Published:Updated:

`சீமானுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குநர் அமீர்!' - நாம் தமிழரின் இந்தி எதிர்ப்பு பேரணி சுவாரஸ்யங்கள்!

சீமானுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குநர் அமீர்!

நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து `மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி'யை நடத்தின.

`சீமானுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குநர் அமீர்!' - நாம் தமிழரின் இந்தி எதிர்ப்பு பேரணி சுவாரஸ்யங்கள்!

நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து `மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி'யை நடத்தின.

Published:Updated:
சீமானுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குநர் அமீர்!

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. தி.மு.க சார்பில் நவம்பர் 4-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியும், `இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் இனி ஒரு மொழிப்போர் நடக்கும் என்றால் அது எங்கள் தலைமையில்தான்' என சூளுரைத்திருக்கிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கையிலெடுத்து, மிகப்பெரிய பேரணியை நடத்தியிருக்கிறது.

நாதக இந்தி எதிர்ப்பு பேரணி
நாதக இந்தி எதிர்ப்பு பேரணி

நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து `மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி'யை நடத்தின. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார், 10,000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கொட்டும் மழையிலும் கலந்துகொண்டனர்.

மாலை 3 மணிக்கு முன்பாகவே பேரணி தொடங்கப்படவிருக்கும் ராஜரத்தினம் விளையாட்டுத் திடல் சாலையில், பேருந்துகள், வேன்கள், கார்களில் கூட்டம்கூட்டமாக படையெடுத்து வந்திறங்கினார்கள் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். கரகாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை என பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகளை சாலையிலேயே அரங்கேற்றிக்கொண்டிருக்க, களத்துக்கு வந்துசேர்ந்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான், பெ மணிரசன், அமீர்
சீமான், பெ மணிரசன், அமீர்

சீமானுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குநர் அமீர்!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பேரணி தொடங்கியது. சீமான் கருத்தில் முரண்பட்டு நீண்ட காலமாகவே நாதக மேடைகளைத் தவிர்த்து வந்த இயக்குநர் அமீர், திடீரென இந்தப் பேரணியில் தோன்றியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும், சீமான், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர்கள் பெ.மணியரசன், கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் காரின் முகப்பில் வடிவமைக்கப்பட்டிருந்த கம்பிப்பலகையில் பத்திரமாக நின்றபடி, சேற்றில் கால்வைக்காமல் பயணிக்க, அமீர் கட்சித் தொண்டர்களில் ஒருவரைப்போல மழைசேற்றில் நடந்துவந்தார்.

இயக்குநர்கள் அமீர்,  களஞ்சியம்
இயக்குநர்கள் அமீர், களஞ்சியம்

`வேண்டுமென்றே குழிதோண்டி வைத்திருக்கிறார்கள்!'

`பல மொழி என்றால் ஒரு நாடு! ஒரு மொழி என்றால் பலநாடு!', `இந்தியைத் திணிக்காதே! இந்திய ஒற்றுமையைச் சிதைக்காதே!', `தமிழ் எங்கள் உயிர்மூச்சு, இந்தித் திணிப்பு என்பது வீண்பேச்சு' போன்ற கோஷங்கள் எழுப்பியபடியே கூட்டம் ஆர்ப்பரித்தது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரையிலான இரண்டு கி.மீ தூர சாலையில் பல இடங்களில் பாதாளசாக்கடை மூடிகள் பழுதடைந்து கழிவுநீர் வெளியேறிக்கொண்டிருக்க, முழங்கால் அளவு சேற்றுத் தண்ணீரில் ஆபத்தான முறையில் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், உடன் வந்த சிறுவர்கள் நடந்தனர். மேலும், நடைபாதையையொட்டி மழைநீர் வடிகால் பணிகளுக்கான குழிகளும் புதிதாகத் தோண்டப்பட்டுக்கிடந்தன.

`எங்கள் பேரணிக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகத்தான், வேண்டுமென்றே ஆளுங்கட்சியினர் இப்படி குழிதோண்டி போட்டுவைத்திருக்கிறார்கள். இத்தனை நாள்கள் இல்லாமல் இன்று பேரணிநடக்கவிருப்பது தெரிந்தே இன்று காலையில்தான் மழைநீர் வடிகால்பணி என குழிதோண்டி வைத்திருக்கிறார்கள்' என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். மழைநீர், கழிவுநீர் தேங்கி நின்ற குண்டும் குழியுமான சாலைகளால் பேரணி மேடையை அடைவதற்கு நீண்ட நேரம் பிடித்தது. உடனே சுதாரித்துக்கொண்ட சீமான் உள்ளிட்ட தலைவர்கள் காரைவிட்டு இறங்கி வேகமாக மேடையை நோக்கி நடந்தனர்.

பேரணி
பேரணி

`மொழிப்போர் மறவர்கள்!' ஆவணப்படம் வெளியீடு:

மொழிப்போர் வீரர்கள், தமிழறிஞர்களின் படங்கள் அச்சடிக்கப்பட்டிருந்த பேனர்கள் மேடையின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. 500 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதியளித்திருந்த நிலையில் சுமார் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். தமிழர்களின் அடிமுறை தற்காப்புக்கலை அரங்கேற்றத்துடன் கண்டனப் பொதுக்கூட்டம் தொடங்கியது. இடையே, நா.த.க-வின் தமிழ் மீட்சிப் பாசறை உருவாக்கிய, `மொழிப்போர் மறவர்கள்!' எனும் மொழிப்போராட்ட வரலாற்று ஆவணப்படத்தின் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

கூட்டத்தின் ஒரு பகுதியினர்
கூட்டத்தின் ஒரு பகுதியினர்

அதைத் தொடர்ந்து பேசிய, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், ``மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவான 1956 நவம்பர் 1-ம் நாள்தான் நமக்கு தமிழ்நாடு நாள்! ஆனால், அதையும் சிதைத்து திராவிடக் குப்பையில் சேர்க்கவேண்டும் என்பதற்காக, சட்டமன்றத்தில் அண்ணா `தமிழ்நாடு' என பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவந்த 1967 ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். இதுதான் திராவிடச்சூது! அதேபோல, தமிழ், திருக்குறள் எனப் பேசிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் இரண்டு வில்லன்கள் அண்ணாமலையும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஏன் தமிழ்நாடு நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை? இதையெல்லாம் தமிழ்நாடு இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியை மட்டுமல்ல, தமிழர்களின் வேலை, வாழிடங்களைப் பறித்துக்கொள்ளும் இந்திக்காரர்களையும் நாம் வெளியேற்ற வேண்டும்!" என்றார்.

`மீண்டும் ஒரு மொழிப்போர் வெடிக்கும்!'

இறுதியாக மேடையேறிய சீமான், `` நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; எங்கள் சொந்த மொழிக்கு உயிரானவர்கள். நாங்கள் இந்தியை எதிர்த்துப் போராடவில்லை. இந்தித் திணிப்பை எதிர்த்துதான் போராடுகிறோம். இந்தி படி படி என திணிக்கிறார்கள், நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன்? `இந்தி, அங்கே உட்காந்திரு குந்தி!' என ஒதுக்கிவைத்துவிடுவேன்" என்று சொன்னவுடன் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

சீமான்
சீமான்

அதைத் தொடர்ந்து பேசிய சீமான், ``400 ஆண்டுகள்கூட ஆகாத இந்தி ஓர் இரவல் மொழி. ஆனால் நம் தாய்மொழி தமிழ் இறைவன் மொழி. தமிழோடு சம்ஸ்கிருதம் கலந்துதான் இன்றைக்கு மாபெரும் தமிழ்கூட்டம் சிதைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பலமொழிகளாக பிரிந்துகிடக்கிறது. இந்தி படித்தால் வேலை கிடைக்குமாம். பிறகு ஏன் இரண்டு கோடிபேர் இங்குவந்து சொட்டரும், சோன்பப்டியும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை கொடுப்பதோடு வாக்காளர் அட்டையும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 2 கோடி பேரும் வாக்குரிமை பெற்றுவிட்டால் இந்த நிலத்தின் அரசியல், ஆட்சி அதிகாரத்தை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். நாம் அடிமையாக்கப்படுவோம்!

சீமான்
சீமான்

இந்தி வந்தால் தமிழ்மொழி அழியும். மொழி அழிந்தால் பண்பாடு அழியும். பண்பாடு அழிந்தால் இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும்! இனி தமிழ்நாடு அரசு வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்பதுதான் எங்களின் அடுத்தபோராட்டம்! கட்டாய இந்தித் திணிப்பை ஒன்றிய அரசு கைவிடாவிட்டால், இன்னுமொரு மொழிப்போரை முன்னெடுக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படும்! நாங்கள் ஒப்புக்காகப் போராடவில்லை, உளமார போராடுகிறோம்!" என்றார்.

சீமான்
சீமான்

கூட்டத்தின் இறுதியில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக பெ.மணியரசன் `வீரவாளை' சீமானுக்கு வழங்க, பதிலுக்கு சீமான் அவருக்குப் புத்தகங்களைப் பரிசளித்தார். கூட்டம் முடிந்தவுடன் ஆங்காங்கே கிடந்த காலி தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களை நா.த.க-வின் சுற்றுச்சூழல் பாசறையினர் பொறுப்பாக சேகரித்தனர்.