Published:Updated:

வாரிசு அரசியல்... சமூக அரசியல்... புது அடிமை முறை! - அ.தி.மு.க-வில் புதுப் புகைச்சல்

ரவீந்திரநாத் குமார், ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ரவீந்திரநாத் குமார், ஓ.பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆர் இருந்தபோதுகூட நிர்வாகிகள் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுவது, தவழ்ந்து செல்வது, கார் டயரைக் கும்பிட்டது எனத் தனிமனித வழிபாடுகள் இருந்ததில்லை

வாரிசு அரசியல்... சமூக அரசியல்... புது அடிமை முறை! - அ.தி.மு.க-வில் புதுப் புகைச்சல்

எம்.ஜி.ஆர் இருந்தபோதுகூட நிர்வாகிகள் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுவது, தவழ்ந்து செல்வது, கார் டயரைக் கும்பிட்டது எனத் தனிமனித வழிபாடுகள் இருந்ததில்லை

Published:Updated:
ரவீந்திரநாத் குமார், ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ரவீந்திரநாத் குமார், ஓ.பன்னீர்செல்வம்

“அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் கிடையாது. உழைக்கும் அனைவருக்கும் உயர் பதவிகள் கிடைக்கும்.” - சமீபத்தில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆனால், நடந்து முடிந்த அ.தி.மு.க உட்கட்சித் தேர்தலில் நிலைமை தலைகீழாக இருக்கிறது! “பல்வேறு மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கே மீண்டும் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அதிகாரத்தை அனுபவித்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கொந்தளிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

வாரிசு அரசியல்!

அ.தி.மு.க-வில் கடந்த ஏப்ரல் 21, 25 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாக உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இப்படியொரு சர்ச்சை எழுந்துள்ளது. முதலில் கட்சிக்குள் எழுந்துள்ள வாரிசு அரசியல் சர்ச்சையைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் தென் மாவட்டச் செயலாளர் ஒருவர்... “அம்மா காலத்தில் வாரிசுகள் இருந்த இடமே தெரியாமல் இருந்தது. ஆனால், அம்மா மறைவுக்குப் பிறகு கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் தங்கள் வாரிசுகளைக் கட்சிக்குள் கொண்டுவந்தனர். இதைத் தொடங்கிவைத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். அவர் தன் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் பதவியைக் கொடுத்ததோடு, தேனி மாவட்ட எம்.பி-யாகவும் வெற்றிபெறவைத்தார். பன்னீரின் தம்பி ராஜா இப்போது கட்சியில் இல்லையென்றாலும், அவர் கட்சியில் இருந்தவரை தேனி நகரசபைத் தலைவர், தேனி மாவட்ட ஆவின் சேர்மன் ஆகிய பதவிகளை அனுபவித்தார். இவர்கள் தவிர தன் சம்பந்தி, மருமகன் ஆகியோருக்கு அரசு வழக்கறிஞர் பொறுப்புக் கொடுத்து கட்சிக்குள் வாரிசு அரசியலுக்கு வித்திட்டவர் பன்னீர்தான்.

ரவீந்திரநாத் - பன்னீர்செல்வம்
ரவீந்திரநாத் - பன்னீர்செல்வம்
ராஜன் செல்லப்பா - ராஜ் சத்யன்
ராஜன் செல்லப்பா - ராஜ் சத்யன்

