Published:Updated:

``அங்கே விஜய்; இங்கே பாஜக” - இயக்குநர் பேரரசின் பலே திட்டம்

இயக்குநர் பேரரசு ( Jerome K )

``தமிழ்நாட்டில் பா.ஜ.க-வில் சேர்வதுதான் ரொம்ப ரிஸ்க். பா.ஜ.க ஒரு மதக்கட்சி, தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்." - இயக்குநர் பேரரசு

``அங்கே விஜய்; இங்கே பாஜக” - இயக்குநர் பேரரசின் பலே திட்டம்

``தமிழ்நாட்டில் பா.ஜ.க-வில் சேர்வதுதான் ரொம்ப ரிஸ்க். பா.ஜ.க ஒரு மதக்கட்சி, தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்." - இயக்குநர் பேரரசு

Published:Updated:
இயக்குநர் பேரரசு ( Jerome K )

`திருப்பாச்சி’, `திருப்பதி’, `பழனி’, `சிவகாசி’, `தருமபுரி’, `திருவண்ணாமலை’ எனத் தமிழ் ஊர்ப்பெயர்களில் திரைப்படங்களை இயக்கி ,சினிமாதுறையில் வலம்வந்தவர் இயக்குநர் பேரரசு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தவர், தற்போது அண்ணாமலை தலைமையில் தீவிர அரசியலில் களமிறங்கியிருக்கிறார். கட்சி நிகழ்வுகள், ட்விட்டர் பதிவுகள் என பிஸியாக இருக்கும் இயக்குநர் பேரரசைச் சந்தித்தோம்...

``தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்க ஏன் பா.ஜ.க-வைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

``நான் பா.ஜ.க-வில் சேர்ந்ததுக்குக் காரணம் பா.ஜ.க அல்ல, மற்ற கட்சிகள்தான். தமிழ்நாட்டிலுள்ள பெரிய கட்சிகள் முதல் புதிதாகக் கட்சி ஆரம்பிப்பவர்கள் வரை இந்து எதிர்ப்பு அரசியலையே செய்துவருகிறார்கள். மற்ற மதங்களையெல்லாம் விமர்சிக்காமல் இந்து மதத்தை மட்டுமே அவர்கள் குறை பேசுகிறார்கள். எப்படி என் தாய்மொழியை, தாய்நாட்டை நான் நேசிக்கிறேனோ அதேபோல என் தாய் மதமும் எனக்கு முக்கியம். என் தாய் மதத்தை எல்லாக் கட்சிகளும் வரிந்துகட்டிக்கொண்டு விமர்சிக்கும்போது, அதற்கு ஆதரவாக இருக்கும் ஒரே கட்சி பா.ஜ.க.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு
Jerome K

``தாய்மொழியை நேசிப்பதாகச் சொல்லும் நீங்கள்... ரயில்வே, பேங்க், அஞ்சல்துறை, தேசிய கல்விக்கொள்கை எனப் பல வழிகளிலும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதைக் கண்டிக்கவில்லையே?”

``’இந்தித் திணிப்பு' என்பதை விடுங்களேன்... முதலில் தமிழ்நாட்டில் தமிழ் என்ன நிலையில் இருக்கிறது... இன்றைக்கு 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 47,000 பேர் தமிழில் ஃபெயில். பள்ளிக்கூடம்போகும் பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழே எழுதப் படிக்கத் தெரியவில்லை; காரணம், தமிழ்நாட்டில் தமிழே ஒரு விருப்பப்பாடம்தான். இந்தித் திணிப்புக்கு வரும் கோபம் ஏன் இதற்கு வரவில்லை... தமிழ்நாடு அரசு ஏன் தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக்கவில்லை?”

``சினிமாவில் மார்க்கெட் குறைந்துவிட்டதால்தான் குஷ்பு, நமீதா, ராதாரவி, பொன்னம்பலம், காயத்திரி ரகுராம், நீங்கள் உள்ளிட்டோர் அரசியலில், பா.ஜ.க-வில் சேர்ந்திருப்பதாகப் பொதுவாக விமர்சிக்கப்படுகிறதே?”

``அப்படியில்லை; தமிழ்நாட்டில் பா.ஜ.க-வில் சேர்வதுதான் ரொம்ப ரிஸ்க். `பா.ஜ.க ஒரு மதக்கட்சி, தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கட்சி’ என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் எதிர்க்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், எதிர்ப்புகளையும் தாண்டி எங்களைப் போன்ற திரைப் பிரபலங்கள் பா.ஜ.க-வில் சேர்கிறோம் என்றால் எங்களிடம் உண்மை இருக்கிறது. இது ஒரு கெத்துதான்!”

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு
Jerome K

``சமீபத்தில் பா.ஜ.க யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீங்கள், `அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் தீய சக்திகள், தேசவிரோதிகள்' என்றெல்லாம் கடுமையாகப் பேசியிருக்கிறீர்களே?”

``ஆமாம். காவல்துறையினரைக் கற்களை வீசித் தாக்குகிறார்கள், ரயிலைக் கொளுத்துகிறார்கள்... இவர்களெல்லாம் ராணுவத்தில் சேர்ந்து எப்படி நாட்டைக் காப்பாற்றுவார்கள்... `அக்னிபத்' ஒரு நல்ல திட்டம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் ரிசல்ட் தெரியும்.”

``மகாராஷ்டிராவில் ஒரே சித்தாந்தம்கொண்ட, தன்னை வளர்த்த சிவசேனா கட்சியையே உடைத்து, அரசியல் சூழ்ச்சியால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது பா.ஜ.க. இது முறையா?”

``பா.ஜ.க-வின் சூழ்ச்சி என்பதெல்லாம் பொய். ஆட்சிக் கவிழ்ப்பு, எம்.எல்.ஏ-க்கள் பேரம் என்பதேல்லாம் வெறும் யூகம். சிவசேனா தலைவராக பால் தாக்கரே இருந்தவரை, ஒரே கொள்கை என்றவிதத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால், உத்தவ் தாக்கரேவால்தான் கூட்டணி முறிந்தது. சிவசேனாவிலிருந்து பிரிந்து பா.ஜ.க-வுக்குச் செல்கிறார்கள் என்றால் அப்படிப்பட்ட வேட்பாளர்களை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார்... எல்லோரும் ஆட்சி அமைப்பதற்காகத்தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள், தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எனவே, ஆட்சியமைக்க சந்தர்ப்பம் வரும்போது, எதிர்த் தரப்பினர் அதற்கு இடம் கொடுக்கும்போது அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை.”

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு
Jerome K

``அயோத்தியைப்போல, கியான்வாபி, சாகி ஈத்கா, குதுப்மினார், தாஜ்மகால் உள்ளிட்டவையும் இந்துக் கோயில்கள்தான் அதை இடித்துவிட்டு கோயில்கட்ட வேண்டும் எனத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் குரல்கொடுக்கின்றனவே... இது சரியா?”

``அயோத்தி பாபர் மசூதியாவது ராமர் பிறந்த இடம் என்ற நியாயம் இருந்தது; தாஜ்மஹாலை மத அடிப்படையில் பார்க்கக் கூடாது, அது இந்தியாவின் அடையாளம்! அதில் கைவைக்கக் கூடாது. சில மசூதிகளில் லிங்கமே இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட வேண்டும். யாரோ செய்த தவற்றுக்காக இப்போது இருப்பவர்களைத் தண்டிக்கக் கூடாது. அவர்கள் செய்த தவற்றை நாமும் செய்யக் கூடாது. எந்த மதம் என்பது முக்கியமில்லை, பக்திதான் முக்கியம்.”

``நபிகளை இழிவுபடுத்திய நுபுர் ஷர்மாவை எதிர்த்து போராடிய அஃப்ரின் பாத்திமாவின் வீட்டை உ.பி அரசு புல்டோசர் வைத்து இடித்தது. தொடந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர்களின் வீடுகளை இடிக்கும் `புல்டோசர் அரசியல்' நடக்கிறது. இது நியாயமா?”

``நீங்கள் ஏன் போராட்டம் பண்ணுகிறீர்கள்... போராட்டம் என்றால் ஒரு நியாயம் இருக்க வேண்டும். போராட்டம் அத்துமீறும்போது, காவல்துறை அடக்குமுறை செய்யும். காவல்துறை அடக்குமுறை என்று கூறுபவர்கள், போராட்டம் அத்துமீறுவதைப் பற்றி ஏன் பேசுவதில்லை... போராட்டம் அத்துமீறும்போது அரசாங்கம் தன் கடமையைச் செய்யும். ராஜஸ்தானில் நுபுர் ஷர்மா கருத்துக்கு ஆதரவாகப் பதிவிட்ட ஒருவரை, இஸ்லாமியர் இருவர் வெட்டிக் கொன்றுவிட்டனர். இதை ஏன் யாரும் பேசவில்லை?”

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு
Jerome K

``தமிழ் ஊர் பெயரில், தமிழில் படங்களுக்கு பெயர் வைத்தீர்கள். ஆனால், இப்போது பல தலைப்புகள் ஆங்கிலத்தில் வைக்கப்படுகின்றனவே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர்வைக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் வரிச்சலுகையும் கொடுக்கிறது. விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படத் தலைப்புக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. பெயர் வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கில் டிரெண்ட் ஆகிறது. அப்படி பவர் இருக்கும் படத்தின் டைட்டிலை தமிழில் வைக்கலாம். இந்தியா, உலகம் முழுக்க தமிழ்ப் பெயர் செல்லட்டுமே... பேச்சில்தான் தமிழ் இல்லாமல் போய்விட்டது, படத்தின் தலைப்பிலாவது தமிழ் இருக்கட்டுமே.”

``ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால், நீங்கள் விஜய் பக்கமா இல்லை பா.ஜ.க பக்கமா?”

``சினிமாவில் விஜய் பக்கம்; அரசியலில் பா.ஜ.க பக்கம்.”