Published:Updated:

ஒட்டுண்ணி பா.ஜ.க.வும் கட்டெறும்பாய்த் தேய்ந்த காங்கிரஸும்!

நிதிஷ்குமார் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
நிதிஷ்குமார் - மோடி

காங்கிரஸின் மோசமான தோல்வியால், பீகாரில் மகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோனது.

அடம்பிடித்து 70 தொகுதிகளைக் கேட்டு வாங்கி, அவற்றில் வெறும் 19 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் ஒரு கூட்டணிக் கட்சி இருந்தால் என்ன ஆகும்? நூலிழை வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பு பறிபோகும். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு இதுதான் நிகழ்ந்தது. காங்கிரஸ் தோற்ற 51 இடங்களில் வெறும் 12 தொகுதிகளில் முடிவு மாறியிருந்தால், இன்று அங்கு தேஜஸ்வி யாதவ் முதல்வராகியிருப்பார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காங்கிரஸ் என்ற எக்ஸ்ட்ரா லக்கேஜை சுமந்ததில் ஏற்பட்ட பெரும் இழப்பு அந்தக் கட்சிக்கு முள்ளாக உறுத்துகிறது. காங்கிரஸுக்கு அதிக இடங்கள் தருவதற்காகவே, ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய இரண்டு சிறிய கட்சிகளைக் கழற்றிவிட்டது. அவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து எட்டு இடங்களில் ஜெயித்தார்கள். மேலும் பல தொகுதிகளில் முடிவுகள் மாறுவதற்குக் காரணமானார்கள்.

‘‘நாடே ஆவலுடன் கவனித்த பீகார் தேர்தலின்போது, சிம்லாவில் இருக்கும் பிரியங்கா காந்தியின் வீட்டுக்கு பிக்னிக் போய்விட்டார் ராகுல் காந்தி. 70 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், 70 பொதுக்கூட்டங்களைக்கூட நடத்தவில்லை. ராகுல் காந்தி ஆறு கூட்டங்களில் மட்டுமே பேசினார். அவரைவிட மூத்த தலைவரான பிரதமர் நரேந்திர மோடி, இதைவிட அதிக கூட்டங்களில் பேசினார். பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வரவே இல்லை. கூட்டணிக்கு துரோகம் இழைத்துவிட்டது காங்கிரஸ்’’ என்று குற்றம் சாட்டுகிறார், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவரான சிவானந்த் திவாரி.

‘‘காங்கிரஸின் மோசமான தோல்வியால், பீகாரில் மகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோனது. எதனால் இந்தத் தவறு நேர்ந்தது என்று காங்கிரஸ் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான தாரிக் அன்வர் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தத் தோல்வியின் சுவடுகள் இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸைப் பெரிதும் பாதிக்கும். தமிழகத்தில் இதுபற்றி முணுமுணுப்பாகப் பேசிவரும் நேரத்தில் மேற்கு வங்காளத்தில் வெளிப்படையாகவே பேச்சு வந்துவிட்டது.

ஒட்டுண்ணி பா.ஜ.க.வும் கட்டெறும்பாய்த் தேய்ந்த காங்கிரஸும்!

பீகார் மகா கூட்டணியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இம்முறை இணைந்தன. 29 தொகுதிகளில் போட்டியிட்ட இவை 16 இடங்களில் வென்றன. ‘‘காங்கிரஸுக்குக் குறைவான இடங்களைக் கொடுத்து, எங்களுக்கு இன்னும் அதிக இடங்கள் கொடுத்திருந்தால், முடிவு மாறியிருக்கும்’’ என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா கூறினார். ‘‘மேற்கு வங்காளத்தில் கூட்டணி அமைக்கும்போது இடதுசாரிகள் கவனமாக இருக்க வேண்டும். காங்கிரஸை பெரியண்ணன்போல ஆளுமை செலுத்த விடக்கூடாது’’ என்றும் அவர் சொன்னார்.

தமிழகத்துடன் சேர்த்து மேற்கு வங்காளத்திலும் 2021 மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ‘காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முடிவெடுத்துள்ளது. ‘இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என இப்போது குரல்கள் ஒலிக்கின்றன.

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி இதற்கு வெளிப்படையாகவே பதிலடி கொடுத்துள்ளார். ‘‘ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரமாக முடிவெடுக்க உரிமை உண்டு. ஆனால், ‘பீகார் சூழல் வேறு. மேற்கு வங்க சூழல் வேறு’ என்பதை இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 202 இடங்களில் போட்டியிட்டு வெறும் 33 இடங்களை இடதுசாரிகள் ஜெயித்தனர். காங்கிரஸுக்கு 92 இடங்களை ஒதுக்கினர். நாங்கள் 44 இடங்களில் ஜெயித்தோம். கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரே ஓர் இடத்தில் மட்டுமே டெபாசிட் வாங்கினர் இடதுசாரிகள். நாங்கள் இரண்டு இடங்களை ஜெயித்தோம் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன். தனித்தனியாகப் பிரிந்தால் இருவருக்குமே நஷ்டம்தான்’’ என்றார் அவர்.

