Published:Updated:

சொந்தக் கட்சியில் எதிர்ப்பு...`விசுவாசம்’ தந்த சீட்! - ஜெயித்துக்காட்டிய சீனிவாசன்!#TNelections2021

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

எம்.ஜி.ஆருக்கு அரசியல் முகவரி கொடுத்த தொகுதி என்று திண்டுக்கல் பெருமையோடு அழைக்கப்படுவதுண்டு.

1972-ம் ஆண்டு, அதிமுக-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்., ஆறே மாதங்களில்ல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தனது வேட்பாளராக  மாயத்தேவரை நிறுத்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தார். அதனால், எம்.ஜி.ஆருக்கு அரசியல் முகவரி கொடுத்த தொகுதி என்று  திண்டுக்கல் பெருமையோடு அழைக்கப்படுவதுண்டு. அதே சமயம், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில், பெரும்பாலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளே அதிக அளவில் வெற்றிபெற்றுள்ளன. தி.மு.க ஒரு முறையும், அ.தி.மு.க மூன்று முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த முறை அதிமுக சார்பில் களமிறங்கிய  சீனிவாசன், அக்கட்சியின் மூத்த தலைவராகவும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நான்கு  முறை எம்.பி-யாகவும் இருந்தவர். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவருக்கு 2016-ம் ஆண்டு  திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில்போட்டியிட ஜெயலலிதா முதன்முறை வாய்ப்பளித்தார். அதில், 91,413 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதை அடுத்து வனத்துறை அமைச்சர் பதவி தேடி வந்தது. அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட பஷீர் அகமத் 70,694 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசனின் பல்வேறு மேடைப் பேச்சுகள் சர்ச்சைக்கிடமாகவும், எதிர்க்கட்சியினர் எள்ளி நகையாடக்கூடிய அளவுக்கு உளறலாகவும் அமைந்தன். அதிமுக-வினரையே கோபம்கொள்ள வைத்தன. மேலும், தொகுதியில் இவருக்கும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் இடையேயான யார் பெரியவர் என்ற பல ஆண்டுக்கால  போட்டியால், கோஷ்டிப் பூசலால் அதிமுக திணறியது. இது கட்டாயம் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், அவருக்கு இந்த முறை 'சீட்'  கொடுக்கக் கூடாது என அதிமுக-வினரே எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் எடப்பாடியிடம் காட்டிய விசுவாசமே சீனிவாசனுக்கு மீண்டும்  திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. சொந்தக் கட்சியில் நிலவிய கோஷ்டிப் பூசல், கடந்த 2016-ல் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற புகார், தொகுதி  மக்களுக்குப் பெரிதாக நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு போன்றவை சீனிவாசனுக்குப் பெரிய மைனஸாக  பார்க்கப்பட்டன. மேலும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்குமிக்க இத்தொகுதியில் சீனிவாசனை எதிர்த்து, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கிய என்.பாண்டி, கடுமையான போட்டியைக் கொடுத்ததால், தேர்தல் பிரசாரத்தில்  திண்டுக்கல் சீனிவாசன் திணறினார் என்றே சொல்ல வேண்டும்.

பிரசாரத்தின்போது சாதகமாக இல்லாத களம், வாக்கு எண்ணிக்கையின்போது சாதகமாக இருந்தது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோதே சீனிவாசன் முன்னிலையில் இருந்தார். அதன் பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோதும் சீனிவாசனே முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியின் பாண்டி பல சுற்றுகள் முடிவிலும் பின்னடைவிலேயே இருந்தார். இறுதியில் சென்ற முறை தேர்தலில் வென்று வனத்துறை அமைச்சராக இருந்த சீனிவாசன்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   கட்சியின் பாண்டியைவிட 17,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். கட்சி மேடையில் பேசும்போது உளறியது, அடிக்கடி தவறான உதாரணம் சொல்வது என விமர்சனங்களிருந்தாலும் அவற்றைக் கடந்து தொடர்ந்து 2-வது முறையாக திண்டுக்கல் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு