Published:Updated:

தேசிய அளவில் தேய்கிறதா பா.ஜ.க?

அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

மாநில சட்டசபைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் தேசியக் கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை.

தேசிய அளவில் தேய்கிறதா பா.ஜ.க?

மாநில சட்டசபைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் தேசியக் கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை.

Published:Updated:
அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

ஜார்கண்ட் என்ற குட்டி மாநிலத்தின் தேர்தல் முடிவு பற்றிப் பொதுவாக தேசிய அளவில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், இப்போது நடைபெறும் ஜார்கண்ட் தேர்தல் முடிவுக்காக, பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் நகத்தைக் கடித்தபடி பதற்றத்துடன் காத்திருக்கிறார்கள். வெறும் 81 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட ஜார்கண்டை, இப்போது தங்கள் ஆட்சியில் இருக்கும் பெரிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதுகிறது பா.ஜ.க. இதுவும் கைநழுவிப் போனால் அவமானம்தான்.

மாநில சட்டசபைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் தேசியக் கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை. கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் முடிவு டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது. ஆனால் அதை அச்சத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது பா.ஜ.க. நூலிழை மெஜாரிட்டியில் முதல்வர் எடியூரப்பாவின் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. அதை உறுதி செய்ய அங்கு வெற்றி அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில மாதங்களுக்கு முன்புவரை ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என பா.ஜ.க முழங்கிக்கொண்டிருந்தது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை பா.ஜ.க தனியாகவோ, கூட்டணி அமைத்தோ ஆள்வதைச் சுட்டிக்காட்டி, முக்கால்வாசி இந்தியாவே காவி வண்ணத்தில் இருக்கும் வரைபடம் ஒன்று பெருமிதத்துடன் ஷேர் செய்யப்பட்டது.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

மகாராஷ்டிரா ஆட்சியை பா.ஜ.க இழந்திருக்கும் இந்த நேரத்தில், ஆங்காங்கே காவி வண்ணம் இருக்கும் ஒரு தேசப்படம் வைரல் ஆகிறது. ‘பா.ஜ.க-வின் செல்வாக்கு சரிந்துவிட்டது’ என அது சுட்டிக் காட்டுகிறது. மோடி எதிர்ப்பாளர்களால் அந்தப் படம் ஆர்வத்துடன் பகிரப்படுகிறது.

இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியிலிருந்து பிரதமராகி, ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பூர்த்தி செய்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே! அதில் வாஜ்பாய்க்கு அடுத்த முறையும் பிரதமராகும் அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை; மோடிக்கு வாய்த்தது. 2014-ம் ஆண்டு அடைந்ததைவிட 2019-ம் ஆண்டு பிரமாண்டமான வெற்றி. 303 தொகுதிகளை பா.ஜ.க மட்டுமே வென்று அறுதிப் பெரும்பான்மைக்கும் மேலான வெற்றியை ருசித்தது. டெல்லி, குஜராத், ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் எனப் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுக்கு ஒற்றைத் தொகுதிகூடக் கிடைக்கவில்லை. ‘மும்பையில் நீங்கள் ரயில் ஏறி வட இந்தியாவுக்குச் சென்றால், 1,500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தபின் பஞ்சாப் மாநிலத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஒருவரைப் பார்க்க முடியும்’ என பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கிண்டல் செய்த அளவுக்கு எதிர்க்கட்சிகளைத் துடைத்தெறிந்த வெற்றி. அந்த வெற்றியை அடைந்து ஆறு மாதங்கள் இப்போதுதான் முடிந்திருக்கின்றன. அதற்குள் ‘பா.ஜ.க செல்வாக்கு சரிகிறதா’ என விவாதங்கள் எழுவதற்கு என்ன காரணம்?

சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் உண்மை புரியும்.

2014-ம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்றபோது வெறும் ஏழு மாநிலங்களில்தான் பா.ஜ.க ஆட்சி புரிந்தது. இந்திய வரைபடத்தின் சில இடங்களில் மட்டும் காவி வண்ணம் இருந்தது. ‘மோடி அலை இனி இந்தியாவை வசப்படுத்தும்’ என அறிவித்தார் ‘நவீன சாணக்கியர்’ அமித் ஷா. அடுத்தடுத்து வெற்றிகள் பெற்று, 2018-ம் ஆண்டு மத்தியில் இந்தியாவின் 21 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக பா.ஜ.க ஆனது. பா.ஜ.க என்ற பெயரையே கேள்விப்பட்டிருக் காத வடகிழக்கு மாநிலங்களில்கூட அந்தக் கட்சிக்கு எம்.எல்.ஏ-க்கள் கிடைத்தார்கள். தென்னிந்தி யாவும், ஒடிஷா, மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுமே விதிவிலக்காக இருந்தன.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி
  • இவற்றில் 16 மாநிலங்களில் பா.ஜ.க முதல்வர்கள் ஆட்சி செய்தார்கள். மற்ற இடங்களில் கூட்டணியில் அது இடம்பெற்றிருந்தது.

  • ஆனால், அதன்பிறகு சறுக்கல்கள் ஆரம்பித்தன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்து போனார். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் பா.ஜ.க-வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது மகாராஷ்டிராவை இழந்திருக்கிறது. எனவே, இப்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 17 ஆகக் குறைந்திருக்கிறது. இவற்றில் ஏழு, வடகிழக்கில் உள்ள குட்டி மாநிலங்கள். உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஜார்கண்ட் ஆகியவை மட்டுமே பெரிய மாநிலங்கள்.

  • பா.ஜ.க இழந்தவை எல்லாமே பரப்பிலும் மக்கள்தொகையிலும் பெரிய மாநிலங்கள். அதனாலேயே இழப்பு மிகப் பெரியதாகத் தெரிகிறது. இடையில் மிசோரம் என்ற சிறிய மாநிலம் ஒன்றில் அது ஆளும் கூட்டணியில் இடம் பிடித்தது. ஆனால், அது தேச வரைபடத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. மகாராஷ்டிராவும் பெரிய மாநிலம் என்பதால், சட்டெனக் காவியின் நிறம் மங்கிவிட்டது. இப்போது 12 மாநிலங்களை மட்டுமே பா.ஜ.க முதல்வர்கள் ஆள்கிறார்கள்.

  • பா.ஜ.க அதன் உச்சத்தில் இந்தியாவின் 71 சதவிகித நிலப்பரப்பை ஆட்சி செய்தது. இப்போது அதன் வசம் இருப்பது 40 சதவிகிதம் மட்டுமே! என்றாலும், இந்தியாவிலேயே அதிக எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட கட்சி அதுதான்.

  • நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பிருந்து, இந்த ஓராண்டுக் காலத்துக்குள் இப்படி மாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் மோடி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

எனவே, இந்தப் புள்ளிவிவரங்களை வேறு விதமாகவும் புரிந்துகொள்ளலாம். மோடி அலை என ஒன்று வீசுகிறது. ஆனால், மோடி தனக்காக ஓட்டு கேட்கும்போது அதை மதித்து வாக்களிக்கும் மக்கள், மோடி மற்றவர்களுக்காகக் கேட்கும்போது அதை ஏற்பதில்லை. இப்போதுகூட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து ஒரு இந்திய வரைபடத்தை உருவாக்கினால், தென் மாநிலங்களைத் தவிர இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காவி நிறம் தென்படக்கூடும்.

ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் பா.ஜ.க ஆட்சியை இழந்த ஐந்தே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. மத்தியப் பிரதேசத்தில் ஒற்றைத் தொகுதியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பா.ஜ.க வசப்படுத்தியது. ராஜஸ்தானில் அப்படி ஒற்றைத் தொகுதியைக் கூட எதிர்க்கட்சிகளுக்கு விட்டு வைக்கவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் லட்சங்களைத் தாண்டியிருந்தது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி
சோனியா காந்தி, ராகுல் காந்தி

இதைப் பார்த்துவிட்டே ஹரியானாவில் தனித்து நிற்கும் முடிவை மோடியும் அமித் ஷாவும் எடுத்தார்கள். ராணுவத்தில் அதிகம் பேர் பணிபுரியும் அந்த மாநிலத்தில் தேசபக்தி முழக்கமும் நன்கு எடுபடும். முஸ்லிம்கள் அதிகம் இல்லாத மாநிலம். நாடாளுமன்றத் தேர்தலின்போது அங்கு 58 சதவிகித ஓட்டுகளை வாங்கியது பா.ஜ.க. அதனால், ‘90 உறுப்பினர் சட்டமன்றத்தில் எங்களுக்கு 75 இடம் கிடைக்கும்’ என நம்பிக்கையுடன் சொன்னார்கள். ஆனால், ஆறே மாதங்களில் 22 சதவிகித ஓட்டுகளை இழந்தது பா.ஜ.க. முன்பாவது 47 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். இம்முறை வெறும் 40 பேர் மட்டுமே! பெரும்பான்மை கிடைக்காத சூழலில் திடீர்க் கூட்டணி அமைக்க வேண்டியிருந்தது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க-சிவசேனா கூட்டணி மொத்தமுள்ள 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் 41 தொகுதிகளை வென்றது. அதே கூட்டணி மீண்டும் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. ஆனால், அதே வெற்றி தொடரவில்லை. 122 எம்.எல்.ஏ-க்கள் பலத்திலிருந்து பா.ஜ.க-வின் பலம் 105 என்று குறைந்துவிட, சிவசேனா தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் எனக் கேட்டு, கூட்டணியிலிருந்து வெளியேறியது. ஒரு பொருந்தாக் கூட்டணி அங்கு ஆட்சி அமைத்திருக்கிறது.

இதே நேரத்தில் இன்னொரு தோல்வியும் பா.ஜ.க-வுக்குக் கிடைத்தது. மேற்கு வங்காளத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மூன்றிலுமே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. இதில் மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் ராஜினாமா செய்த காரக்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் 21,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்று, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது பா.ஜ.க. அப்போது இந்த காரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸைவிட 45,000 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தது பா.ஜ.க. ஆறே மாதங்களில் நிலைமை தலைகீழாகிவிட்டது.

இப்போதைய ஜார்கண்ட், கர்நாடகா சஸ்பென்ஸ் தவிர, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வேறு தேர்தல்கள் இல்லை என்பது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பெரும் ஆறுதலாக இருக்கும். டெல்லியிலும் பீகாரிலும் அடுத்த ஆண்டுதான் தேர்தல் வருகிறது.

இதற்கு முன்பும்கூட மோடியின் வசீகரத்தை மீறி பா.ஜ.க தோற்றிருக்கிறது. டெல்லியில் தோல்வி கிடைத்தது. பஞ்சாப்பில் கிடைத்தது. பீகாரில் கிடைத்தது. ஆனால், அந்தத் தோல்விகள் பெரும் விவாதத்துக்கு உள்ளானதில்லை. இப்போது பா.ஜ.க-வின் நடவடிக்கைகளுடன் இந்தத் தோல்விகளைத் தொடர்புபடுத்தியே விவாதம் எழுகிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

பா.ஜ.க-வின் வாக்கு வங்கியில் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இருக்கிறது. ஒன்று, இந்துத்துவ ஆதரவாளர்கள் கூட்டம். இன்னொரு கூட்டம் கொஞ்சம் கலவையானது. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இழந்து ‘பா.ஜ.க வித்தியாசமான கட்சி’ என்று நினைப்பவர்கள், நரேந்திர மோடி சராசரி அரசியல்வாதி கிடையாது என்று நம்புகிறவர்கள், இந்திய அரசியலில் பா.ஜ.க ஒரு மாற்றத்தை நிகழ்த்தப்போகிறது என்று எதிர்பார்ப்பு கொண்டவர்கள் ஆகியோரைக் கொண்டது இந்த இரண்டாவது கூட்டம்.

இதில் இந்துத்துவர்களுக்கு எப்போதும் பிரச்னை இல்லை. பா.ஜ.க ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ... மோடியின் அதிரடிகள் நல்ல விளைவைத் தருகிறதோ, மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறதோ... எதைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை. ‘இந்தியாவே சுபிட்சமாக இருக்கிறது’ என்று ஃபார்வேர்டு மெசேஜ்களையும் ஃபோட்டோஷாப் மாயைகளையும் நம்பியபடி அவர்களால் வாழ்ந்துவிட முடியும். இன்னொரு கோஷ்டிக்குத்தான் ஏராளமான கேள்விகள் எழுகின்றன. அவற்றில் சில இங்கே...

  • கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் சிலரை ராஜினாமா செய்யவைத்து, அந்தக் கூட்டணியைப் பெரும்பான்மை இழக்கச் செய்தது பா.ஜ.க. இந்த ‘தியாகத்தை’ அந்த எம்.எல்.ஏ-க்கள் ‘என்ன பலனுக்காக’ செய்தார்கள் என்பதைப் பற்றி யூகங்கள் நிறைய பரவின. இதைத் தொடர்ந்து அங்கு பா.ஜ.க ஆட்சி அமைந்தது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் இப்போது பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதுதான் பா.ஜ.க வலியுறுத்தும் ஜனநாயகமா?

  • கோவாவில் பா.ஜ.க ஆட்சி நூலிழைப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தது. முதல்வர் மனோகர் பரிக்கர் மறைந்ததும், அங்கு காங்கிரஸ், ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. அந்த நேரத்தில் காங்கிரஸிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் திடீரென விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தார்கள். பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இப்படிக் கட்சித்தாவல் தடைச்சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவது முறையா?

  • ‘ஊழலற்ற நல்லாட்சி கொடுத்தோம். இனியும் கொடுப்போம்’ என ஹரியானா தேர்தலில் பா.ஜ.க பிரசாரம் செய்தது. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஜனநாயக் ஜனதா கட்சியுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து, அந்தக் கட்சியின் துஷ்யந்த் சௌதாலாவுக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்தது. அவரின் தந்தை அஜய் சௌதாலா ஊழல் வழக்கில் சிறையில் இருக்கிறார். இந்தக் கூட்டணி எப்படி ஊழலற்ற ஆட்சி கொடுக்கும்?

  • மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாதபோது தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாருக்கு வலைவிரித்து அவசரமாக ஆட்சி அமைத்தது பா.ஜ.க. இப்படி ஆட்சி அமைத்த விதமே பல கேள்விகளை எழுப்பியது. அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் சிலவற்றிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்தது. ‘உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, நான்கே நாள்களில் வேறு வழியின்றி முதல்வர் ஃபட்னாவிஸ் பதவி விலக நேர்ந்தது. ‘அதிகாரத்தைப் பிடிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம்’ என்ற பா.ஜ.க-வின் இந்தச் செயல், ஆதரவாளர்கள் மனதிலேயே ஏராளமான கேள்விகளை எழுப்பியது.

‘காங்கிரஸ் செய்யாததையா பா.ஜ.க செய்து விட்டது?’ என்று இதை நியாயப்படுத்துவோர் உண்டு. ‘காங்கிரஸ் அளவுக்கு பா.ஜ.க மோசம் இல்லை’ என ஆறுதல் அடைவோரும் உண்டு. ஆனால், ‘அதேபோன்ற தவறுகளைச் செய்யும் ஒரு கட்சி, எப்படி அதற்கு மாற்றாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியும்?’ என்ற கேள்வியைக் கேட்கும் பா.ஜ.க ஆதரவாளர்களுக்குத்தான் பதில் கிடைக்கவில்லை.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இன்னொரு பக்கம் கூட்டணிக் கட்சிகளும் எப்போதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.க-வை இப்போது கைவிடுகின்றன. கூட்டணியில் இருந்து குடைச்சலைக் கொடுத்த சிவசேனா இப்போது எதிர்ப்பக்கம் போய்விட்டது. ஜார்கண்டில் நீண்ட நாள்களாகக் கூட்டணியில் இருந்த ஏ.ஜே.எஸ்.யு என்ற கட்சி, இப்போது விலகி, தனித்துப் போட்டியிடுகிறது. ‘எங்களுக்குப் போதுமான மரியாதை கிடைக்கவில்லை’ என ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் பொருமிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தோல்விகள், விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளின் புறக்கணிப்பு ஆகியவை உடனடியாக பா.ஜ.க-வை பலவீனப்படுத்தப் போவதில்லை. இந்த பலவீனங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிலும் எதிர்க்கட்சிகள் இல்லை. ‘கர்நாடகாவில் தங்கள் கூட்டணி ஆட்சியை வீழ்த்திய பா.ஜ.க, 15 தொகுதி இடைத்தேர்தலில் வென்றுவிடக் கூடாது’ என காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் முனைப்பு காட்டவில்லை. அவை தனித்தனியே மோதுகின்றன. இதேபோல ஜார்கண்டிலும் காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தில் உள்ளது.

என்றாலும், வரலாறுகள் பல சமயங்களில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே எழுதப்படுகின்றன. மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சில தவறுகளே பா.ஜ.க-வுக்குப் புது உத்வேகத்தைக் கொடுத்தன. பா.ஜ.க இப்போதுதான் அப்படித் தவறுகள் செய்ய ஆரம்பித்திருக்கிறது.