Published:Updated:

ஒன் பை டூ

வினோஜ் பி செல்வம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

“பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க தி.மு.க-வுக்குத் தகுதி இல்லை” என்று அண்ணாமலை பேசியிருப்பது?

ஒன் பை டூ

“பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க தி.மு.க-வுக்குத் தகுதி இல்லை” என்று அண்ணாமலை பேசியிருப்பது?

Published:Updated:
வினோஜ் பி செல்வம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

வினோஜ் பி செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க.

``உண்மையைச் சொல்லியிருக்கிறார். தேசியமும் தெய்விகமும் பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கை. இந்த தேசத்தை முன்னேற்றப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் கட்சி பா.ஜ.க. இந்தியாவைத் துண்டாக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் கட்சி தி.மு.க. ‘நாட்டைத் துண்டாட நினைப்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள், கட்சி தடை செய்யப்படும்’ என்று சட்டம் கொண்டு வந்த பின்னர்தான் அந்தப் பேச்சையே நிறுத்தியது தி.மு.க. இருந்தபோதிலும் இன்றுவரை தி.மு.க-வினர் இந்தியாவை ஒரு நாடாக ஒப்புக்கொண்டதே இல்லை. சமீபத்தில்கூட முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே, ‘எங்களைத் தனித் தமிழ்நாடு கேட்க வைத்துவிடாதீர்கள்’ என்று பேசினார் ஆ.ராசா. தேசத்துக்கு அடுத்ததாக தெய்விக நம்பிக்கை கொண்ட கட்சி பா.ஜ.க. ஆனால், தி.மு.க.வி-னர் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்திலிருந்து இருவர் அரசியலுக்கு வருவது வேறு; ஒரு குடும்பமே மொத்த அரசியலையும் நடத்துவது வேறு. தி.மு.க-வில் அதுதான் நடக்கிறது. ஆனால், மக்களுக்காகத் தனது ஐ.பி.எஸ் பணியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர் அண்ணாமலை. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை வேகமாக வளர்த்துவருவதுடன், தி.மு.க-வின் ஊழல்களைத் தொடர்ந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் அண்ணாமலை. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் அவரைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள் தி.மு.க-வினர்.

வினோஜ் பி செல்வம்
வினோஜ் பி செல்வம்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

”கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்துக்கொள்ள எங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? ஊடக வெளிச்சத்துக் காக இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக் கிறார் அண்ணாமலை. ஆனாலும், அவர் சொல்வதில் ஒரு உண்மையிருக்கிறது. தி.மு.க-வுக்கு தேசத்தை விற்கத் தெரியாது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கொண்டு கட்சி நடத்தத் தெரியாது. பெரும்பணக்காரர்களிடம் காசை வாங்கிக்கொண்டு, எம்.எல்.ஏ-களை விலைக்கு வாங்கி கழிசடைத்தனமான அரசியல் செய்யத் தெரியாது. தேசம், மக்கள், சமூகநலன், சமத்துவத்தை விரும்பும் தி.மு.க-வுக்கு, அருவருப்பான அரசியல் செய்யும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள எந்த தகுதியும் இல்லைதான். ஒரு ஆட்டுக்கு இருக்கும் மூளை கூட இல்லாமல், அரைவேக்காட்டுத்தனமான அரசியல் செய்யும் அண்ணாமலை... ஆலமரமாக வேரூன்று வளர்ந்து நிற்கும் தி.மு.க-வை விமர்சிப்பதை என்னவென்று சொல்வது? தன்னை பெரும் ஆளுமையாகக் காட்டிக்கொள்ள நாளுக்கொரு வேஷம் போட்டுக்கொண்டிருக்கும் அரசியல் கோமாளி அவர். தமிழ்நாட்டில் நோட்டாவோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.க, தி.மு.க-வை விமர்சிப் பதைப் பார்க்கும்போது சூரியனைப் பார்த்து... என்ற பழமொழிதான் நினைவுக்குவருகிறது. மக்கள் அண்ணா மலையை அரசியல்வாதியாக அல்ல ஒரு பொழுதுபோக்காகத் தான் பார்க்கிறார்கள். இனியும் அப்படித்தான் பார்ப்பார்கள்.