Published:Updated:

`வாரிசு என்பதால் மட்டும் உதயநிதிக்குப் பொறுப்பு கிடைக்கவில்லை!' - லியோனி

இளைஞர் அணியினர், ரசிகர்கள், கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் மத்தியில் உதயநிதிக்கு உள்ள வரவேற்பு தி.மு.க-வுக்குப் புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.

தி.மு.க கூட்டத்தில் உரையாற்றும் லியோனி
தி.மு.க கூட்டத்தில் உரையாற்றும் லியோனி ( உ.பாண்டி )

த்உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் தி.மு.க-வின் இளைஞரணி உண்மையான இளைஞரணியாக உருவெடுத்துள்ளது எனத் திண்டுக்கல் லியோனி கருத்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க கூட்டத்தில் உரையாற்றும் லியோனி
தி.மு.க கூட்டத்தில் உரையாற்றும் லியோனி
உ.பாண்டி

ராமேஸ்வரத்தில் தி.மு.க சார்பில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்சியில் பங்கேற்பதற்காகத் திண்டுக்கல் லியோனி வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய லியோனி, ''தி.மு.க-வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருப்பது கட்சியினரை மட்டுமல்ல கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இது 6 மாதங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். ஏனெனில், தி.மு.க இளைஞர் அணி பொறுப்பில் இருப்பவர்கள் இளைஞர்களாக இருப்பதில்லை. உண்மையான இளைஞரணியாக அதைக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரு கருத்து கட்சியின் அனைத்துத் தரப்பிலும் இருந்து வந்தது. அதைப் போக்கும் விதமாகக் கட்சியினரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையிலும், அவர் பிரசாரத்தில் காட்டிய ஈடுபாடு மற்றும் மக்களிடையே அவருக்கு உள்ள செல்வாக்கு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உதயநிதி இளைஞர் அணிக்கு பொறுப்பேற்றுள்ளார்.

இளைஞரணிக்கு இவரது வரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் அணியினர், ரசிகர்கள், கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் மத்தியில் உதயநிதிக்கு உள்ள வரவேற்பு தி.மு.க-வுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். தலைவர்கள் பொறுப்பில் இருக்கும்போது தங்கள் வாரிசுகளை அரசியல் பொறுப்புகளுக்குக் கொண்டு வர நினைப்பதில்லை. ஆனால், அந்தக் கட்சியில் ஏற்படும் தேவைகள் அடிப்படையில் வாரிசுகள் பொறுப்புக்கு வருவது தவறில்லை. அ.தி.மு.க-வில்கூட ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் போன்றோர் எல்லாம் வாரிசுகள்தாம். தமிழிசை செளந்தரராஜன்கூட அரசியல் தலைவரின் மகள்தான். எனவே, அரசியல் பாரம்பர்யத்தில் வந்தவர்கள் பொறுப்புக்கு வருவதில் தவறில்லை.

தி.மு.க கூட்டத்தில் உரையாற்றும் லியோனி
தி.மு.க கூட்டத்தில் உரையாற்றும் லியோனி
உ.பாண்டி

ஸ்டாலின் மகன் என்ற காரணத்தால் மட்டும் உதயநிதிக்கு இந்தப் பொறுப்பு கிடைக்கவில்லை. அதற்கு அப்பாற்பட்டு திரைப்பட உலகில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, அவரது பிரசாரத்துக்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பு போன்ற எல்லாக் காரணங்களும்தாம் இந்த வாய்ப்பை அவருக்கு அளித்திருக்கிறது. ஸ்டாலின் மகன் என்பது போனஸ் மார்க் மட்டுமே'' என்றார்.