Published:Updated:

``அசுரன் வசனத்தை நீக்கிய விஷயத்தில் வெற்றிமாறனை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!” - இயக்குநர் அமீர்

அமீர்
அமீர் ( V. சதீஷ்குமார் )

மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களைத் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர், இதுகுறித்துப் பேசும்போது, ``பா.ஜ.க-வால் நல்லது செய்யவே முடியாது; ஏனெனில், அவர்களின் தத்துவம் அப்படி'' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ்த் திரைத்துறையில், மனதில் தோன்றியதை மூடி மறைத்துப் பேசாமல் பட்டென்று வெளிப்படுத்திவிடும் திரைக்கலைஞர்களில் இயக்குநர் அமீர் முக்கியமானவர். சமீபத்திய பரபரப்பு ஏற்படுத்திய அரசியல் கேள்விகளோடு அமீரை நேரில் சந்தித்தேன்... உணர்வும் உண்மையுமாக மதுரை மண் மணத்தோடு அமீர் நமக்கு அளித்த பதில்கள் இங்கே அப்படியே...

`` `ஊடக கருத்துரிமையை உரக்கப் பேசிவரும் இயக்குநர் வெற்றிமாறனே, அசுரன் திரைப்படத்தில் இருந்த குறிப்பிட்ட வசனத்தை ஆதிக்க சாதிகளுக்குப் பயந்து நீக்கிவிட்டார்' என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறதே?''

``60 வருடங்களுக்கு முன்பு இதே மண்ணில், பட்டியலின மக்களை மிக மோசமாக நடத்தியிருக்கும் நமது ஆதிக்க மனநிலையை இன்னமும் கழட்டி எறியாமல் இருப்பது நல்லதல்ல. `அதை இன்னமும் நடத்த வேண்டும்' என்ற மனநிலை, யார் மனதிலும் துளிக்கூட எழக்கூடாது.

வெற்றிமாறன் இயக்கிய `அசுரன்' படம் குறித்துப் பேசுகிற நான், `வெற்றிமாறனை இப்படி நிர்பந்தித்தது சரியல்ல' என்கிறேன். ஆனால், நாளையே எனது `சந்தனத் தேவன்' படம் வெளியாகும்போது இதுபோல ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால், நான் என்ன செய்வேன்... என்ற கேள்வி எழுகிறது அல்லவா...

`ஆண்ட பரம்பரை' என்ற ஆதிக்க மனநிலைக்கு எதிரான கருத்து கொண்டவன்தான் நான் என்றாலும்கூட, என்னுடைய அந்த ஒரு வசனம் மற்றவர்களைப் புண்படுத்துகிறது என்று உணரும்போது, அந்த வசனத்தைத் தவிர்த்துவிடுவதில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. அந்த ஒரு வார்த்தையால், என் படம் சொல்ல வந்த கருத்தை யாரும் புரிந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படப்போவதில்லை என்ற தெளிவு கிடைக்கும்போது, அதை நீக்கிவிடுவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த உணர்வின் அடிப்படையில்தான் வெற்றிமாறனும் செயல்பட்டிருக்க முடியும். நானும்கூட இப்படித்தான் செயல்படுவேன்.

ஆனாலும்கூட, சாதிகளற்ற சமுதாயத்தைப் படைப்பதுதான் எங்கள் நோக்கம். இந்த அடிப்படைக் கருத்திலிருந்து நாங்கள் ஒருநாளும் விலகிவிட மாட்டோம்!''

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

``ஆதிக்க மனநிலை இங்கே ஊடுருவியிருக்கிறது என்று நீங்களே சொல்கிறீர்கள். இதைத்தானே `ஊரும் சேரியுமாக நாம் பிரிந்துகிடக்கிறோம்' என்று இயக்குநர் பா.இரஞ்சித் மேடையில் கொந்தளித்தார்..?''

``ஊருக்குள் சாதிகள் இருக்கின்றன என்பதை எந்த இடத்திலும் நாமும் மறுக்கவில்லையே... ஆனால், `எங்களிடம் சாதி இல்லை' என்றுதானே சொல்கிறோம். அன்றைய நிகழ்வில் அந்த அரங்கில் கூடியிருந்தவர்களிடம் சாதிய உணர்வு இல்லை என்பதைத்தானே சொன்னோம்.

`சாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்' என்ற கோரிக்கையோடு அனிதாவை தன் சொந்த சகோதரியாக நினைத்துக் கூடியிருப்பவர்களிடம் வந்து நீங்கள் சாதியம் பேசக்கூடாது என்றுதான் சொல்கிறோம். சாதியற்ற மனநிலையில் வந்திருப்பவனையே குற்றவாளியாக்கி திருப்பியனுப்புவது நியாயமில்லையே. `சாதிய' மன அழுக்குகளை எல்லாம் கழுவியெறிந்துவிட்டு, `அனிதா என் தங்கை' என்று சொல்லவந்தவனிடம் `அனிதா ஒரு தலித் என்று சொல்லுங்கள்' என்று நீங்கள் சொன்னால், அதைச் சொல்லவோ, அந்த அரசியலைச் செய்யவோ நானும் தயாராக இல்லை!''

``சாதியம் கடந்த தமிழ்த்தேசியம் என்பது இன்றைய சூழலில், சாத்தியம்தானா?''

``சாத்தியமாக இருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி கண்ணுக்குத் தெரிந்த தீர்வு, அது ஒன்றுதானே! இதைவிட சிறந்த தீர்வு இருக்கிறதா என்ற கேள்வியை எதிர்ப்படுகிற ஒவ்வொருவரிடமும் நானும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன். சாதி - மதமற்று நாம் அனைவரும் ஒன்றிணையும் புள்ளி என்பது மொழி - இனமாகத்தானே இருக்கிறது. அப்படி ஒன்றிணைந்துவிட்டால், அதுதானே தமிழ்த் தேசியம்! எனவே, இது சாத்தியமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், தீர்வு அதுதான் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. எனவே, சாத்தியமாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.''

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

``ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``இந்த விவகாரத்தின்போது சீமானுக்கு கொடுக்கப்பட்ட வெளிச்சம் என்பது, `இனிமேலும் சீமான் இதுபோன்று அதிகம் பேசிவிடுவாரோ' என்ற அச்சத்தைதான் எனக்குள் ஏற்படுத்துகிறது. ஏனெனில், கடந்த தேர்தலின்போது கருத்துக் கணிப்புகள் நடத்தியவர்கள்கூட, `நாம் தமிழர் கட்சி'யை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தேர்தல் முடிவில் கணிசமான வாக்குகளைப் பெற்று எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது அந்தக் கட்சி. கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சிக்கு ஒரு விழுக்காடு வாக்குதான் கிடைக்கும் என்றுகூட நீங்கள் தெரிவித்திருக்கலாம்தானே... ஏன் திட்டமிட்டு தவிர்க்கிறீர்கள்? ஆக, `இதுபோல் பேசினால்தான் என்னைக் களத்திலேயே சேர்ப்பீர்கள்' என்று சீமான் அர்த்தப்படுத்திக்கொண்டு, இந்தப் பாதையையே அவர் தேர்ந்தெடுத்தாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை! வெறும் பார்வையாளனாக இந்தக் கருத்தைச் சொல்கிறேனே தவிர, சீமானின் உள்ளத்தை ஊடுருவியெல்லாம் இதைச் சொல்லவில்லை.

அதேசமயம், சீமானின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களால், இலங்கைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படை அங்கே என்னவெல்லாம் அட்டூழியம் செய்தது என்ற விவரங்களை இன்றைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கையில், நம் இன அழிப்புக்குத் துணையாக அன்றைய இந்திய அரசு எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்தது என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வருகிறது. இவையெல்லாம் விவாதிக்கக்கூடிய வரவேற்புக்குரிய விஷயங்கள்தாம். எனவே, கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்களே... அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.''

``சீமானின் பேச்சை அரசியல் தலைவர்கள் பலரும்கூட கண்டித்திருக்கிறார்கள். இதை `சீமான் மீதான அக்கறை' என்று எடுத்துக்கொள்ளலாமா?''

``சீமானின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்திருந்த தலைவர்களிலேயே அண்ணன் திருமாவளவனின் பதிலில் இருந்த பக்குவமும் நேர்மையும்தான் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. கடந்த காலங்களில் இலங்கை தமிழர் இன அழிப்புக்குத் துணைபோன காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார் என்பதையெல்லாம் தாண்டி பண்பட்ட ஒரு தலைவராக திருமாவளவன் உருவெடுத்து நிற்கிறார். சீமான் பேசியது தவறு என்று விவாதிப்பவர்கள், அவர் சொன்ன `இந்திய அமைதிப்படை விவகாரங்கள்' குறித்தும் விவாதித்திருக்க வேண்டும்தானே? அதை ஏன் விவாதிக்கவில்லை? அப்படிப் பேசியிருந்தால்தானே எது சரி, எது தப்பு என்ற தெளிவு மக்களுக்குக் கிடைத்திருக்கும்.

அடுத்து, `மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது சரிதான்; ரொம்ப லேட்டாக சுட்டுக்கொன்றுவிட்டார்கள்' என்று ஊடக நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் சொல்கிறார். ஏன் இது விவாதமாக்கப்படவில்லை? இதைச் சொல்வதாலேயே `அதற்கு இது சரி' என்று நான் சொல்லவில்லை. ஆனால், காந்தி பற்றிய சர்ச்சைப் பேச்சுகள் மட்டும் ஏன் விவாதமாக்கப்படுவதில்லை?

இதோ, `சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்' என்று இப்போது சொல்கிறார்கள். `சாவர்க்கர் யார், ஏன் அவருக்கு விருது கொடுக்க வேண்டும்...' என்றெல்லாம் ஏன் விவாதங்கள் நடத்தப்படுவதில்லை? விவாதம் நடத்தினால்தானே சாவர்க்கர் யார் என்று இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்குத் தெரியவரும். `தங்களுக்கு விசுவாசமாக இருப்பேன்' என்று வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த தேசபக்தர்தான் சாவர்க்கர். அவருக்கா பாரத ரத்னா விருது? நாளை கோட்சேவுக்குக்கூட விருதை நீங்கள் அறிவிக்கலாம்.''

சீமான்
சீமான்

``சீமான் பேச்சு உணர்ச்சியின் உச்சத்தில் பேசப்பட்டது என்றால், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தியாகியாக சித்திரிப்பவர்களை நீங்கள் எப்படி கண்டித்துப் பேசமுடியும்?''

''எந்த ஒரு விஷயத்துக்குமே `கொலை' என்பது தீர்வாகாது. மாறுபட்ட கருத்தியலை முன்வைக்கிறார்கள் அல்லது கருத்து முரண்பாடு கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை கொலை செய்துவிட்டால், அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிடும் என்பதைவிடவும் ஏமாற்றுவேலை வேறு எதுவும் கிடையாது.

ராஜீவ்காந்தி படுகொலையை யார் செய்தார் என்பதையெல்லாம் தாண்டி, அந்தத் துன்பியல் சம்பவம்தான் தனி ஈழம் அமைவதையே தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு தலைவரைக் கொல்வதால், ஒரு தத்துவத்தையே கொன்றுவிட முடியும் என்று நினைப்பது தவறு. தனக்குப் பிடித்த ஒரு தத்துவத்தின் மீது கொண்ட பற்று அல்லது வெறியால் செய்யப்படும் தவறு என்றுதான் அதைச் சொல்ல முடியும்.''

``முத்தலாக் தடை சட்டம் குறித்து பா.ஜ.க அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறீர்கள். இஸ்லாமிய நாடுகளிலேயேகூட முத்தலாக் தடைச்சட்டம் அமலில் இருக்கிறதுதானே?''

``இஸ்லாமிய நாடுகளில் இருக்கக்கூடிய சட்டத்தையும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும் பொருத்திப் பார்க்கக்கூடாது. அங்கே ஓர் ஆண், 4 பெண்களைத் திருமணம் செய்துகொள்ள முடியும். இங்கே அப்படி இருக்கிறதா. ஒரே நேரத்தில், 3 முறை சொல்லப்படக்கூடிய தலாக் முறைக்கு உலகம் முழுவதுமே தடை இருக்கிறதுதான். ஆனால், இந்தியாவில் நீங்கள் கொண்டுவருகிற இந்தத் தடைச் சட்டம் என்பது, இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக மட்டுமே இருக்கிறது. முதல் தலாக் சொன்னவுடனேயே அந்த ஆணை சிறையில் பிடித்து அடைத்துவிடும் கிரிமினல் சட்டமாக இது நடைமுறைப்படுத்தப் படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

`என் தாய் வயதுடைய ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, அவரின் கணவரது தோளில் ஏற்றி, `பாரத்மாதாகி ஜே' என்று சொல்லிச் செல்பவர்கள் மீது பாயாத சட்டம் இங்கே ஏன் வருகிறது? சிறுபான்மை இன மக்களின் மீது நீங்கள் காட்டுகிற இந்த அக்கறையை, பெரும்பான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய பட்டியிலின பெண் மக்களின் மீது ஏன் காட்டவில்லை? அப்படியென்றால் நீங்கள் அரசியல் செய்கிறீர்கள்! உண்மையிலேயே பா.ஜ.க, மக்களுக்கு நல்லதுதான் செய்கிறது என்றால், நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவர பா.ஜ.க தயாரா?

Director Ameer
Director Ameer
V. சதீஷ்குமார்
`எச்சரிக்கிறோம் ராஜபக்‌ஷேவை’ முதல் இன்றுவரை சீமான் ஈழப்பேச்சுகளின் தாக்கம் என்ன?

காஷ்மீரில் 370-ஐ அமல்படுத்தும்போது, `அமைதி நிலவுகிறது, அமைதி நிலவுகிறது' என்று திரும்பத்திரும்பச் சொன்ன நீங்களே, இப்போது `காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது' என்கிறீர்கள். அப்படியென்றால், இவ்வளவு நாள்களாக அங்கே நடந்தது என்ன? நவம்பரில் அயோத்தி தீர்ப்பு வரும் வேளையில், சாவர்க்கருக்கு விருது வழங்க வேண்டும் என்று பேச்சை ஆரம்பிப்பது ஏன்? அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் நினைவு மண்டபம் எழுப்பி அடக்கம் செய்யப்படும் அதே நேரத்தில்தான், மும்பையில் தூக்கு ஏற்றப்படுகிறது. ஆக, இதைத்தான் `மோடி மஸ்தான் வேலை' என்று நாங்கள் சொல்கிறோம்!

அப்துல் கலாம் என்ற அணு விஞ்ஞானிக்கு நினைவு மண்டபத்தை தென்கோடியில் வந்து கட்டிய நீங்கள், உலக மக்கள் எல்லோரும் வந்துபோகும் டெல்லியில் ஏன் அமைக்கவில்லை? இப்படி நுட்பமான முறையில் நீங்கள் செய்துவருகிற வர்ணாசிரம அரசியலைத்தான் நாங்கள் எதிர்த்துவருகிறோம். மோடி, அமித் ஷா என்ற தனிமனிதர்களையோ பா.ஜ.க எனும் கட்சியையோ நாங்கள் எதிர்க்கவில்லை. உங்களுக்குப் பின்னால் இருக்கும் தத்துவத்தைத்தான் எதிர்க்கிறோம். நீங்கள் நல்லது செய்யுங்கள் நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், உங்களால் நல்லது செய்யவே முடியாது. ஏனெனில் உங்கள் தத்துவம் அப்படி!''

இதுதவிர இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு இந்த வார ஆனந்த விகடன் இதழில் விரிவாக பதிலளித்துள்ளார் இயக்குநர் அமீர். அந்தப் பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

“விஜய்க்கு அக்கறை, ரஜினிக்கு விளம்பர நோக்கம்!”
அடுத்த கட்டுரைக்கு