Published:Updated:

2011-ல் குருவைக் கொல்ல முயன்றோமா?- ராமதாஸுக்கு தி.மு.க அடுக்கடுக்கான கேள்விகள்

``குரு மறைவுக்குத் திரண்ட இளைஞர்கள் கூட்டம் ராமதாஸை மிரள வைத்தது. பிற்காலத்தில் வன்னியர் சங்கம் என்றால் குரு என்ற அடையாளம் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்துகொண்டார். அதனால் குருவைப் புதைத்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படாமல் அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தடுத்துவிட்டார்''

Guru
Guru

``குருவைக் கொல்ல தி.மு.க-வினர் திட்டம் தீட்டியதாகச் சொன்னீர்களே. ஏன் எங்கள் மீது வழக்கு தொடுக்கவில்லை. பிறகு ஏன் எங்களோடு கூட்டணி சேர்ந்தீர்கள். நீங்கள் யார் என்று இந்த உலகத்துக்குத் தெரியும். உங்கள் அரசியல் விளையாட்டை எங்களிடம் காட்டாதீர்கள்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு எதிராகப் பகிரங்கமாகக் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கர்.

காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் திறப்பு விழா
காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் திறப்பு விழா

வன்னியர் சங்கத் தலைவராகவும் பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், அவருக்கு மணிமண்டப திறப்புவிழா கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ், ``நாம் என்றோ என்றைக்கே குருவை இழந்திருப்போம். தி.மு.க-வினர் குருவைக் கொல்வதற்குப் பல வழிகளில் முயற்சி செய்தார்கள். அதிலிருந்து நானும் ஜி.கே மணியும்தான் காப்பாற்றினோம்" என்று பகிரங்கமாகப் பேசி அனலைக் கிளப்பியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து சிவசங்கரிடம் பேசினோம். ``மருத்துவர் ராமதாஸுக்கு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். தி.மு.க ஆட்சி நடைபெற்றது 2006- 2011-ம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லும் நோக்கம் என்ன. ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே. குருவைக் கொல்ல தி.மு.க-வினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011-ம் ஆண்டு தேர்தலில் ஏன் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தீர்கள். குருவைக் கொல்ல தி.மு.க-வினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி தி.மு.க கூட்டணியில் போட்டியிட முன்வந்திருப்பார். 2011-ம் ஆண்டு தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நேரத்தில் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க-வுக்கு என தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு சொல்லிவிட்டது.

அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கர்.
அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கர்.

பா.ம.க குழு ஜெயங்கொண்டம் தொகுதி குருவுக்கு வேண்டும் எனக் கேட்டது. ஒருநாள் பேச்சுவார்த்தை நின்றுபோனது. பிறகு அன்று கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனிடம் அன்புமணி பேசி, அவர் மு.க.ஸ்டாலினிடம் பேசி ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க-வுக்கு வழங்கப்பட்டது. மறைந்த குரு அறிவாலயம் சென்று கலைஞரிடத்திலே வாழ்த்து பெற்றார். கலைஞர் அப்போது குருவைத் தட்டிக் கொடுத்து `ஜெயங்கொண்டத்திலே ஜெயம் கொள்வாய்' என வாழ்த்தியதை குரு எல்லோரிடத்திலும் பகிர்ந்துகொண்டார். குருவும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அந்தக் குருவை தி.மு.க கொலை செய்யப் பார்த்தது எனச் சொல்வது எவ்வளவு பெரிய பாதகம்?

ராமதாஸ் ஏன் இப்படிப் பிதற்ற வேண்டும். காரணம் இருக்கிறது. குரு மறைவுக்குப் பிறகு, பா.ம.க-வின் சரிவு தொடங்கிவிட்டது. குரு, உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியோ உதவவில்லை என்ற குற்றச்சாட்டை வன்னியர் சங்கத்தில் உள்ள பலர் சொன்னார்களே? அப்போது உதவி இருந்தால், சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குரு நீண்ட காலம் வாழ்ந்திருப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு 39 நாடாளுமன்றத் தொகுதிகளை வழங்கிவிட்டார்கள் என்ற எரிச்சலிலும், ராமதாஸ் தனது சுயநலத்துக்கு அரசியலைப் பயன்படுத்துவதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர்
guru
guru

அதைக் குருவின் சகோதரியும் தெரிவித்திருந்தார். குரு, தனது கடைசி நாள்களில் தைலாபுரம் தோட்டத்துக்குச் செல்லவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. மிகுந்த மன வருத்தத்துக்கிடையே குரு சிகிச்சைகூட எடுத்துக்கொள்ளாமல் இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது. கடைசி நாள்களில் மருத்துவ உதவி செய்தார் ராமதாஸ். ஆனால், அதை வன்னியர் சங்க இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் குரு மறைவுற்ற அன்று அன்புமணிக்குக் காடுவெட்டி கிராமத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பு.

அடுத்து குரு மறைவுக்குத் திரண்ட இளைஞர்கள் கூட்டம் ராமதாஸை மிரள வைத்தது. பிற்காலத்தில் வன்னியர் சங்கம் என்றால் குரு என்ற அடையாளம் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்துகொண்டார். அதனால் குருவைப் புதைத்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படாமல் அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தடுத்துவிட்டார். முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்க விடாமல் தடுத்தார். குரு நினைவிடத்துக்கு குருவின் மகன், மகளையே செல்ல விடாமல் தடுத்தார். வேறு இடத்தில் இப்போது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.

குருவின் குடும்பம்
குருவின் குடும்பம்

இதை எல்லாம் திசை திருப்பத்தான் இப்போது `குருவைக் கொல்ல முயற்சி' என ஓர் அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்கிறார். அதிலும் குருவுக்காகக் கூடிய இளைஞர்கள் கூட்டத்தைத் தக்க வைக்கத்தான், குருவின் மீது அக்கறையான இந்தப் பேச்சு. காடுவெட்டி குருவைப் பலமுறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களுக்கு போலீஸ் வேனில் அலைக்கழித்து, அவர் உடல்நலம் முழுவதும் குன்றி, நோய்வாய்ப்படுவதற்கு அ.தி.மு.க ஆட்சிதான் காரணம் என்று ராமதாஸே குற்றம் சுமத்திய காலம் உண்டு.

அதுதான் உண்மையும். காடுவெட்டி குருவுக்கு அ.தி.மு.க ஆட்சியில் நடந்த அராஜகங்களை மறந்துவிட்டு `தேர்தல்கால அறுவடைக்காக' அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியின் முதலமைச்சர், அமைச்சர்களை எல்லாம் தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வந்து தடபுடலாக அறுசுவை விருந்தளித்த ராமதாஸ், தி.மு.க மீது பாய்வதற்குத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது இன்னொரு காரணம்.

விழாவில் பேசும் ராமதாஸ்
விழாவில் பேசும் ராமதாஸ்

திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியப் பெரு மக்களுக்காக ஆற்றிய தொண்டை நினைவுகூர்ந்து அச்சமுதாய மக்கள் பெருவாரியாக தி.மு.க-வுக்கு வாக்களித்துவிட்டார்கள். மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு 39 நாடாளுமன்றத் தொகுதிகளை வழங்கிவிட்டார்கள் என்ற எரிச்சலிலும், ராமதாஸ் தனது சுயநலத்துக்கு அரசியலைப் பயன்படுத்துவதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள் என்பதால் திசை திருப்பும் அரசியலில் அவர், தி.மு.க மீது பழி போட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக, குரு இறப்புக்கான வன்னிய இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, தி.மு.க மீது பொய்ப் புகார்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார். உங்களுடைய அரசியல் நாடகம் மக்களுக்கு நன்கு தெரியும். எங்களிடம் காட்டாதீர்கள். உங்களை எங்கு சந்திக்க வேண்டுமோ அங்கு சந்திக்கிறேன்" என்று காட்டமாக முடித்தார்.