Published:Updated:

ஒன் பை டூ

வினோஜ் பி. செல்வம், மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
வினோஜ் பி. செல்வம், மனுஷ்ய புத்திரன்

‘சமூகநீதி என்று தி.மு.க-வும் காங்கிரஸும் போடும் கோஷம், நிஜமான வேஷம்!’ என்ற அண்ணாமலையின் கருத்து?

ஒன் பை டூ

‘சமூகநீதி என்று தி.மு.க-வும் காங்கிரஸும் போடும் கோஷம், நிஜமான வேஷம்!’ என்ற அண்ணாமலையின் கருத்து?

Published:Updated:
வினோஜ் பி. செல்வம், மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
வினோஜ் பி. செல்வம், மனுஷ்ய புத்திரன்

வினோஜ் பி. செல்வம், பா.ஜ.க மாநில செயலாளர்

“சரியானது. பா.ஜ.க சிறுபான்மையினருக்கு, பட்டியலினத்தவருக்கு, பழங்குடியினருக்கு எதிரான கட்சி என்கிற தொனியில் கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டுவருகின்றன. ஆனால், அப்துல் கலாம் என்கிற சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது அன்றைய வாஜ்பாய் பா.ஜ.க அரசு. அவரே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சொன்னபோது, அதை எதிர்த்தது காங்கிரஸ் கூட்டணியிலிருந்த தி.மு.க. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்கியது பா.ஜ.க. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவராக ஆக்கியது பா.ஜ.க. சமுதாயப் புரட்சி பற்றிப் பேசுகிற தி.மு.க., பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைவராக்குமா... இந்தியாவில் இருக்கின்ற கட்சிகளிலேயே அதிகப்படியான பட்டியல் சமூக எம்.பி-க்கள், அமைச்சர்கள் இருக்கும் கட்சியாக பா.ஜ.க இருந்துவருகிறது. வாக்கு கொடுப்பதில் மட்டுமல்ல, செயலிலும் அவர்களுக்கான அதிகாரம் அளித்திருக்கிறது. அனைத்துச் சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும், அனைவருக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்கிற வகையில், இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டிருக்கிறார். சமூகநீதி பேசும் தி.மு.க-வினர் அவருக்கு வாக்களிக்காமல், முன்னால் பா.ஜ.க பிரமுகருக்குத்தான் வாக்களிக்கவிருக்கின்றனர். அனைத்துச் சமுதாயத்தினரும் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் திரௌபதி முர்மு குறித்து நக்சல் மனப்பான்மையோடு விமர்சனம் வைப்பது வேடிக்கையானது.’’

வினோஜ் பி. செல்வம்
வினோஜ் பி. செல்வம்
மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர்

“மிகத் தவறானது. சமூகநீதி என்ற சொல்லுக்கு அர்த்தம்கூடத் தெரியாதவர் அண்ணாமலை. அவரது ஒவ்வொரு பேட்டியிலும் தன்னுடைய பாமரத்தனத்தை கூச்சமே இல்லாமல் வெளிப்படுத்திவருகிறார். திராவிட இயக்கத்தின் சமூகநீதி வரலாறு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை வி.பி சிங் அரசு சட்டமாக்கியதற்குக் காரணமாக இருந்தவர் கலைஞர். இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள். அடையாள அரசியலுக்காகச் சிலரைப் பதவியில் அமர்த்தி, ஒரு மோசடியை பா.ஜ.க அரங்கேற்றிவருகிறது. பா.ஜ.க ஆட்சியில் இஸ்லாமியரான அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோதுதான் குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தன. தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருக்கும்போதுதான், மாட்டுக்கறி பிரச்னையில் சங்பரிவாரால் நாடு முழுக்க தலித்துகள் தாக்கப்பட்டனர். ஆதிவாசிகளை வனங்களிலிருந்து வெளியேற்றுவதற்கான வனத்திருத்தச் சட்டங்களைக் கொண்டுவந்துவிட்டு, இப்போது பழங்குடிப் பெண்ணைக் குடியரசுத் தலைவர் ஆக்குவேன் என்று சொல்லித் திரிகிறார்கள். வாக்கு வங்கிக்காக இன்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அடையாளங்களை பா.ஜ.க ஓர் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்துகிறது. ஆனால், சமூகநீதி எங்கள் உயிர் மூச்சு. எங்களை வழிநடத்தும் தத்துவம். தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமாக சமூகநீதியையும் இட ஒதுக்கீட்டையும் பாதுகாக்க, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் போராடிக்கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்கு எந்த விஷயத்திலும் சொல்புத்தியும் இல்லை; சுயபுத்தியும் இல்லை!”