Published:Updated:

அமித் ஷாவின் இந்தி வியூகம் அபாயகரமானது, எச்சரிக்கை!

அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா

- ஆழி செந்தில்நாதன்

அமித் ஷாவின் இந்தி வியூகம் அபாயகரமானது, எச்சரிக்கை!

- ஆழி செந்தில்நாதன்

Published:Updated:
அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்; இந்தியர்கள் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இதற்குத் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, ஹெச்.டி.குமாரசாமி, தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். தெற்கு மீண்டும் ஒன்று திரண்டுள்ளது. இந்த எதிர்ப்பு இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்ரஹ்மானும் கலந்துகொள்ள, சமூக ஊடகங்களில் `தமிழணங்கு’ போர்த்தாண்டவம் ஆடினாள்!

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

இப்போது ஏனிந்தப் பேச்சு?

அமித் ஷா எதற்காக இப்படிப் பேசினார் என்பதுதான் முதல் கேள்வி. இது வழக்கமான அவர்களின் பேச்சுதானா, எரிபொருள் விலை உயர்வு போன்ற சிக்கல்களிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் உத்தியா என்றெல்லாம் நாம் நினைக்கிறோம். ஆனால், நாம் அப்பாவிகளாக இருப்பதில் பலனில்லை. அமித் ஷாவின் பேச்சுக்குப் பின்னால் இருக்கும் சில நுட்பமான வியூகங்களையும், அவர் இதைத் தெரிவிக்கும் நேரத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 2014-ல் மோடி அரசு உருவான முதல் நாளிலிருந்தே இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன. `1950, 60-களில் காங்கிரஸால் செய்ய முடியாத காரியத்தை நாங்கள் செய்துவிடுவோம்’ என்று பா.ஜ.க கருதுகிறது. `இந்தியாவில் இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும்’ என்கிற பா.ஜ.க-வுக்கு ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே அரசாங்கம் என்பதுதான் இலக்கு. அந்த ஒரே மதம் - இந்து மதம், ஒரே மொழி - இந்தி மொழி. எனவே, இந்தி பேசாத மாநில மக்களின் எந்த உணர்வுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது என்ற பேச்சுக்கே அவர்களிடம் இடமில்லை.

சட்டம் இதை மட்டுமா சொல்கிறது?

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்கும்போதெல்லாம், இந்திய அரசமைப்பின் பிரிவு 351-ஐ காட்டி, `அரசமைப்புச் சட்டத்தின்படிதானே இதையெல்லாம் செய்கிறோம்’ என்கிறார்கள். இந்தப் பிரிவு, இந்தி மொழி வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. மொழி உரிமையாளர்கள், இந்தப் பிரிவையும், அரசியலமைப்பின் 17-வது பாகத்தையுமே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள். ஒருவேளை அந்தப் பிரிவை மாற்றும்வரை அதைப் பின்பற்ற வேண்டுமே என்று சொல்பவர்களுக்கு, நமது பதில் கேள்வி இதுதான்... ‘இந்தியின் வளர்ச்சிக்காகச் செய்கிற அனைத்துச் செயல்பாடுகளையும், அனைத்து மொழிகளுக்கும் செய்ய அந்தப் பிரிவு தடைசெய்கிறதா... இந்தி மொழியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் எதிராக நாம் ஏதாவது சொல்கிறோமா?’

இதற்குச் சட்டத்தைக் குறிப்பிடுபவர்கள், இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். இந்திய அரசமைப்பு அனுமதித்தும்கூட, உயர் நீதிமன்றங்களில் மாநில ஆட்சி மொழிகளை ஏற்காதது ஏன்? அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள் என்று அங்கீகரித்த பிறகும், மாநில மொழிகளை அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் பயன்படுத்த என்ன தடை? இந்தியாவின் மொழிக் கொள்கையே முதலில் தவறு என்பது ஒரு புறமிருக்க, இதுவரை கிடைத்துவந்த துளி மொழியுரிமைகூட இப்போது மறுக்கப்படுகிறது என்பதுதான் இன்றைய நிஜம்.

அமித் ஷாவின் இந்தி வியூகம் அபாயகரமானது, எச்சரிக்கை!

முதலில் மதம்... அடுத்து மொழி!

இந்து ராஷ்டிரக் கனவை அவர்கள் நிஜமாக்குவதற்கு மிக முக்கியமான அடிப்படை, இந்தி மாநிலங்களில் வலுவாகக் காலூன்றுவதுதான். கணிசமாக முஸ்லிம்கள் வாழும் இந்தி மாநிலங்களில், இதற்காக முதலில் அவர்கள் மதம் என்கிற அஸ்திரத்தைக் கையிலெடுத்தார்கள். இந்துக்கள் – முஸ்லிம்கள் பிளவை உருவாக்கி, பலனடைந்தார்கள். அந்த ஆதிக்கத்தை மேலும் வலுவாக்குவதற்கு இப்போது அது, அடுத்த பிளவை முன்வைக்கிறது. இந்தி மாநிலங்கள் Vs இந்தி பேசாத மாநிலங்கள் என்பதுதான் அந்த அடுத்த பிளவு. ஏற்கெனவே இந்தப் பிளவு பொருளாதாரத்தில் நிலவுகிறது. சமூக முன்னேற்றத்தில் தெற்கும் மேற்கும் ஒரு புறமிருக்க, வடக்கு எதிர்த்திசையில் இருக்கிறது. வட மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில்லாத நிலையில் இந்த முரண்பாடு அதிகரிக்கிறது. அதைத் தனக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது பா.ஜ.க.

`பா.ஜ.க இந்தி வெறிபிடித்த கட்சி’ என்று நாம் விமர்சிக்கிறோம். ஆனால், அந்தக் கட்சி அதைப் பற்றிக் கவலைப்படாது. மாறாக, அதை ஒரு பரிசுபோல ஏற்றுக்கொள்ளும். இந்தி மாநிலங்களில் அந்த விமர்சனத்தைப் பாராட்டுரையாக அது பரப்பும். ‘தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் இந்தி பேசுகிறவர்களுக்கு மட்டுமே வேலை தருகிறார்கள்’ என்று நாம் கதறினால், அந்தக் குற்றச்சாட்டை இந்தி வட்டாரத்தில் நற்சான்றிதழாகப் பரப்பும். ‘பாருங்கள், தென்னிந்தியாவில் உங்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். நாங்கள்தான் உங்களுக்கான கட்சி’ என்று பிரசாரம் செய்யும். வளமான தென்னிந்தியாவின் அதிகாரங்களைப் பறிப்பதன் நோக்கம், இந்தி வட்டாரத்துக்கு அதைத் தாரைவார்த்துக் கொடுப்பதே ஆகும். பிசினஸ் குஜராத்திகளுக்கு... வேலைவாய்ப்பு இந்திக்காரர்களுக்கு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைத் தரும் வியூகம். அமித் ஷாக்களின் சோஷியல் இன்ஜினீயரிங் வியூகங்களில் இதுவும் ஒன்று!

இந்தி அரசியல் 1947-க்கு முன்பிருந்தே இருப்பதுதான் என்றாலும், பா.ஜ.க-வின் அரசியல் வித்தியாசமானது. அதாவது ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் சித்தாந்தத்தை ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதுண்டு. இதில் `இந்து’ என்பது எல்லா இந்துக்களையும் அல்ல... இந்தியா முழுக்க உள்ள உயர்சாதி இந்துக்களை மட்டுமே குறிக்கும். `இந்தி’ என்பது சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தி மொழியைக் குறிக்கும். `இந்துஸ்தான்’ என்பதும் ஒட்டுமொத்த இந்தியாவையும் அல்ல... இன்றைய உத்தரப்பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களைத்தான் குறிக்கும். பா.ஜ.க-வின் அரசியலும் `இந்து - இந்தி - இந்துஸ்தான்’ என்கிற அச்சில்தான் சுழல்கிறது. வட இந்தியாவில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் ஆதிக்க சாதியினரின் நலனே இந்த அச்சின் மையமாகும். அதிகாரமும் ஆட்சியும் அவர்களிடமே இருக்க வேண்டும், பொருளாதாரம் குஜராத், ராஜஸ்தான் பனியாக்களிடம் இருக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.

அமித் ஷாவின் இந்தி வியூகம் அபாயகரமானது, எச்சரிக்கை!

அந்தத் திட்டத்தின் அடித்தளம் உத்தரப்பிரதேசத்தில்தான் கட்டப்படுகிறது. அதுதான் இந்துஸ்தான். `இந்துஸ்தான்’ என்றால் இந்தியா முழுமையும்தானே என்று நாம் நினைப்போம். அப்படியும் சொல்லப்படுகிறது என்றாலும், பிராப்பர் இந்துஸ்தான் என்பது உத்தரப்பிரதேச கங்கைச் சமவெளிதான் என்பதை மறந்துவிடக் கூடாது. அல்லது குறைந்தபட்சம் இந்தி பேசும் மாநிலங்களே பிராப்பர் இந்துஸ்தான் என்று இப்போது கருதப்படுகிறது. இந்த இந்தி பேசும் மாநிலங்களை வென்றெடுப்பதுதான் பா.ஜ.க-வின் 40 ஆண்டுக்கால அரசியலாக இருந்துவந்தது. அதை பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரங்கள், சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான அரசியல் என்றெல்லாம் அவர்கள் சாதித்து, இன்று உத்தரப்பிரதேசத்தில் வலுவாகக் காலூன்றியிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தை ஆள்பவர்கள் இந்தியாவை ஆள்வார்கள். `இந்திதான் ஆட்சி மொழி’ என்றும் `ஆங்கிலம் வேண்டாம்’ என்றும் அவர்கள் பேசும்போது அது இந்துஸ்தானிலுள்ள சாதாரண மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும். இந்துஸ்தான் என்பது `இந்திஸ்தான்தான்’ என்கிற எண்ணம் வலுப்பெறும்போது, பா.ஜ.க அசைக்க முடியாத ஒரு கட்சியாக அங்கே இருக்கும். 2026-ல் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் வெடிக்கும்போது இதெல்லாம் அனைவருக்கும் புரியத் தொடங்கும்.

திட்டமிட்ட இந்தி அரசியல்!

ஏதோ தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்தி கற்றுக்கொண்டால், ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை உறுதிசெய்வதற்காக அல்ல, மாறாக இந்திக்காரர்களுக்கு இந்தியா முழுக்க வேலைவாய்ப்புகளை வாங்கித்தரும் வல்லமை பா.ஜ.க-வுக்கே உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே திட்டமிட்டு இந்தி அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு பக்கம் வட இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள். மறு பக்கம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி ஊழியர்கள். மற்றொரு பக்கம், அனைத்து பனியா நிறுவனங்களிலும் இந்தியை மட்டுமே பேசும் குஜராத்திகள் என்று பா.ஜ.க-வின் இந்தி ஆதிக்கம் விஸ்வரூபமெடுக்கிறது.

வட இந்திய ஏழைகளை வஞ்சிக்கும் மற்றுமோர் உத்திதான் ஆங்கிலத்துக்கு எதிராகப் பேசுவது. வட இந்தியாவில் எந்த உயர்சாதி இந்துவும் இப்போது இந்தியில் படிப்பதில்லை. ஆங்கிலத்தை இந்தியாவிலிருந்து அகற்ற முடியாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், வட இந்திய ஏழை மக்களை ஏய்க்க ஆங்கில எதிர்ப்பு அரசியல் தேவை என்பதையும் பா.ஜ.க அறியும்.

மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தியதால் கிடைத்த அதிகார ருசியை அவர்கள் அனுபவித்துவருகிறார்கள். மொழியின் அடிப்படையில் பிளவுபடுத்தினால் அந்த ருசியை நீண்டகாலத்துக்கு அனுபவிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். பாவம், பாரத மாதா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism