Published:Updated:

`எடப்பாடி ஆட்சி முடியட்டும், நெல்லிக்காய்கள் சிதறப் போகின்றன!'- திண்டுக்கல்லில் கொதித்த தினகரன்

ஆர்.குமரேசன்
வீ.சிவக்குமார்

`நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. தமிழகத்தில் முதலீடு செய்வதைக் கைவிட்டு, பல நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன' என்கிறார் டி.டி.வி.தினகரன்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ``பொருளாதார மந்தநிலையைச் சீராக்க, மத்திய, மாநில அரசுகள் நிர்வாகத்தை சீராக்க வேண்டும். முறையாக நிர்வாகம் செய்தால், முதலீடு தன்னால் வரும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவை வைத்து, தினகரன் காணாமல் போய்விடுவார். அ.ம.மு.க டெபாசிட் வாங்காத கட்சி எனப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் எப்படி நடந்தது, அதன் நடைமுறைகள் எப்படி என அனைவருக்கும் தெரியும்.

T. T. V. Dhinakaran
T. T. V. Dhinakaran

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க, ஆண்டிபட்டியில் ஏன் தோல்வியைச் சந்தித்தது. இங்கு தேர்தல் நடைமுறைதான் முடிவுகளை மாற்றுகிறது. ஒரு தேர்தலில் தோல்வியடைந்ததால் இனி கட்சியே இருக்காது என்றால், இந்தியாவில் பல கட்சிகள் காணாமல்போயிருக்கும்.

அந்தத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் சுயேச்சைகளாக நின்றார்கள். அதைக் கவனிக்க வேண்டும். அதனால், முதலில் கட்சியைப் பதிவுசெய்து, இனி வரும் தேர்தல்களில் கட்சிக்கென தனி சின்னத்தை வாங்கி போட்டியிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம். அதனால்தான், வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை. அ.ம.மு.க-விலிருந்து சில பேர் வெளியே போகிறார்கள். அவர்கள் ஏன் வெளியே போகிறார்கள் என்பது மக்களுக்கே தெரியும். அதுபோல பல பேர் வந்து சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தினகரன்
தினகரன்

இப்போதைய நிலையில், அ.தி.மு.க ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி. ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் ஒன்றாக இருக்கிறது. ஆட்சி முடியட்டும், நெல்லிக்காய்கள் எப்படிச் சிதறுகின்றன என்று பாருங்கள். அ.தி.மு.க-வில் பல குழுக்கள் இருக்கின்றன. திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் மூன்று குழுக்களாகப் போட்டி போட்டார்கள். அடுத்த தேர்தலில், முக்கியக் கட்சியாக அ.ம.மு.க இருக்கும்.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் இறுதிக்குள் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அப்படி நடந்தால் மகிழ்ச்சி. டி.டி.வி-யை ஒழிக்கப் பலபேர் திட்டம் போடுகிறார்கள். அவர்களது தந்திரம் பலிக்காது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. காவல்துறை தங்கள் கடைமையை சரியாகச் செய்ய வேண்டும்’’ என்றார் கொதிப்புடன்.