வமாக எந்தவித வருமானமும் கிடையாது. ஆனால் மும்பை, ராய்கட்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன. தாக்கரே குடும்பத்துக்கு நெருக்கமான சிலரிடம் அமலாக்கப் பிரிவும் சிபிஐ-யும் ரெய்டு நடத்தி சொத்துகள், பணம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் இன்னும் விசாரணை ஏஜென்சிகளின் கண்காணிப்பில்தான் இருக்கின்றனர். அவர்களிடம் பிடிபட்ட சொத்து, பணம் ஆகியவை உத்தவ் தாக்கரே குடும்பத்துக்குச் சொந்தமானவை.

கெளரி பிடே
கெளரி பிடே

கொரோனா காலத்தில் பிரின்டிங் மீடியா கடுமையான நஷ்டத்தைச் சந்தித்த நேரத்தில், தாக்கரே குடும்பத்துக்குச் சொந்தமான பிரபோதன் பிரகாஷன் நிறுவனத்தில் 42 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்து ரூ.11.5 கோடி நிகர லாபம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கறுப்புப் பணம் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு வரை பிரபோதன் பிரகாஷனில் எந்தவித வர்த்தகமும் நடக்கவில்லை. திடீரென 2019-ம் ஆண்டு 37.18 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. அதில் ரூ.3.25 கோடி நிகர லாபமாக கிடைத்திருக்கிறது. 2020-ம் ஆண்டு, 44 கோடி ரூபாய் வர்த்தகத்தின் மூலம் 9 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. எனவே, உண்மையை வெளிக்கொண்டுவர பாரபட்சமற்ற மத்திய விசாரணை ஏஜென்சிகள் விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது தாக்கரே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், `எந்தவித ஆதாரமும் இல்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக’க் குறிப்பிட்டனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அரசு வழக்கறிஞர் அருணா ராய் ஆஜராகி, தாக்கரே குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து ஏற்கெனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து பொதுநலன் மனு மீதான விசாரணையை நீதிபதிகள் தீரஜ், வால்மீகி ஆகியோர் முடித்துவைத்தனர். ஏற்கெனவே சிவசேனாவை இரண்டாக உடைத்துவிட்ட நிலையில் தற்போது உத்தவ் தாக்கரே குடும்பத்துக்கு எதிராகவும் விசாரணை தொடங்கியிருப்பது தாக்கரே குடும்பத்துக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது.