Published:Updated:

ஒன் பை டூ

கார்த்தியாயினி, கோபண்ணா
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தியாயினி, கோபண்ணா

“வெட்கம், மானம் இல்லாமல் தமிழகத்தில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ்தான்!” என்று அண்ணாமலை பேசியிருப்பது?

ஒன் பை டூ

“வெட்கம், மானம் இல்லாமல் தமிழகத்தில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ்தான்!” என்று அண்ணாமலை பேசியிருப்பது?

Published:Updated:
கார்த்தியாயினி, கோபண்ணா
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தியாயினி, கோபண்ணா

கார்த்தியாயினி, மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

“உண்மையை உலகறியப் பேசியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி விடுதலை ஆனபோது, காங்கிரஸ்காரர்கள் கண்டனம் தெரிவித்தவிதத்திலேயே இவர்களின் லட்சணம் என்னவென்று உலகுக்குத் தெரிந்துவிட்டது. நீதிமன்றம் பேரறிவாளனைக் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யவில்லை. கருணை அடிப்படையில்தான் விடுதலை செய்திருக்கிறது. அப்படி விடுதலையான ஒருவரை முதல்வர் ஆரத்தழுவி வரவேற்கிறார். அப்படியான ஒரு கட்சியுடன் வெட்கமே இல்லாமல் கூட்டணியைத் தொடர்கிறார்கள். வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமே இல்லாதவர்களாகத்தான் இன்றைய காங்கிரஸ் கட்சியினர் இருக்கிறார்கள். இவர்களின் செயல்பாடு, கடந்தகாலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக உயிர்நீத்த அனைத்துத் தலைவர்களின் தியாகங்களையும் கொச்சைப்படுத்துகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டு காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் தன்மானம் அற்றவர்களாகவும், தன்னிலை மறந்தவர்களாகவும் மாறிவிட்டனர். ஒரு தலைமையைத் தேர்வுசெய்ய வக்கற்றவர்களாக இருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே கூட்டணிக் கட்சியின் ஆதரவோடு ஆட்சியில் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் அந்த இரண்டு இடமும் இல்லாமல் போய்விடும். இந்தியா முழுவதுமே காங்கிரஸ் கட்சியைப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தியாவில் காங்கிரஸ் என்ற கட்சி இல்லாமல் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்தியா முழுவதிலும் பா.ஜ.க., மக்கள் மனதை வென்றிருக்கிறது. பா.ஜ.க என்றால் ஆளுமை. காங்கிரஸ் என்றால் மாநிலக் கட்சிகளின் அடிமை!”

ஒன் பை டூ
ஒன் பை டூ

கோபண்ணா, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர், காங்கிரஸ்

“அவதூறாகப் பேசிவருகிறார் அண்ணாமலை. தன்மீது எப்போதுமே ஊடக வெளிச்சம் பட வேண்டும் என்ற அரிப்பில், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார். அண்ணாமலை இதுவரை வைத்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கிறதா... இல்லை ஆதாரம்தான் இருந்திருக்கிறதா... இவரின் அராஜக அரசியல் செயல்பாடுகளால் தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அழகிரி மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார். மாநிலம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். சமீபத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பொன்னையன் பா.ஜ.க-வின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்குப் பிறகும் அ.தி.மு.க., பா.ஜ.க உறவு சுமுகமாக இருக்கிறது என்று சொல்லும் அண்ணாமலைக்குக் கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கிறதா... காங்கிரஸ் குறித்துப் பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது... அவர் பா.ஜ.க-வில் சேர்ந்த பத்து மாதங்களில் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதிலிருந்தே அந்தக் கட்சியில் தலைவர் பதவிக்கு எந்த அளவுக்குப் பஞ்சம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணாமலைக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர் தொடர்ந்து அநாகரிக அரசியலை மட்டும்தான் செய்துவருகிறார். தமிழ்நாட்டின் நலன் சார்ந்து இதுவரை தமிழக பா.ஜ.க ஏதாவது செய்ததுண்டா... மத்திய அரசின் தமிழக விரோதப் போக்குக்குத் துணைபோகும் கட்சியாகத்தான் தமிழ்நாடு பா.ஜ.க இருக்கிறது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism