அரசியல்
அலசல்
Published:Updated:

ஒன் பை டூ

தமிழன் பிரசன்னா - ஏ.பி.முருகானந்தம்
News
தமிழன் பிரசன்னா - ஏ.பி.முருகானந்தம்

“என் பதவி போனா கவலையில்லை... என்னுடைய மாடும் ஆடும் காத்துக்கிட்டு இருக்குங்க” என்ற அண்ணாமலையின் கருத்து?

தமிழன் பிரசன்னா, செய்தி தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``அண்ணாமலை, ஒரு அரசியல் தற்குறி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அவர் பதவி இருந்தால் மட்டுமே கட்சியில் இருப்பார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பதவி இருந்தாலும், இல்லையென்றாலும் தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளின் மீது ஈர்ப்புவைத்து அந்தக் கட்சிக்காக, சமூகத்துக்காக உழைக்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு. ஆனால், அண்ணாமலையோ பதவி இருந்தால் மட்டுமே கட்சியில் இருப்பேன் என்கிறார். அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, ஆதாயமென்றால் காலில் விழுந்து, இருப்பவர்களையெல்லாம் காட்டிக்கொடுத்து, தனது சொந்தக் கட்சியில் இருக்கும் தலைவர்களையே காலை வாரிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. பா.ஜ.க என்ற கட்சி நாக்பூர் கும்பலுக்கு மட்டுமே வேலை செய்யும். அந்தக் கட்சியில் மற்றவர்கள் எவ்வளவு உழைத்தாலும், அவர்கள் ஒரு நாளில் உதறித்தள்ளப்படுவார்கள் என்பதுதான் அந்தக் கட்சியின் வரலாறு. ஐயா ஜனா கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை அதற்கு ஒரு சிறந்த உதாரணம். அதேவேளையில், இன்று ‘வளமாக’ இருக்கும் அண்ணாமலை, ஒருபோதும் ஆடு, மாடு மேய்க்கப் போக மாட்டார். சுய விளம்பரத்துக்காக இப்படி எதையாவது உளறுவார் அவ்வளவுதான்!’’

தமிழன் பிரசன்னா - ஏ.பி.முருகானந்தம்
தமிழன் பிரசன்னா - ஏ.பி.முருகானந்தம்

ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க

``அண்ணாமலை ஒளிவு மறைவு எதுவுமில்லாத திறந்த புத்தகம். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை உழைப்பவருக்கு உரிய பொறுப்பு வழங்கப்படும். தி.மு.க-வைப்போல வாழையடி வாழையாக வாரிசு அரசியல் நடத்துவது பா.ஜ.க-வில் நடக்காது. முன்பு தி.மு.க-வினர் தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது தி.மு.க-வின் மூத்த தலைவர்களே `தமிழகத்தில் பா.ஜ.க பிசாசுபோல வளர்கிறது’ என்று சொல்கிறார்கள். அண்ணாமலை திறம்படப் பணியாற்றியதே இதற்கு முழுக் காரணம். அதோடு, மாற்றுக் கட்சியிலிருந்து மூத்த நிர்வாகிகள் பலரும் தொடர்ச்சியாக பா.ஜ.க-வில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை தனக்கு, ‘நாளை என்பது குறித்துக் கவலையில்லை. எந்தச் சொத்தும் சேர்த்துக்கொள்ளத் தேவையும் இல்லை. எது இருந்தாலும், இல்லையென்றாலும் என் ஆடு, மாடுகள் இருக்கின்றன’ என்று யதார்த்தமாகப் பேசியிருக்கிறார். உண்மையில் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அவர் துடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறார்!’’