* மேற்கு வங்காள உதாரணம் வேறாக இருக்கலாம். ஆனால், கூட்டணியை பலவீனப்படுத்தும் வேலையை காங்கிரஸ் பல இடங்களில் செய்கிறது. மகாராஷ்டிராவில் தாங்கள்தான் பெரிய கட்சி என உரிமை கோரும் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸுக்குக் குறைந்த தொகுதிகளையே ஒதுக்குகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. சரத்பவார் கட்சி 121 இடங்களில் போட்டியிட்டு 54 இடங்களில் ஜெயித்தது. காங்கிரஸ் கொஞ்சம் விட்டுக்கொடுத்து இன்னும் சிறிய கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்திருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

* பீகார் தேர்தலுடன் சேர்த்து உத்தரப் பிரதேசத்தில் ஏழு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. ‘பிரியங்கா காந்தி அங்கே காங்கிரஸை எழுச்சி பெறச் செய்துவிட்டார்’ என இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சியினர் பேசிவருகிறார்கள். ஆனால், என்ன நடந்தது தெரியுமா? நூறாண்டு கடந்த பாரம்பர்யத்தைக் கொண்ட அந்தக் கட்சி வேட்பாளரின் வேட்புமனு ஒரு தொகுதியில் தள்ளுபடி செய்யப்பட்டது. நான்கு தொகுதிகளில் டெபாசிட் காலி. இரண்டு தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது மட்டுமே ஒரே ஆறுதல். தேர்தல் பிரசாரத்துக்கு பிரியங்கா போகவில்லை. உ.பி காங்கிரஸுக்குப் பொறுப்பு வகிக்கும் பொதுச் செயலாளரான அவர், இந்த ஆண்டில் இரண்டே முறைதான் அந்த மாநிலத்துக்குப் போயிருக்கிறார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைக் கூட்டணியில் சேர்க்க மாட்டோம்’’ என மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.

* மத்தியப்பிரதேசத்தில் 27 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யவைத்து, கமல்நாத்தின் ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க. குஜராத்தில் எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யவைத்து, காங்கிரஸுக்குக் கூடுதலாக ராஜ்ய சபாவில் ஓர் இடம் கிடைப்பதைத் தடுத்தது பா.ஜ.க. இந்தத் தொகுதிகளுக்கும் இப்போது இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. ‘மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டனர்’ என நியாயம் கேட்டுப் பிரசாரம் செய்தார் கமல்நாத். 28 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 19 இடங்களில் பா.ஜ.க வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் வெறும் ஒன்பது இடங்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. குஜராத்தில் எட்டு இடங்களிலும் காங்கிரஸ் தோற்றது.

தாங்கள் அளித்த தீர்ப்பை மாற்றி எழுதிய பா.ஜ.க-வை ஏன் இங்கெல்லாம் மக்கள் ஜெயிக்க வைத்தார்கள்? ‘‘பீகார் மட்டுமல்லாமல் இடைத்தேர்தல் நடைபெற்ற எல்லா இடங்களிலும் மக்கள் காங்கிரஸை மாற்றுக் கட்சியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறியுள்ளார். நோய்க்கு என்ன மருந்து என்று தெரிந்தும், அதை எடுத்துக்கொள்ளாத நோயாளியாக காங்கிரஸ் இருக்கிறது.

‘இந்தி பெல்ட்’ எனப்படும் உ.பி, பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலில் காங்கிரஸ் தொடர்ந்து ஜெயித்து வந்தது. மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்துவந்தது. வலுவான மாற்றாக பா.ஜ.க வந்தபிறகு காங்கிரஸால் எதுவுமே செய்ய முடியவில்லை. அடித்தளம் உதிர்ந்துபோன பழைய கட்டடமாக அது காட்சியளிக்கிறது.

‘‘தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால், ‘நம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது’ என நினைத்துவிட்டோம். அதனால் மக்களுடன் தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டோம்’’ என வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் தருண் கோகோய். அசாம் முதல்வராக 15 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவரான கோகோய், ‘‘ஆர்.எஸ்.எஸ் போன்ற ஓர் அமைப்பு காங்கிரஸுக்கு வேண்டும்’’ என்கிறார். ‘‘ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், சமூகப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாக அவர்கள் மக்களை அணுகுகிறார்கள். அவர்களை பா.ஜ.க வாக்காளர்களாக மாற்றுகிறார்கள். பா.ஜ.க என்றால் என்னவென்றே தெரியாத அசாமில் அவர்கள் அப்படித்தான் வேரூன்றினர். மக்களுடன் தொடர்பில் இல்லாமல் எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியாது’’ என்கிறார் அவர்.

பஞ்சாப்பில் அமரிந்தர் சிங், சத்தீஸ்கரில் பூபேஷ் பாஹல், ஹரியானாவில் பூபிந்தர்சிங் ஹுடா போன்ற வலுவான தலைவர்கள்தான் காங்கிரஸைப் பேச வைக்கிறார்கள். ‘இப்படிப்பட்ட வலுவான தலைவர்களை உருவாக்கினால், மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டிபோல ஆகிவிடுவார்களோ’ என அஞ்சுகிறது காங்கிரஸ் தலைமை. அந்த அச்சம், கட்சியையே காலி செய்கிறது.

ஒட்டுண்ணி பா.ஜ.க.வும் கட்டெறும்பாய்த் தேய்ந்த காங்கிரஸும்!

காங்கிரஸை ‘வேண்டாத சுமை’யாக மாநிலக் கட்சிகள் கருதுகின்றன என்றால், பா.ஜ.க-வை ‘மூச்சை அழுத்தும் கூடுதல் சுமை’யாக அச்சத்துடன் பார்க்கின்றன.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்கிறது. ‘அந்தக் கூட்டணி அமைச்சரவையில் பா.ஜ.க தவிர்த்து மற்ற கட்சிகளின் அமைச்சர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்’ என்று ஒரு கேள்வி கேட்டால், அதற்கு விடை என்ன தெரியுமா? இந்தியக் குடியரசுக் கட்சியின் ராம்தாஸ் அத்வாலே என்ற ஒற்றை அமைச்சர் மட்டுமே இருக்கிறார். வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளம் கூட்டணியிலிருந்து விலகியது. பீகார் தேர்தலுக்கு முன்பாக ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்தார். அத்வாலே மட்டும் இல்லையென்றால், அது வெறும் பா.ஜ.க அரசுதான்!

காங்கிரஸைப் பார்த்துத் தயங்குகிறார்கள் என்றால், பா.ஜ.க-வைப் பார்த்து பயப்படுகிறார்கள். பீகாரில் நிதிஷ் குமார் உருவாக்கிய கூட்டணியில் முன்பு பா.ஜ.க ஒரு ஜூனியர் பார்ட்னர். இப்போது 74 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் அது இருக்க, வெறும் 43 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட கட்சியின் தலைவராக மீண்டும் முதல்வர் ஆகிறார் நிதிஷ். எதிர்காலத்தில் நிதிஷ் இல்லாமல் அவர்களால் தனித்தே செயல்பட முடியும்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியில் ஜூனியர் பார்ட்னராக இருந்த பி.ஜே.பி., பால் தாக்கரேவின் மரணத்துக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தது. மேற்கு வங்காளத்தில் முன்பு மம்தாவுடன் கூட்டணி அமைத்து ஒன்றிரண்டு இடங்களில் ஜெயித்த பா.ஜ.க., கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா கட்சிக்கு இணையாக ஜெயித்து சவால் விட்டது. அடுத்த மே மாதம் அங்கு பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்தால், யாரும் ஆச்சர்யப்பட முடியாது.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், தன் மாநிலத்தில் பா.ஜ.க-வை ஒரு பொருட்டாகவே மதித்தது இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மகள் கவிதாவை பா.ஜ.க தோற்கடித்தது. இப்போது டுபாக் தொகுதி இடைத்தேர்தலிலும் பா.ஜ.க ஜெயித்துள்ளது. ஒரு சாதாரண இடைத்தேர்தல் தோல்வி இல்லை இது. சந்திரசேகர ராவ் தொகுதி, அவர் மகன் ராமாராவ் தொகுதி, மருமகன் தொகுதி ஆகியவற்றுக்கு மையத்தில் இருக்கும் தொகுதி டுபாக். சந்திரசேகர ராவின் சொந்த மண்ணில் அவருக்கு சவால் விடுகிறது பா.ஜ.க.

ஆந்திராவில் ஒரு காலத்தில் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் சிறிய கட்சியாக இருந்த பா.ஜ.க., இன்று முதல்வர் ஜெகனுக்குத் தலைவலி கொடுக்கும் முதன்மை எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. சந்திரபாபு நாயுடு கட்சியிலிருந்து பலரை வளைத்துப் போடுகிறது. தமிழகத்திலும் இதேபோலச் செயல்படப் பார்க்கிறது பா.ஜ.க.

அதுதான், பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்கு எதிராக அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் கட்டுரை எழுத வைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்திலும் கை வலுவிழக்கும்!

தன் இயல்பான பலத்தைவிட அதிகமான இடங்களைப் பெற்று, கூட்டணியைத் தோற்கடிக்கும் வேலையை தமிழகத்தில் காங்கிரஸ் ஏற்கெனவே இரண்டு முறை செய்திருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வாங்கிய தொகுதிகள் 63. வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே ஜெயித்தது. இந்தக் கோபத்தில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸைக் கழற்றிவிட்டார் ஸ்டாலின். ஆனால், தி.மு.க., காங்கிரஸ் இரண்டுமே அந்தத் தேர்தலில் மண்ணைக் கவ்வின. மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் வந்து 41 தொகுதிகளை வாங்கியது காங்கிரஸ். அதில் எட்டு இடங்களில் மட்டுமே ஜெயித்தது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி ஒரே ஓர் இடத்தில் மட்டுமே தோற்றது. அது, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தேனி தொகுதி.

‘சின்னச் சின்னக் கட்சிகளையும் விட்டுவைக்காமல் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, காங்கிரஸுக்கான தொகுதிகளைக் குறைக்க வேண்டும்’ என தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. பீகாரில் கிடைத்த அடியால், காங்கிரஸின் கை பலவீனமடைந்துள்ளது.