Published:Updated:

ஒன் பை டூ

க.கனகராஜ், ஸ்ரீராம நிவாசன்

ஆளுநரிடம் கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? என்ற கே.பாலகிருஷ்ணனின் கேள்வி?

ஒன் பை டூ

ஆளுநரிடம் கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? என்ற கே.பாலகிருஷ்ணனின் கேள்வி?

Published:Updated:
க.கனகராஜ், ஸ்ரீராம நிவாசன்

க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்.

“சரியாகக் கேட்டிருக்கிறார். குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் பதவியேற்கும்போது அவர்களின் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆளுநர்களுடன் அரசு சார்பில் பேசும்போது, அதில் அரசியல் சார்ந்த விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ரஜினிகாந்த் அரசு சார்பில் பேசவில்லையே... அவர்கள் ஒரு கட்சி அரசியல் குறித்துப் பேசியிருக்க வாய்ப்பிருக்கிறதுதானே... ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தை மீறும்போது அனைவரும் கேள்வி எழுப்பத்தான் செய்வார்கள். ஆளுநருக்கு நமது வரிப்பணத்திலிருந்துதான் சம்பளம் வழங்கப்படுகிறது. அவர் தனிப்பட்ட முறையில் செயல்படுகிறார். டேவிட்சன் தேவாசீர்வாதம் குறித்து தமிழ்நாடு காவல்துறையிலோ, அமைச்சரிடமோ புகார் தெரிவிக்காமல், தங்கள் கட்சியின் ஆதரவாளர் என்பதால் நேரடியாக ஆளுநரிடம் புகார் தெரிவிக்கிறார் அண்ணாமலை. அந்த வழக்கை விசாரித்த நீதிபதியும் ‘டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது தவறு இல்லை’ என்று சொல்லிவிட்டு, ‘இதை வெளியே கொண்டுவந்த அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர்’ என்று பாராட்டுகிறார். பா.ஜ.க-வினர் சுயாட்சி அமைப்புகளைத் தங்களின் கட்சியை வளர்க்கத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறார்கள். இதைத்தான் தோழர் பாலகிருஷ்ணன் கேள்வியாக எழுப்பியிருக்கிறார்.”

ஒன் பை டூ
ஒன் பை டூ

ஸ்ரீராம நிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க.

“கேள்வி முற்றிலும் தவறானது. ஆளுநர் ஏதாவது பேசினாலே திருமாவளவனும், காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் கொதிப்பது ஏன்... இந்த நாட்டில் அனைத்திலுமே அரசியல் இருக்கிறது. ஆளுநர் கண்டிப்பாக அரசியல் பேச வேண்டும். தனிப்பட்ட கட்சி அரசியல் பேசுவதுதான் தவறு. அவர் ஒன்றும் ‘பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்... அண்ணாமலையை முதல்வராக்குங்கள்...’ என்று பேசவில்லையே... தன்னுடன் பேசுபவர்களிடம் தமிழ்நாட்டைப் பற்றி அதிகம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநர், தமிழக மக்கள்மீது அதீத அக்கறை வைத்திருக்கிறார். இந்த அரசு ஆளுநரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆளுநரைப் பிற அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சித் தலைவராக நினைக்கக் கூடாது. அவர் தமிழ்நாட்டின் அரசியல் சாசனத்தின் தலைவர். அவரின் பெயரில்தான் தமிழ்நாடு இயங்குகிறது. ஆளுநர் உரையில்கூட நடைபெற்றுவரும் தி.மு.க அரசை ‘எனது அரசு’ என்றுதான் பேசுகிறார். ஆளுநர் குறித்து யாராவது பேசினால், பதில் சொல்லவேண்டியது முதல்வர் ஸ்டாலின்தான். அவர் எதுவும் பேசாததால், அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார்!”