Published:Updated:

அக்கப்போர்... திண்டாட்டம்.... முட்டுக்கட்டை... கலகம்!?

அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

எடப்பாடியின் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம், பன்னீருக்கு அருகே அமர்ந்துகொண்டார். தளபதிகள் இடம் மாறியது பலரது புருவங்களை உயர்த்தியது.

அக்கப்போர்... திண்டாட்டம்.... முட்டுக்கட்டை... கலகம்!?

எடப்பாடியின் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம், பன்னீருக்கு அருகே அமர்ந்துகொண்டார். தளபதிகள் இடம் மாறியது பலரது புருவங்களை உயர்த்தியது.

Published:Updated:
அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது அ.தி.மு.க பொதுக்குழு. ஆனால், பொதுக்குழுவுக்கு முன்னரும் பின்னரும் இருந்த பிரச்னைகள் நீறுபூத்த நெருப்பாக தகிப்பதாகக் கூறுகிறார்கள் அ.தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகள். ‘ரஜினி அலை’ ஓய்ந்த பிறகு, ஒருவழியாக ‘தமிழகத்தில் அ.தி.மு.க பெரிய கட்சி என்பதால், முதலமைச்சர் வேட்பாளரை அந்தக் கட்சியே தீர்மானிக்கும்’ என்று பா.ஜ.க-வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க-வுக்கு இது ஒரே ஆறுதல் என்றாலும், இதை முன்வைத்து தனது கடைசி நம்பிக்கையும் தகர்ந்ததாக பன்னீர் தரப்பு நினைக்கிறது. ஆனால், பா.ஜ.க-வின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. வேறுவழியின்றி, முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் தனது பிடியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதால், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் அஸ்திரம், ஐ.டி ரெய்டு என அ.தி.மு.க மீது பிடியை இறுக்குகிறது அந்தக் கட்சி. பதிலுக்கு எடப்பாடியும் போட்டுத் தாக்குகிறார். “பன்னீரின் அதீத பா.ஜ.க ஆதரவு செயல்பாடுகளை எடப்பாடி தரப்பு ‘எக்ஸ்போஸ்’ செய்ததையடுத்து, அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் பன்னீரைவிட்டு விலகி, எடப்பாடி முகாமை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்” என்கிறது கட்சி வட்டாரம். அ.தி.மு.க-வில் உருவாகியிருக்கும் இந்த அக்கப்போர், அதன் கூட்டணிக் கட்சிகளால் திண்டாட்டமாகி, டெல்லியின் பல்வேறு முட்டுக்கட்டைகளுக்குப் பிறகு தேர்தல் நேரத்தில் கலகத்தை ஏற்படுத்துமோ என்று தவித்துப்போயிருக்கிறது எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகம்.

சசிகலா
சசிகலா

முடிவுறாத அக்கப்போர்!

ஜனவரி 9-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுவுக்குச் சென்றுகொண்டிருந்தார் பன்னீர். வானகரம் செல்லும் வழியில், கோயம்பேடு மேம்பாலம் அருகே சுமார் 200 அ.தி.மு.க-வினர் குழுமியிருந்தனர். பெரும்பாலானோரின் கைகளில் பூங்கொத்து இருந்தது. அவர்களைப் பார்த்தவுடன் ஆர்வத்துடன் வண்டியை ஓரங்கட்டிய பன்னீர், பூங்கொத்தை வாங்க, கண்ணாடியை இறக்கினார். முகம் சுருக்கிய கரைவேட்டிகள், பூங்கொத்தை முதுகுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டு, ஒரு கையால் வணக்கம்வைக்கவும் பன்னீரின் முகம் வெளிறிவிட்டது. இந்த எரிச்சல், கடுகடுப்புடன் பொதுக்குழுவுக்குச் சென்றிருக்கிறார் பன்னீர்!

வழக்கமாக பன்னீரின் அருகில் அமரும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பொதுக்குழு மேடையில் எடப்பாடியின் அருகில் அமர்ந்திருந்தார். எடப்பாடியின் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம், பன்னீருக்கு அருகே அமர்ந்துகொண்டார். தளபதிகள் இடம் மாறியது பலரது புருவங்களை உயர்த்தியது. ஏற்கெனவே, அ.தி.மு.க-வின் முதல் பிரசாரக் கூட்டத்தில் மறைமுகமாக பா.ஜ.க-வை வெளுத்துவாங்கிய கே.பி.முனுசாமி, இந்தமுறை பா.ஜ.க மற்றும் சசிகலாவையும் சேர்த்தே தாக்கினார்.

அக்கப்போர்... திண்டாட்டம்.... முட்டுக்கட்டை... கலகம்!?

“தமிழகத்தில் தேசியக் கட்சிகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தி.மு.க., அ.தி.மு.க மேல் ஏறித்தான் அவர்கள் பயணம் செய்தாக வேண்டும். இல்லையென்றால், களத்தில் வெளியே நின்று வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியுமே தவிர, வேறெந்த மாற்றத்தையும் அவர்களால் கொண்டுவர முடியாது. சசிகலா வெளியே வந்தாலும் ஒன்றும் ஆகிவிடாது” என்றவர், “ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடிதான் ஆளுமைமிக்கவர்” என்று பன்னீருக்கும் சேர்த்தே வெந்நீர் ஊற்ற... பன்னீரின் முகம் சுருங்கிப்போனது!

அவரைத் தொடர்ந்து பேசிய பன்னீர், தனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமல் டெல்லி விசுவாசத்தை அப்படியே கொட்டினார். “கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்து, உலக அளவில் இந்தியாவை கர்வத்துடன் தலைநிமிரச் செய்திருக்கும் பாரதப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” என்று அவர் பேச்சை ஆரம்பித்து, தி.மு.க-வைத் தாக்கிப் பேசியதுடன் முடித்துக்கொண்டார். ஒரு பூங்கொத்துக்குக்கூட தகுதி இல்லாததுபோல நிர்வாகிகள் தன்னை ஓரங்கட்டியதும், தன் ஆதரவாளரான முனுசாமி எடப்பாடி பக்கம் ஜாகை மாறியதும் பன்னீருக்கு கண்ணீர் வராத குறையை ஏற்படுத்திவிட்டன என்றார்கள் கட்சி நிர்வாகிகள். இந்த அக்கப்போர் இப்போதைக்கு ஓயாது; வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும்போது, பன்னீர் மீதான பிடி இறுகி, பெரும் போராக வெடிக்கக்கூடும் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். தொடர்ந்து அன்றைய தினம் மாலை ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் உற்சாகம் இல்லாமல்தான் இருந்திருக்கிறார் பன்னீர்.

ஜனவரி 11-ம் தேதி ‘தமிழகத்தின் பெரிய கட்சி என்பதால், முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க-வே தீர்மானிக்கும்’ என்று பா.ஜ.க தரப்பில் அறிவிக்கப்பட்டபோதே பன்னீரின் மொத்த திட்டமும் தவிடுபொடியாகிவிட்டது. ரஜினியின் பின்வாங்கலுக்குப் பிறகு தன்னைவைத்து பா.ஜ.க காய்நகர்த்தும்; முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளலாம் என்ற நப்பாசையில்தான் பொதுக்குழுவில் பா.ஜ.க-வை விமர்சித்து கட்சி நிர்வாகிகள் பேசினாலும் வலிய வந்து முட்டுக்கொடுத்த பன்னீர், பலரது எரிச்சலையும் சம்பாதித்துக்கொண்டார். இப்போது பன்னீரின் கனவைக் கலைத்திருக்கிறது டெல்லி.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

கூட்டணித் திண்டாட்டம்!

இப்படி எடப்பாடி - பன்னீர் அக்கப்போர் ஒருபக்கம் என்றால், கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதல் இன்னொரு பக்கம். ஜனவரி 11-ம் தேதி தைலாபுரத்திலுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸின் வீட்டில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே, பிரசாரக் கூட்டத்துக்கு தங்கமணியும்

கே.பி.அன்பழகனும் நேரில் சென்று அழைப்புவிடுத்தபோது அதை நிராகரித்து, திருப்பி அனுப்பியிருந்தார் ராமதாஸ். அதனால், இந்தமுறை வேலுமணியை அனுப்பினார் எடப்பாடி. ஆனாலும், தைலாபுரம் தரப்பில் மசியவில்லை. இவர்கள் இப்படியென்றால், ‘நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும்’ என்று ஆரூடம் சொன்ன தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, ஜனவரி 11-ம் தேதி நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம்’ என்று இறங்கிவந்திருக்கிறார். ஆனாலும், தொகுதிகள் பங்கீட்டின்போது சீட் எண்ணிக்கையில் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை சாலிகிராமம்.

நெருக்கடி தருவதில் இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது பா.ஜ.க. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் நம்மிடம், “எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டாலும், அந்த அரசுமீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பா.ஜ.க மீதும் படிந்துவிடும். ஊழல்களுக்குத் துணைபோனதாக மக்கள் கருதுவார்கள். ஏற்கெனவே அமைச்சர்களின் ஊழல் தொடர்பான ஃபைல்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கேட்டு வாங்கியிருக்கிறது டெல்லி. அவை தூசு தட்டப்பட்டு, எந்த நிமிடமும் விசாரணைக்காகக் காத்திருக்கின்றன” என்றார்.

தமிழக அமைச்சர்கள்மீது ஆளுநர் அளித்த ஊழல் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கும் ஓர் அஸ்திரத்தைத் தயாராக வைத்திருக்கிறது எடப்பாடி முகாம். இது குறித்து நம்மிடம் பேசிய எடப்பாடியின் ஆதரவாளர்கள், “அ.தி.மு.க மீது கைவைத்தால், ராஜ்பவன் ரகசியங்களை அம்பலப்படுத்தவும் தயங்க மாட்டோம். இது டெல்லிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்” என்கிறார்கள். இந்த சங்கடங்களைத் தவிர்க்கத்தான் ஆளுநரை மாற்றும் ஆலோசனையில் இருக்கிறது டெல்லி.

அக்கப்போர்... திண்டாட்டம்.... முட்டுக்கட்டை... கலகம்!?

முட்டுக்கட்டையும் கலகமும்!

இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்களின் ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படும். அதற்கு முன்பாக ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள்மீது கிடப்பிலுள்ள வழக்குகளும் தோண்டியெடுக்கப்படும் என்கிறது டெல்லி. இரண்டு ஆண்டுகளாகத் தூங்கிக்கொண்டிருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்குக்குக் கடைசி நேரத்தில் உயிர்கொடுத்தது இதற்கான சாம்பிள்தான். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தபோது ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளின் வாரிசுகளின் தொடர்புகள் தெரியவந்தன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்திலும் ஆளுங்கட்சியின் தொடர்புகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். தமிழக மேலிடத்தின் ஆசியுடன் இந்த விவரங்களையெல்லாம் மறைத்த பிறகே வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அப்படியும் விடாமல் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க மாணவரணிச் செயலாளர் அருளானந்தத்தைத் தூக்கியிருக்கிறது சி.பி.ஐ. சங்கிலித் தொடர்போல இந்தப் பிடி மேலும் இறுகலாம்.

அக்கப்போர்... திண்டாட்டம்.... முட்டுக்கட்டை... கலகம்!?

அதேபோல குட்கா முறையீட்டு வழக்கு சி.பி.ஐ வசம் உள்ளது. இந்த வழக்கை வேகப்படுத்தும் வேலைகளும் தொடங்கிவிட்டன. இதில் விஜயபாஸ்கர் மற்றும் அவரின் உதவியாளர்கள் நெருக்கப்படலாம். கடந்த வாரமே விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் கைதுசெய்யப்படுவார் என்று தகவல் பரவியது. இதைக் கசியவிட்டதே சி.பி.ஐ தரப்புதான். இப்படி இரண்டு அமைச்சர்களுக்கு நெருக்கடி கொடுத்தாலே அது ஆளுங்கட்சியை அசைத்துப் பார்த்துவிடும். இவர்களைத் தவிர்த்து, ஆளுங்கட்சியை பா.ஜ.க தரப்பு கையிலெடுக்க, இருக்கவே இருக்கிறார் பன்னீர். அவரைவைத்து அடுத்து ஒரு தர்மயுத்தத்தைத் தொடங்கினால், கட்சிக்குள் கலகம் ஏற்படுவது உறுதி” என்றார் அந்த பா.ஜ.க நிர்வாகி!

இவையெல்லாம் ஒருபக்கம் என்றால், சசிகலா வெளியே வந்தால், காட்சிகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது. இது குறித்தும் நம்மிடம் பேசிய அ.தி.மு.க வட்டாரம், “இதுநாள் வரை ‘சசிகலா யார், கட்சிக்கும் அவருக்கு என்ன தொடர்பு?’ என்று கேட்டவர்களெல்லாம் இப்போது மெளனமாகிவிட்டனர். சசிகலாவுடன் சமரசம் பேச எடப்பாடி தரப்பு ஒருபக்கமும், பன்னீர் தரப்பு ஒருபக்கமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. பா.ஜ.க தரப்பும் சசிகலாவை இப்போதைக்கு அமைதி காக்கச் சொல்லியிருக்கிறது. அதேசமயம், சசிகலாவின் ஆதரவு எடப்பாடிக்குத்தான் என்று தகவல் வந்திருக்கிறது” என்றார்கள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை கம்பீரமாகத் தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. “மோடியா... இந்த லேடியா?” என்று தேர்தல் பிரசாரத்தில் சவால்விட்டவர் ஜெயலலிதா. அவை அத்தனையும் இன்று கேள்விக்குறியாகிவிட்டன என்பதுதான்

அ.தி.மு.க தொண்டனின் வேதனையாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism