Published:Updated:

ஒளிபரப்புத் திருத்தச் சட்டம்: விமர்சனங்களை ஏற்கணும்;வரைமுறையோடு விமர்சிக்கணும்; ஆதரவும் எதிர்ப்பும்!

சென்சார் சான்றிதழ் (மாதிரி)
சென்சார் சான்றிதழ் (மாதிரி)

கருத்துச் சுதந்திரம் முக்கியம் எனவும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேச முடியாது; அதற்கு வரையறை வேண்டும், கண்காணிக்க வேண்டும் எனவும் ஒளிபரப்புத் திருத்தச் சட்ட மசோதா குறித்துக் கூறப்படுகிறது.

ஒளிபரப்புச் சட்டத் திருத்த வரைவு மசோதா ஜூன் 18-ம் தேதி வெளியிடப்பட்டதிலிருந்தே இந்தியா முழுவதுமிருந்து பல திரைக்கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1,400-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் `ஏற்கெனவே கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில் இந்தப் புதிய சட்டத் திருத்த வரைவு அதை இன்னும் வலுவாக்கும்’ எனச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக அச்சம் தெரிவித்து, கடிதம் எழுதியிருக்கிறார்கள். நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ரோஹிணி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்பாராஜ், சுரேஷ் காமாட்சி, ராஜூ முருகன் உள்ளிட்ட திரைத்துறையின் அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நீட், சுற்றுச்சூழல், ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதா என மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துக்கும் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துவருவதாக பா.ஜ.க-வினர் தீர்மானம் நிறைவேற்றினர். இது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

கமல், சூர்யா, வெற்றிமாறன், ரஞ்சித், கார்த்தி, எஸ்.வி.சேகர்
கமல், சூர்யா, வெற்றிமாறன், ரஞ்சித், கார்த்தி, எஸ்.வி.சேகர்

``கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயதுவாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்’’ என இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய சினிமாவுக்குப் பேரிடியாக ஒரு வரைவு மசோதா! எதிர்ப்பு வலுப்பது ஏன்?

ஒளிபரப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்

ஒளிபரப்புச் சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்குத் திரைக்கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்துப் பேசுவதற்கு முன் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்துப் பார்க்கலாம். ``1952-ல் கொண்டுவரப்பட்ட ஒளிபரப்புச் சட்டம்தான் தற்போதுவரை பின்பற்றப்படுகிறது. தற்போது அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்த பின்னரும், அந்தத் திரைப்படத்தில் ஏதாவது விதிமீறல்கள் இருப்பதாகக் கருதப்பட்டால், மத்திய அரசுக்கு அதில் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை யூ, யூ/ஏ, ஏ என மூன்று சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. ஆனால், இனி யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 17+ என மூன்று வகையாகப் பிரித்து சான்றிதழ் அளிக்கப்படவிருக்கிறது. தணிக்கை வாரியம் அளிக்கும் சான்றிதழ் தற்போதுவரை 10 ஆண்டுகளுக்குத்தான் செல்லுபடியாகும். ஆனால், இனி அந்தச் சான்றிதழ் நிரந்தரமாகச் செல்லுபடியாகும்.

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021

திரைப்படங்களைத் திருடினால் இனி மூன்று மாததங்கள் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை விதிப்பதை இந்தச் சட்டம் முன்மொழிவதோடு, மூன்று லட்சம் முதல் திரைப்படத் தயாரிப்பு செலவில் ஐந்து சதவிகிதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும்’ எனவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டத் திருத்தத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான காயத்ரி ரகுராமிடம் பேசினோம். ``இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதுதான் கருத்துச் சுதந்திரமா? உண்மைகளைச் சொல்லும்போது எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யும்போதுதான் அது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒருவரின் சகோதரியையோ, மனைவியையோ, தாயைப் பற்றியோ தவறாகச் சித்திரித்து படம் எடுத்தால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அதை அனுமதிப்போமா? யாரையும் படமே எடுக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. நல்ல படங்களை எடுங்கள் என்றுதான் சொல்கிறோம். இந்தியாவை ஆளும் மத்திய அரசு சினிமாவில் கைவைக்கக் கூடாது என்று ஏதும் இருக்கிறதா என்ன? வானத்திலிருந்து வந்ததா சினிமா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதில் தவறு இல்லையே... மத்திய அரசு, இந்தியாவின் நன்மைக்குத்தான் சொல்கிறது. இதுவரை எத்தனையோ பேர் மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஸ்டாலினுக்கு எதிராகப் பேசினாலே சிறையில் தள்ளுவதுபோலவா தள்ளியிருக்கிறது மத்திய அரசு... அவர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதுதானே... இந்தச் சட்டத்தை எதிர்ப்பது சூர்யா குடும்பம் மட்டும்தான்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

சூர்யா பற்றி ஒரு படம் எடுக்கிறேன். கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக நான் என் நோக்கத்துக்கு எடுத்தால் அவர்கள் ஒப்புக்கொள்வார்களா? அதேபோலத்தான் விமர்சனம் என்ற பெயரில் இந்தியாவுக்கும் மத்திய அரசுக்கும் எதிரான செயலைச் செய்வதைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை மத்திய அரசு கட்டுப்படுத்துவதில் தவறும் இல்லை” எனத் திருத்தம் செய்ததன் அவசியம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

பறிக்கப்படுகிறதா படைப்புச் சுதந்திரம்?

அரசு மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் குறித்து இயக்குநர் ராஜு முருகனிடம் பேசினோம். ``சமுதாயம் மேம்பட வேண்டும் என்றால் அனைத்துவிதமான கருத்துகளுக்கும் இடம் கொடுத்து விவாதம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். பெரியார், அம்பேத்கர் கருத்துகளெல்லாம் அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்படக்கூடிய கருத்துகளாகத்தான் இருந்தன. அவை அதிகாரத்துக்கு பயத்தைக் கொடுக்கக்கூடிய கருத்துகள் என்பதால்தான் இன்றுவரை அவை சமூகத்தை வழிநடத்திவருகின்றன. ஆபாசமாக, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மனிதர்களைக் கேலி செய்வது, குடும்ப அமைப்புகளைக் கேவலமாகப் பேசிக்கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால், அவர்கள் வருமானத்துக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய, அரசியலுக்கு உதவக்கூடிய தத்துவத்தை, சித்தாந்தத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதுதான் இவர்களுக்குப் பிரச்னையாகிறது. அதை ஒடுக்குவதற்குத்தான் இந்தத் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள். அதைவிட்டுவிட்டு கருத்தே சொல்லக் கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாக இருக்கும்... உண்மையில், அரசை அதன் குறைகளை விமர்சனம் செய்யும் எங்களைப் போன்றவர்கள்தான் தேசத்தின் மீதும் மக்கள் மீதும் அதீத பற்றுக்கொண்டவர்களாக இருக்கிறோம். அதனால்தான் சட்டங்கள் என்ற பெயரில் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது, அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இயக்குநர் ராஜு முருகன் பேட்டி
இயக்குநர் ராஜு முருகன் பேட்டி

எதைச் செய்ய வேண்டும்; எதைச் செய்யக் கூடாது என்ற சிந்தனையை மூளைக்குள் வைத்துக்கொண்டு படைப்பை உருவாக்கும்போது எப்படி அது முழுமையான படைப்பாக இருக்கும்... சமூகத்தில் மாற்றுச் சிந்தனை என்பதே உருவாக வாய்ப்பில்லாமல் போகுமே... திறந்த மனதுடன் எல்லா விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் அரசு இயங்க வேண்டும் என்பதுதான் நாங்கள் சொல்வது” என ஒளிப்பதிவுச் சட்டத் திருத்தத்தால் படைப்பு சுதந்திரம் பாதிக்கப்படும்விதம் குறித்து விவரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு