Published:Updated:

ஒன் பை டூ: “முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்” என அண்ணாமலை சொன்ன கருத்து சரியா?

வினோஜ் பி. செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன்
பிரீமியம் ஸ்டோரி
வினோஜ் பி. செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன்

பிரதமர் இருக்கும் மேடையில் என்ன கேட்க வேண்டுமோ அதைத்தான் முதல்வர் கேட்டிருக்கிறார்

ஒன் பை டூ: “முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்” என அண்ணாமலை சொன்ன கருத்து சரியா?

பிரதமர் இருக்கும் மேடையில் என்ன கேட்க வேண்டுமோ அதைத்தான் முதல்வர் கேட்டிருக்கிறார்

Published:Updated:
வினோஜ் பி. செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன்
பிரீமியம் ஸ்டோரி
வினோஜ் பி. செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன்

வினோஜ் பி. செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க

“மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். அரசியல் பேச பல மேடைகள் உள்ளன. ஆனால், பிரதமர் கலந்துகொண்ட ஓர் அரசு நிகழ்ச்சி மேடையை, ஸ்டாலின் அரசியல் மேடைபோலப் பயன்படுத்தியிருக்கிறார். பிரதமர் தமிழகத்துக்காக ரூ.31,000 கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுக்க வரும்போது, அவரை வரவேற்பது மிகவும் முக்கியம். அந்த மேடையில், ‘தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசோடு சேர்ந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் மாநிலத்தில் அதிகமான திட்டங்களைச் செயல்படுத்துங்கள், எங்களுக்கு அதிகமான நிதியைத் தாருங்கள்’ என்று முதல்வர் கேட்பது சரியாக இருக்கும். ஆனால், அந்த மேடையில் நீட் குறித்துப் பேசுவதற்கான தேவை என்ன... கச்சத்தீவு மீட்பது குறித்து அங்கே பேச வேண்டிய அவசியம் என்ன... ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்துப் பேசவேண்டிய கூட்டத்துக்கு அமைச்சர் போகாமல், வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். ஆனால், முதல்வர் இந்த நிகழ்ச்சி மேடையில் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும் என்று பேசுகிறார். தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் ஜி-ஸ்கொயர் என்ற ஒற்றை நிறுவனம் மட்டும்தான் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறது. இவர்களால் ஓர் அந்நிய முதலீட்டைக்கூட தமிழகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. தமிழக மக்களைத் திசைதிருப்புவதற்காக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள். கைதட்டு வாங்க வேண்டும் என்பதற்காக எதையாவது பேசுவதை விட்டுவிட்டு, மக்கள்நலன் சார்ந்த செயல்களில் முதல்வரும், தி.மு.க-வும் கவனம் செலுத்த வேண்டும்!’’

ஒன் பை டூ: “முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்” என அண்ணாமலை சொன்ன கருத்து சரியா?
ஒன் பை டூ: “முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்” என அண்ணாமலை சொன்ன கருத்து சரியா?

சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., தி.மு.க

``அரைவேக்காட்டுத்தனமாகச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. அந்த மேடையில் ஏதாவது குறை சொல்லியோ அல்லது விமர்சனம் செய்தோ பேசியிருந்தால்கூட பரவாயில்லை. பிரதமர் இருக்கும் மேடையில் என்ன கேட்க வேண்டுமோ அதைத்தான் முதல்வர் கேட்டிருக்கிறார். மாநிலத்தின் தேவைகளையும், மாநிலத்தின் கோரிக்கைகளையும் கேட்பதற்காகத்தான் மக்கள் அவரை முதல்வராக வாக்களித்துத் தேர்வுசெய்துள்ளார்கள். நீட் விலக்கு, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்தெல்லாம் முதல்வர் ஏற்கெனவே பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்தானே... எந்த ஒளிவுமறைவும் இல்லாமல், பொதுமக்கள் மத்தியில் அதை மீண்டும் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது... பிரதமரை வரவேற்பதிலிருந்து நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்துமே அரசு முறைப்படிதான் நடந்தன. அரங்கத்தில் பா.ஜ.க-வினரை அமரவைப்பதிலிருந்து, வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் என்று அனைத்து அனுமதிகளும் பா.ஜ.க-வினருக்கு வழங்கப்பட்டிருந்தன. இருந்தபோதிலும், முதல்வரின் பெயரைச் சொன்னதுமே அரங்கத்தில் பெரும் ஆர்ப்பரிப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகளைக் கடந்து, மக்கள் அனைவருமே முதல்வரை அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க-வினர் வெற்று அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். முதல்வர் எதைக் கேட்க வேண்டும், எது குறித்துப் பேச வேண்டும் என்று சொல்லும் தகுதி இவர்கள் யாருக்கும் கிடையாது. குறிப்பாக அண்ணாமலைக்குக் கிடையாது. எந்த அரசியல் அனுபவமும், தகுதியும் இல்லாத அண்ணாமலை சொல்வதையெல்லாம் கருத்தில்கொள்ள முடியாது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism