பிரீமியம் ஸ்டோரி

`நிரந்தர எதிரிகளும் இல்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை’ - அரசியல் ஆத்திச்சூடியின் அடிப்படை வாசகங்கள் இவை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காதவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது பா.ஜ.க. பெரியார், அண்ணா வழியில் சென்ற திராவிடக் கட்சிகள், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவே தொடக்கத்தில் தயங்கின. ஆனால், முதல்முறையாக அதை உடைத்து தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு உயிர் மூச்சு தந்தவர் ஜெயலலிதா! அப்போதும் அந்தக் கட்சியால் தமிழகத்தில் வேரூன்ற முடியவில்லை. இப்போதும் அந்தக் கட்சி திராவிடக் கட்சிகளையோ அல்லது எவரேனும் ஒரு கவர்ச்சி பிம்பத்தையோ ‘தூக்கிச் சுமக்க வர மாட்டார்களா?’ என்றே காத்துக்கிடக்கிறது. ஏன் இந்த நிலைமை?

தமிழ்நாட்டில், 1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும், 1989 நாடாளுமன்றத் தேர்தலில், மூன்று இடங்களிலும், 1991 நாடாளுமன்றத் தேர்தலில் 15 இடங்களிலும், 1996 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க வெற்றி பெறவில்லை. தொடக்கத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில்தான் சட்டசபைத் தேர்தல்களிலும் பா.ஜ.க போட்டியிட்டு வந்தது. முதன்முறையாக 1996 சட்டசபைத் தேர்தலில் ஒரு தொகுதியில் வென்று, சட்டசபைக்குள் நுழைந்தது பா.ஜ.க. பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து வேலாயுதன் எம்.எல்.ஏ ஆனார். அந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக பா.ஜ.க வாக்குவங்கி, ஒரு சதவிகிதத்தைக் கடந்தது.

பா.ஜ.க-வுக்கு உதவிய ஜெ., கருணாநிதி!

1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த பிறகுதான், தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு ஓரளவேனும் அடித் தளம் கிடைத்தது. அந்தத் தேர்தலில், ஐந்து தொகுதிகளை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. அவற்றில் மூன்றில் வென்றது பா.ஜ.க. வாக்கு சதவிகிதம் 6.86 ஆக உயர்ந்தது. அந்த வகையில்

தமிழகத்தில் முதன்முறையாக பா.ஜ.க கட்சி அடித்தளமிட முழுமுதற் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால், அந்தக் கூட்டணி 13 மாதங்களிலேயே முறிய... மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அறிவாலயத்துக்குப் படையெடுத்தது பா.ஜ.க. இந்தமுறை கைகொடுத்தவர் கருணாநிதி. அங்கே ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட நான்கு இடங்களில் வென்றது பா.ஜ.க. இதன் பிறகு திருநாவுக்கரசர் தலைமையில் செயல்பட்டு வந்த ‘எம்.ஜி.ஆர் அ.தி.மு.க’, பா.ஜ.க-வில் இணைந்த நேரத்தில் கட்சி கொஞ்சம் பலமடைந்தது.

அடுத்து வந்த 2001 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தொடர்ந்தது பா.ஜ.க. 21 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வென்றது. இந்த நான்கு இடங்கள் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தது ம.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க கூட்டணியை முறித்துக்கொண்டு, தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க, பா.ஜ.க போட்டியிட்ட 21 தொகுதி களில் மட்டும் தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இது பா.ஜ.க-வுக்கு வசதியாகப் போனது.

ரஜினி சொன்னார்... மக்கள் கேட்கவில்லை!

வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்த தி.மு.க, பா.ம.க கட்சிகள், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டணியிலிருந்து கழன்று, காங்கிரஸ் அணியில் இணைந்தன. பொடா சட்டம் அமல், காவிரிப் பிரச்னை, தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்காதது போன்ற காரணங்களை அடுக்கி, அந்தக்கட்சிகள் விலகின. இதனால், போயஸ் கார்டனுக்குத் தாவிய பா.ஜ.க-வுக்கு அந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா.

பா.ஜ.க
பா.ஜ.க

‘பாபா’ படப் பிரச்னையில் பா.ம.க-வுடன் மோதிய ரஜினி, பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தார். அத்துடன் அவர் வெளியிட்ட அறிக்கையில், `இந்தத் தேர்தலில் மத்தியில் அமரப்போவது வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ அரசுதான். இது உறுதி. என்னைப் பொறுத்தவரை யில், இந்திய நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னைக்கு யார் தீர்வு காண்கிறார் களோ அவர்களுக்கே என் ஓட்டு. வாஜ்பாய் அரசு அதைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க, கூட்டணிக்குத்தான் என் ஓட்டு’ என்றார். இப்படி வெளிப்படையாக ரஜினி ஆதரவு அளித்தும்கூட அந்தத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறவில்லை. 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. கூட்டணி பலத்தால் மட்டுமே 1998 மற்றும் 1999 ஆகிய இரண்டு தேர்தலில் தமிழகத்தில் கால் ஊன்றிய பா.ஜ.க, 2004 தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

கைகழுவிய கழகங்கள்!

அதன்பிறகு பா.ஜ.க-வை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டார் ஜெயலலிதா. 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்குத் தூதுவிட்டது பா.ஜ.க. ஆனால், அறிவாலயமும் கைவிட்டுவிட்டதால் தனித்துப் போட்டியிட்டது பா.ஜ.க. 225 தொகுதிகளில் போட்டியிட்டு, 221 இடங்களில் டெபாசிட் இழந்தது. வாக்கு சதவிகிதம் 2.02 ஆகச் சரிந்தது.

2006 சட்டசபைத் தேர்தலில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க வாங்கிய ஓட்டுகள் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. அடுத்து வந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், விஜயகாந்த்துடன் கூட்டணி வைக்கக் கட்சிகள் வட்டமடித்தன. அதில் பா.ஜ.க-வும் ஒன்று. இனி கருணாநிதி யையும் ஜெயலலிதாவையும் நம்பி பிரயோஜனம் இல்லை என முடிவெடுத்து, விஜயகாந்த்துக்குத் தூது விட்டார்கள். ‘‘பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதுதான் விஜயகாந்த் துக்கும் நாட்டுக்கும் நல்லது’’ என்றார் அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன். ஆனால், அவரது ஆசை நிராசையானது. விஜயகாந்த் தனியாக நின்றார். எல்லாப் பக்கமும் கழற்றிவிட்டதால், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ஜனதா, பாரதீய பார்வர்டு பிளாக் ஆகிய சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது பா.ஜ.க. அந்தத் தேர்தலில் அதிக இடங்களை தி.மு.க கூட்டணி வென்றது. பா.ஜ.க மீண்டும் மண்ணைக் கவ்வியது.

ஐக்கிய ஜனதா தளம், ஜனதா எனத் தமிழகத்தில் செல்வாக்கே இல்லாத கட்சிகளை இணைத்துக் கொண்டு 2011 சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது பா.ஜ.க. 200-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க தனி அணியாகப் போட்டியிட்டது. பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் தமிழகத்தில் பிரசாரம் செய்தனர். எப்படியாவது இரண்டு இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் இலக்காக இருந்தது. அப்போது மாநிலத்தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், ஸ்டார் பேச்சாளர் களான தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்டவர்களும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு எனச் சொல்லிக் கொண்டிருந்தது பா.ஜ.க. ஆனால், ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க வெற்றி பெறவில்லை. 204 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க, 198 இடங்களில் டெபாசிட்டைப் பறி கொடுத்தது. மொத்தமாக 8.19 லட்சம் வாக்குகளை மட்டுமே வாங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எடுபடாத மோடி அலை!

மோடி அலை வீசிய 2014 நாடாளு மன்றத் தேர்தலில்கூட தமிழகத்தில் பா.ஜ.க-வுக்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. கூட்டணிக்காக விஜயகாந்த்தின் வீட்டில் தவம் கிடந்தார்கள் அந்தக் கட்சியின் தலைவர்கள். தே.மு.தி.க மற்றும் பா.ம.க தலைவர்களுடன் பல கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியது பா.ஜ.க. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக தே.மு.தி.க தலைமையில் பா.ம.க, பா.ஜ.க, ம.தி.மு.க, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவானது. கூட்டணிக்குப் பலம் கூட்ட ரஜினி, விஜய்யை மோடி சந்தித்தார். ‘‘சிறந்த நிர்வாகியான மோடிக்கு வாக்களியுங்கள்’’ என பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்தனர். ரஜினியும் ‘‘மோடி சிறந்த நிர்வாகி’’ என்றார். ஜெயலலிதாவோ, ‘‘சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான்’’ என பதிலடி கொடுத்தார்.

தமிழகத்தில் ஏன் தாமரை மலரமுடியவில்லை?
தமிழகத்தில் ஏன் தாமரை மலரமுடியவில்லை?

இன்னொரு பக்கம் கூட்டணிக்குள் புகைச்சல். தே.மு.தி.க - பா.ம.க இடையிலான கசப்பு கடைசி வரை நீடித்தது. விஜயகாந்த்தும் ராமதாஸும் சேர்ந்து பிரசாரம் செய்யவே இல்லை. ‘‘தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எட்டு சதவிகித வாக்குகள் இருந்தன. இது 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது’’ என அந்தத் தேர்தலின்போது சொன்னார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்படி உயர்ந்திருந்தால் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அந்தக் கூட்டணி ஜெயித்திருக்கும். பொன்.ராதா கிருஷ்ணனும் அன்புமணியும் மட்டுமே ஜெயித்தார்கள். விஜயகாந்த் துக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. ‘‘அழுதுகொண்டே சிரிக்கிறேன்’’ என்றார் பொன்னார்.

மறுபடியும் முட்டை!

2016 சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க-வை எந்தக்கட்சியும் சீண்ட வில்லை. அதனால், இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது பா.ஜ.க. 188 தொகுதி களில் போட்டியிட்ட பா.ஜ.க, வழக்கம் போல முட்டை வாங்கியது. 180 தொகுதிகளில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது.

2006 சட்டசபைத் தேர்தலில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க வாங்கிய ஓட்டுகள் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தது.

அதுகாலம் வரையில் ஒவ்வொரு தேர்தலிலும் கோபாலபுரத்திலும் போயஸ் கார்டனிலும் ஆண்டாள் அழகர் இல்லத்திலும் காத்துக் கிடந்த பா.ஜ.க, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதிய அவதாரம் எடுத்தது. கூட்டணிக்காகக் கெஞ்சுவதைக் கைவிட்டது. அது மொத்தமாக அ.தி.மு.க-வை சுவீகாரம் எடுத்துக் கொண்டது, அந்தக் கட்சித் தலைவர் களின் ஊழலை முன்வைத்து மிரட்டி அதிகார ஆதிக்கம் செய்தது, அடிமைப்படுத்தியது - இப்படி இதில் எதை வேண்டுமானாலும் இங்கே பொருத்திக்கொள்ளலாம்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘தமிழ் நாட்டில் பா.ஜ.க கூட்டணி அரசை ஏற்படுத்தியே தீரவேண்டும்’’ என்றார். அவர் சொன்னபடி கூட்டணி அரசு அமையாவிட்டாலும் அதன் கட்டுப் பாட்டில் இயங்கும் அரசாக அ.தி.மு.க ஆட்சி அமைந்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் பா.ஜ.க-வின் பிடிக்குள் போன அ.தி.மு.க, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 5 தொகுதிகளை பா.ஜ.க-வுக்கு அள்ளித்தந்தது. ஒன்றில்கூட ஜெயிக்கவில்லை... பொன்னாரும்கூட.

2016 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் விளம்பரத்தில் இடம்பெற்ற முக்கிய மான வாசகம் இது. ‘போதுமப்பா... போதும். தமிழகம் இனியும் தாங்காது!’ என்ற தலைப்பில் வெளியான அந்த விளம்பரத்தில், ‘ஊழலில் தடம் பதித்த இரு திராவிடக் கழகங்களால் நலிந்துபோனது தமிழ்நாடு’ எனக் குறிப்பிட்டிருந்தார்கள் பா.ஜ.க-வினர். தமிழகம் வந்த அமித் ஷா, ‘‘இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம்தான்’’ என்றார். அந்த அமித் ஷாதான் 2019 நாடாளு மன்றத் தேர்தலில், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர்ந்தார்.

துரத்தித் தூற்றிய கட்சியிடமே சரணாகதியாவதில் மற்ற கட்சிகளுக்கு பா.ஜ.க கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை காலம் நிரூபித்தது.

வித்தியாசமான கட்சி என்கிற இமேஜ் ஒரு காலத்தில் பா.ஜ.க-வுக்கு இருந்தது. துரத்தித் தூற்றிய கட்சி யிடமே சரணாகதியாவதில் மற்ற கட்சிகளுக்கு பா.ஜ.க கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை காலம் நிரூபித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் சில தொகுதிகளையாவது கைப்பற்றிவிட வேண்டும் எனப் பக்காவாக பிளான் போட்டது பா.ஜ.க. பூத் வாரியாகப் பொறுப்பாளர்களைக் களமிறக்கி னார்கள். ‘மகா சக்தி’, ‘சக்தி கேந்திரம்’ என்கிற வாக்குச்சாவடி முகவர்களை மாநிலம்வாரியாகச் சந்தித்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார் அமித் ஷா. தமிழகத் தின் 15,000 பூத் பொறுப்பாளர்களை அமித் ஷா சந்தித்தார். பூத்வாரியாக மேற்கொள்ள வேண்டிய அசைன்மென்ட்களையும் தமிழக பா.ஜ.க-வினருக்குக் கொடுத்தார். ஆனாலும், எந்தப் பலனும் ஏற்படவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை பெரியார் மண் என்று நிரூபித்தார்கள் மக்கள். தவிர, அமித் ஷாவின் ஊழல் எதிர்ப்பு கோஷத்தை தமிழக மக்கள் நம்பவில்லை என்பதே, பா.ஜ.க கூட்டணிக்குக் கிடைத்த படுதோல்வியைக் காட்டியது.

12 லட்சம் உறுப்பினர்கள் எங்கே?

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பா.ஜ.க-வுக்கு 17.16 கோடிப் பேர் வாக்களித்தனர். இதனால் 282 எம்.பி-க்கள் பா.ஜ.க-வுக்குக் கிடைத்தனர். கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தினால், அடுத்த தேர்தலில் 300 எம்.பி-க்கள் கிடைப்பார்கள் எனக் கச்சிதமாகக் கணக்குப் போட்டது பா.ஜ.க. அதன்படி ‘மிஸ்டுகால் உறுப்பினர்’ திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதற்காக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவைக்கு வந்த அமித் ஷா, ‘‘பூத் வாரியாக உறுப்பினர்களை வலிமையாக்க வேண்டும்’’ என நிர்வாகிகள் மத்தியில் சொன்னார். அதன் பிறகு நடைபெற்ற 2016 சட்டசபைத் தேர்தலிலும், பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. பா.ஜ.க வாங்கிய மொத்த ஓட்டுகள் 12.28 லட்சம். அதற்கு முந்தைய ஆண்டு பா.ஜ.க-வில் சேர்க்கப்பட்ட 24 லட்சம் உறுப்பினர் களில், பாதிப்பேர்கூட பா.ஜ.க-வுக்கு ஓட்டுப் போடவில்லை. பிறகு எப்படி தமிழகத்தில் தாமரை மலரும்?

தமிழகத்தில் ஏன் தாமரை மலரமுடியவில்லை?
தமிழகத்தில் ஏன் தாமரை மலரமுடியவில்லை?

நோட்டாவுடன் போட்டி!

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், ஆர்.கே.நகரில் போட்டி யிட்ட பா.ஜ.க வேட்பாளர் எம்.என்.ராஜா வாங்கிய வாக்குகள் 2,928. ஜெயலலிதா மறைவால், அதே ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு 2017-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் பெற்ற வாக்குகள் 1,417. பொதுத் தேர்தலைவிட இடைத்தேர்தலில், பா.ஜ.க-வின் ஓட்டுகள் இன்னும் சரிந்துபோனது. நோட்டாவோடு போட்டியிடும் அளவுக்குப் புதிய சரித்திரம் படைத்தது அந்தக் கட்சி.

2021-ல் அதிசயம் நிகழும்’’ எனச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். பா.ஜ.க-வுக்கும் அந்த அதிசயம் நிகழுமா... தாமரை மலருமா???

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க-வுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 2.84. அதற்கு முந்தைய 2011 சட்டசபைத் தேர்தலில் கிடைத்த வாக்கு சதவிகிதம் 2.22. அதாவது ஐந்தாண்டுகளில் 0.62 சதவிகிதம்தான் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி உயர்ந்தது. முன்பு கருணாநிதியை யும் ஜெயலலிதாவையும் நம்பினார்கள். பிறகு விஜயகாந்த் பின்னால் போனார்கள். அ.தி.மு.க ஆட்சியைப் பின்னணியில் இயக்கும் அதிகாரமும் பெற்றார்கள். ஆனாலும்கூட தமிழ கத்தில் பா.ஜ.க காலூன்ற முடியவில்லை. இப்போது ரஜினியின் தயவைப் பெரிதும் நம்பியிருக்கிறது அந்தக் கட்சி. அதற்கேற்ப ரஜினியின் கருத்துக் களும் பெரும்பாலும் பா.ஜ.க ஆதரவு கொண்டவையாகவே இருக்கின்றன. ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவருக்காக பா.ஜ.க-வின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’’ என முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார் அமித் ஷா. தமிழகத்தில் பா.ஜ.க-வின் செல்வாக்கு இனிமேலும் உயரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. கடைசி அஸ்திரமாக பா.ஜ.க நம்புவது ரஜினியை மட்டும்தான்.

‘‘2021-ல் அதிசயம் நிகழும்’’ எனச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். பா.ஜ.க-வுக்கும் அந்த அதிசயம் நிகழுமா... தாமரை மலருமா???மா... தாமரை மலருமா???

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு