Published:Updated:

`சிபாரிசுக்காக என்னிடம் வருபவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிவிடுவேன்!’- திண்டுக்கல் சீனிவாசன்

வெளிநாடுகளைப் போல், தமிழகத்திலும் இரவு நேரங்களில் மிருகக் காட்சி பூங்காவைச் சுற்றிப்பார்க்க ஆய்வு செய்துவருவதாக, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

வேலூரை அடுத்த அமிர்தி வன உயிரியல் பூங்காவில், தமிழ்நாடு வனத்துறை சார்பில், வன உயிரின வாரத் துவக்க விழா இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, நிலோஃபர் கபில், கலெக்டர் சண்முக சுந்தரம் உள்பட வனத்துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வன உயிரின வாரத் துவக்க விழா
வன உயிரின வாரத் துவக்க விழா

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘தமிழக வனப்பகுதிகளை மேம்படுத்துவதற்காக வெளிநாடு சென்றுவந்தோம். அங்கிருப்பதைப் போல இரவு நேரங்களிலும், அதாவது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மிருகக் காட்சி பூங்காக்களைத் திறந்துவைப்பது குறித்துத் திட்டமிட்டு வருகிறோம். 

அதற்கான சூழல் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் காணப்படுகிறது. லஞ்ச லாவண்யம் இல்லாமல் தமிழக அரசு வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் மீது எந்த வழக்குகளும் இல்லை. ஆனாலும் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குறை சொல்கிறார்கள். 

அமிர்தி வன உயிரியல் பூங்கா
அமிர்தி வன உயிரியல் பூங்கா

வனத்துறையில் ஆட்கள் தேர்வு நடந்தால் உடனே சிபாரிசுக்காக என்னிடம் அணுகுகிறார்கள். தகுதியிருந்தால் தேர்வு எழுதி வெற்றிபெறுங்கள் என்று கூறி அனுப்பிவிடுகிறேன். காவல்துறையைப் போல் வனத்துறை அலுவலர்களும் உங்களில் ஒருவராகவும், உங்கள் வீட்டு பிள்ளையாகவும் தான் இருக்கிறார்கள்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நாங்கள் தோற்றிருந்தாலும் கூட அதிலுள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம். இப்போது, நடைபெற உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும்கட்சி நிச்சயம் வெற்றிபெறும். வனத்துறை வெளிப்படையாகச் செயல்படுகிறது” என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், “வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறையே இல்லாத வகையில் ஆன்லைன் மூலம் பணியிடங்களை நிரப்பிவருகிறோம். முதல்வர் உத்தரவின் பேரில், வனப்பகுதிகளில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது’’ என்றார்.