இவரைப்போலவே வாரிசு அரசியலை ஆரம்பத்திலிருந்தே வளர்த்தவர் ஜெயக்குமார். இவர் தன் மகன் ஜெயவர்தனுக்கு அம்மா பேரவைச் செயலாளர் பதவியைக் கொடுத்ததோடு எம்.பி-யாகவும் ஆக்கினார். இவர் தன்னையும் தன் வாரிசையும் வளர்த்ததுபோல கட்சியினர் யாரையும் அரவணைக்கவில்லை. அதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு ஜெயக்குமார் கைதானபோது கட்சி சார்பில் யாரும் பெரிதாகப் போராடுவதற்கு வரவில்லை. மதுரையில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் மதுரை மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருக்கிறார். அதோடு ராஜ்சத்யன் தனது கட்சி செல்வாக்கை வைத்து தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி, கூடைப்பந்து கமிட்டி உள்ளிட்ட சில விளையாட்டு சார்ந்த கமிட்டிகளிலும் பதவிகளை வாங்கியிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேல் மகளிர் அணி இணைச் செயலாளராகவும், அவரின் கணவர் தையூர் குமரவேல் திருப்போரூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சண்முகநாதனின் மகன் ராஜா மேற்குப் பகுதிச் செயலாளராகவும், மகள் பெருங்குளம் பேரூராட்சித் தலைவராகவும் இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரத்வி மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமியின் மனைவி கிருத்திகாவை மாவட்ட மகளிரணிச் செயலாளராக தற்போது நியமித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர திருச்சியில் வெல்லமண்டி நடராஜன், திருவள்ளூரில் சிறுணியம் பலராமன், திருவொற்றியூரில் குப்பன், சோழிங்கநல்லூரில் கந்தன், சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தில் ஆதிராஜாராம், வளர்மதி, மனோஜ் பாண்டியன் என ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்குக் கட்சியில் முக்கியப் பதவியை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் முக்கிய ஆட்களின் வாரிசுகள் வகிக்கும் பதவிகள்தான். இன்னும் கீழ்மட்டத்தில் தோண்டினால் மாமன், மச்சான், சித்தப்பா, சித்தி என ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப உறவுகளுக்குள் கட்சியின் மொத்தக் கட்டமைப்பும் சிக்கியிருப்பது தெரியும்” என்றார் விரிவாக!

ஜெயக்குமார் - ஜெயவர்தன்
ஜெயக்குமார் - ஜெயவர்தன்
சண்முகநாதன் - ராஜா
சண்முகநாதன் - ராஜா

சமூக அரசியல்!

வாரிசு அரசியலுக்கு இணையாகக் கட்சியில் சமூக அரசியலும் தலைதூக்கியிருக்கிறது என்பது கட்சியில் எழுந்திருக்கும் மற்றொரு விமர்சனம். இது குறித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம்... “எம்.ஜி.ஆர் காலத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைப்பாளர்கள் ஆகிய முக்கியப் பதவிகளில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. மதுரையில் நவநீத கிருஷ்ணன், அழகிரி பாலன், ராமநாதபுரத்தில் தென்னவன், செங்கல்பட்டில் ஆர்.எஸ்.முனிரத்தினம் எனப் பல்வேறு மாவட்டங்களில் உதாரணங்களைச் சொல்லலாம். ஜெயலலிதா காலத்தில் இந்த முறை படிப்படியாக மாற்றப்பட்டது. சசிகலாவின் குடும்பத்தினர் கட்சியில் தலையெடுத்ததும்தான் நிலைமை முற்றிலுமாக மாறியது. தேவர், கவுண்டர், வன்னியர், நாடார் ஆகிய சமூகத்தினருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சிறுபான்மைச் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டார்கள். அதே நிலைமைதான் இப்போதும் தொடர்கிறது. ஏதோ கண்துடைப்புக்காக ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, தமிழ்மகன் உசேன் என சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பதவிகளெல்லாம் முக்கியப் பொறுப்புகள் என்று சொல்ல முடியாது” என்றார் ஆதங்கத்துடன்!

சண்முகநாதன் - புவனேஸ்வரி
சண்முகநாதன் - புவனேஸ்வரி
மரகதம் குமரவேல் - தையூர் குமரவேல்
மரகதம் குமரவேல் - தையூர் குமரவேல்
கிருத்திகா - முனியசாமி
கிருத்திகா - முனியசாமி

புதிய அடிமை முறை!

கட்சியில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்... “எம்.ஜி.ஆர் இருந்தபோதுகூட நிர்வாகிகள் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுவது, தவழ்ந்து செல்வது, கார் டயரைக் கும்பிட்டது எனத் தனிமனித வழிபாடுகள் இருந்ததில்லை. ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகுதான் தனிமனித வழிபாட்டு முறைகள் அரங்கேறின. இப்போது நிலைமை தேவலாம்தான்... ஆனால், கட்சியில் குடும்ப வாரிசுகளை வளர்த்துவிட்ட தலைவர்கள் பலரும், தங்களுக்குக் கொடுக்கும் அதே மரியாதையை தங்கள் உறவுகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். 60 வயதான கட்சி நிர்வாகி ஒருவர், 30 வயதான நபரிடம் கூனிக்குறுகி நிற்க முடியுமா?” என்று குமுறுகிறார்கள்!

தொண்டர்கள், நிர்வாகிகளின் நியாயமான குரலுக்கு செவிசாய்க்கவேண்டியது தலைவர்களின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism